வாழ்ந்த அதிகாலை

11:20 AM


பள்ளிக்காலத்து அதிகாலைகள் மறக்கமுடியாதவை. எட்டுமணிக்கு பாடசாலைதொடங்குமென்றால் ஐந்தரை,ஆறு மணிக்கெல்லாம் டியுசன் தொடங்கிவிடும். காலை ஐந்து மணியளவில் பம்பலப்பிட்டி வழியாக நடந்து வெள்ளவத்தைக்கு வருவேன். ஆமிக்காரர்களைத்தவிர யாருடைய நடமாட்டமும் இருக்காது. பம்பலப்பிட்டி வரும்வரை வீதியோரத்து பவளமல்லிகை மரங்கள் வாசம் வீசிக்கொண்டிருக்கும். சிவந்தகாம்போடு பல பவளமல்லிகள் தெருவில் உதிர்ந்திருக்கும். யாருமில்லாத வீதிகளில் நான் உரத்தகுரலில் பாடிக்கொண்டு போவேன். தெருவிளக்குகள் மஞ்சளாக பல்லிளிக்கும்.

சென்னையில் பெரும்பாலும் ஐந்தரைக்கே ஒளிபரவிவிடுகிறது. கொழும்பில்
ஆறுமணிவரை இருட்டுக்கு பஞ்சமே இல்லை. அநேகமாக பத்தாம் வகுப்பிலிருந்து காலைப்பயணம் தொடங்கியது. அப்போதெல்லாம் டிலுக்சனும்
வருவான்.அநேகமாக ஆனந்தன்சேரின் தமிழ்தேடிய பயணமாக இருந்தது.
பௌர்ணமிக்கு அடுத்தநாள் என்றால் நிலவொளியும் இருட்டும் நிரம்பி வழியும்.
நிலவு நிரம்பிய அந்த வேளையில் நடக்கும்போது, சத்தியமாய் பருத்தித்துறையில் நடப்பதாகவே ஒரு உணர்வு வந்து, மனம் நிறைக்கும்.


வெள்ளவத்தைக்கு போகவேணும் என்றால் காலிவீதியில் பேரூந்து பிடித்தும் போகலாம். பெரும்பாலும் நான் அதைத் தாண்டி இறங்கி பம்பலப்பிட்டியின் கடலோரமாகவே செல்வதுண்டு. கொழும்பின் கடற்கரை அந்திவேளையில் களியாட்டத்தோடே இருக்கிறது. அதிகாலையில் அதன் முகமே வேறு. அமைதியான ஒரு யோகியைப்போல கடல் இயங்கிக்கொண்டு இருக்கிறது. நீலமும் கறுப்பும் பின்னிப்பிணைந்த அந்த வானமும் கடலும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லும். கடற்காற்று வந்து சட்டையின் பொத்தான்களின் இடைவெளியூடாக உடல்தழுவும்.

கடலை ஒட்டிய தெருவில் சில "கன"வான்கள் நடைபயில்வார்கள். இயலுமானவரை நான் கடலோரத்தில் மெதுவாகவேநடப்பேன். வகுப்புக்கு போவதற்குக்கூட மனசிருக்காது. இப்படியே வாழ்க்கை முழுக்க நடந்து போய்க்கொண்டிருக்க மாட்டோமா என்றிருக்கும். எல்லாப் பயணங்களுக்காகவும், காலம் ஒரு முற்றுப் புள்ளியை வைத்திருக்கிறது.

வெள்ளவத்தைக்கடற்பகுதிக்கு வந்து சேரும் நேரத்தில், சிலவேளை வகுப்பு ஆரம்பித்து கால்மணிநேரம் கடந்திருக்கும்.அப்போதெல்லாம் வகுப்புக்கு இருக்கும் தெருவுக்குள் திரும்பாமல், தொடர்ந்து நடந்து கொண்டேபோவேன்.
ராமகிருஷ்ணமிஷன் வரமுதல் சற்றுமுன்னே அநேகமாக பிரஜீவை சந்திப்பேன்.
அதே இடத்தில் மாலைவேளைகளிலும் சந்தித்திருக்கிறோம் என்றாலும் நீலநிறமான காலை எழுதும் கவிதைக்கு தனிச்சுவை இருக்கிறது.

கரையில் கிடக்கும் பாறைகளில், அந்த நேரத்தில் அமர்ந்திருப்பது ஒரு தவம்.
நாங்கள் அமர்ந்திருக்கிறோம் ஆனந்தமாய் வெறுமனே கடலைப்பார்த்தபடி !
அதிகமாக பேச்சுவராது. அவன் தோளில் கை போட்டபடியிருந்த என்னிடம்
"மச்சான்! அங்க பார்!" என்றான்.கருப்புநண்டுகள் அலைகளைத்தாண்டி பாறைகளில் ஏறமுயற்சி்த்தன. பலதடவைகள் விழுந்தும் முயற்சியை விடவில்லை. பாறையில் மோதித்தெறிக்கும் அலை துண்டாய்ச்சிதறி துளிகளாகி மாயாஜாலம் காட்டியது.

பின்னாலிருக்கும் தண்டவாளத்தில் தடதடவென்று ரயில்பறக்கும் ஓசை அதிர்ந்தது. காற்றில் பின்தள்ளப்பட்ட தன் ஓலைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நின்ற தென்னைகள் சலசலகின்றன. அலைகளின் வீரியம்குறைந்து நுரை வந்து கால்கழுவியது. என் காலடிக்கு அடைக்கலம் தந்தமண், அலைகளால் பறிக்கப்பட்டு, எனக்கான குழி உருவாக்கப்பட்டது. அடுத்த அலையில் குழி காணாமல்போனது. எந்த எண்ணங்களும் எழும்பாமல், எந்த இலக்கும் இல்லாமல் நான் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிரஜீவ் சிட்னியிலும், டிலுக்சன் மெல்பேர்னிலும், நான் பெங்களூரிலுமாக சிதறிப்போனாலும், பழசுகளை நினைக்கும் போது, இப்பொழுதும் நுரைவந்து கால்கழுவுகிறது. தென்னைகள் சலசலக்கின்றன. இன்றைக்கும் நண்டுகள் பாறையில் ஏறமுயன்று கொண்டிருக்கலாம். இழந்தவைகள் ஈடுசெய்யமுடியாதவை என்ற போதும், சாகும்வரை நெஞ்சோடு வாழும்.

ஆதித்தன்,
25-12-2008.

20 comments:

Nimal சொன்னது…

//யாருமில்லாத வீதிகளில் நான் உரத்தகுரலில் பாடிக்கொண்டு போவேன். தெருவிளக்குகள் மஞ்சளாக பல்லிளிக்கும்.//

தெரு நாய்கள் பயத்தால் மிரண்டோடும்...!

//இழந்தவைகள் ஈடுசெய்யமுடியாதவை என்ற போதும், சாகும்வரை நெஞ்சோடு வாழும்.//

!!!

A N A N T H E N சொன்னது…

:)

ஆதித்தன் சொன்னது…

பயந்தோடவில்லை! போட்டிக்கு வந்துவிட்டன. :-D

பெயரில்லா சொன்னது…

//இழந்தவைகள் ஈடுசெய்யமுடியாதவை என்ற போதும், சாகும்வரை நெஞ்சோடு வாழும்.//
நிஜம் தான்

பெயரில்லா சொன்னது…

கருத்துரை இடும்போது
\\Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.\\
இப்படி வருகிறது
அதனை எடுத்து விட்ட்லால் இலகுவாக கருத்துரைகள் இடலாம்

ஆதித்தன் சொன்னது…

மிக்க நன்றி கவின்! எனக்கு கணணித்தொழில்நுட்ப அறிவு/உதவி அளிக்கும் எட்டாம் வள்ளல் மேலே
தெருநாய்களுக்கிரங்கிய நிமல் தான்.
மீண்டும் அவரை சந்திக்கும் போது
கட்டாயம் இந்த பிரச்சனையை தீர்க்கமுயல்கிறேன்.

தமிழ் மதுரம் சொன்னது…

ஆதித்தன் நல்லா எழுதுறீங்கள்??? டிலுக்சன் என்பது இசையமைப்பாளர் தானே???? அப்போ அந்த ஏக்கம் பாட்டின் பாடலாசிரியர் வி...ஆதித்தன் நீங்கள் தானே???? ம்..... என்னிடம் டிலுக்சனின் ஒலிப் பேட்டி இருக்கிறது.. அதனை வெகு விரைவில் என் பதிவில் இணைப்பேன்.... தொடருங்கள்..

http://melbkamal.blogspot.com/2008/12/blog-post_06.html

இது டிலுக்சனின் ஒரு பாடல் பற்றிய அறிமுகம்

ஆதித்தன் சொன்னது…

நன்றி கமல்! ஆமாம்!என் நண்பர் டிலுக்சன் இராஜேந்திரன் ஈழத்தின் இசையமைப்பாளர்தான். அவருடைய சில தமிழ்ப்படல்களுக்கு வரி எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. "ஏக்கமும்"அவற்றில் ஒன்று.

தமிழ் மதுரம் சொன்னது…

மெல்போர்ன் கமல் said...
ஆதித்தன் said...
காந்தம் இழுக்கையில் தகரத்துண்டு வராமக் கிடக்குமா?
அடிக்கடி பதிவுலகில் சந்திப்பம்.//

ஆதித்தன் இது என்னவோ சிலேடை மாதிரி இருக்கு...என்ன இதில ஏதும் கவி வித்தகத்தை நீர் காட்டேல்லையே????

ஆதித்தன் சொன்னது…

இல்லை இல்லை! :-D

A N A N T H E N சொன்னது…

கவிதையான வர்ணனை, இயற்கையைப் பற்றி. பள்ளி பருவத்திலேயே இப்படி கவிதையாய், பக்குவப்பட்டு வர்ணிக்க முடிந்ததா? இறுதிப் பத்தியில் உங்கள் ஏக்கம், நெஞ்சைக் கிழிக்கிறது.

ஆதித்தன் சொன்னது…

நன்றி அனந்தன்.
பக்குவம் எல்லாம் ஒன்றுமில்லை. வெயிலில்தானே நிழலின் அருமை தெரிகிறது.
அது என்னுடைய ஏக்கம் மட்டுமல்ல,
புலம்பெயர்ந்த தமிழர்களுடையதும்!

பெயரில்லா சொன்னது…

நண்டுகள் மட்டுமல்ல, நீங்கள் அனுபவித்த சகலமும் எந்த மாற்றங்களுமின்றி வழமைபோலவே இயங்கும்,உங்கள் இடத்தை இப்போது இன்னொருவன் நிரப்பிக்கொண்டிருப்பான், ஆம்..
நீங்கள் இல்லாத இனி வரும் நாட்களிலும் பூ மலரும்,நிலவுவானத்தில் விளக்கேற்றும்,தென்றல் மேனியைத்தொட்டுத்தாலாட்டும், ஆனால் அதில் இனிமை இருக்காது,
காலச்சருகுகள் சொரிந்து துயரச்சுவடுகளை அழித்து விடலாம், இனி வரும் நாட்களில் உங்கள் நினைவுகள் எமக்கு எழாமலே போகலாம், போகும். ஆனால் அதில் அர்த்தம் இருக்காது,........திருக்குமரன்.

ஆதித்தன் சொன்னது…

நன்றி திரு அண்ணை! நீங்கள் சொல்லுவதுதான் உண்மை என்றுபடுகிறது. காலம் நம்முடைய காயங்களுக்கு மருந்து தடவுமா? அது தடவினாலும் எங்கள் காயம் ஆறுமா?

இரா பிரஜீவ் சொன்னது…

கடந்து வந்த பாதைகள்; அந்த நேரத்தில் கிடைத்த இன்பத்தை விட அதை எண்ணிப்பார்க்கையில் வரும் இன்பமே மிகையானது.... வெள்ளவத்தை அலைகள் கழுவிச்சென்ற நினைவுகள் ஆயிரம் ஆயிரம்... அந்த அறியாத பருவத்தில் அறிய முற்பட்ட / அறிந்துகொண்ட விடயங்களை சிந்தித்திடும் நேரத்தில் எப்போதும் கண்கள் பனித்திடும்.

தமிழ் மதுரம் சொன்னது…

ஆதித்தன் என்ன கன நாளாகக் காண முடியவில்லை/??/ நான் ''பாய்கின்ற அலையே எம்மவர் நிலையை..... என்றொரு பாடல் அறிமுகப்படுதிதி உள்ளேன்... நேரமிருந்தால் கேட்டுப் பாருங்கோ... என்ன பருத்தித் துறைக்கே வடையா என்று யோசிக்கிறீங்க தானே.... ??????

ஆதித்தன் சொன்னது…

அன்புள்ள பிரஜீவ்,
//அந்த நேரத்தில் கிடைத்த இன்பத்தை விட அதை எண்ணிப்பார்க்கையில் வரும் இன்பமே மிகையானது//
எண்டு நீ சொல்லுறதும் சரிதான்! ஆனா
ஏக்கம் தாற சோகமும் அளவில குறைஞ்சதில்லை.

ஆதித்தன் சொன்னது…

மெல்போர்ன் கமல்! என் பாடலை உங்கள் பதிவில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

பருத்தித்துறை வடையை ஞாபகப்படுத்தியமைக்கு பெரும் நன்றி!
:-D

பெயரில்லா சொன்னது…

ஆதித்தன்... உங்களது நினைவுகளின் தடங்கள், மீள் பார்வைகள் நெஞ்சைக் கனக்கச் செய்கின்றன.. என்ன ஒரு கொடுமையான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது.. எத்தனை ஆதித்தன்கள் இது போன்று ஒரு வித மனச்சுமையில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மனது வருந்துகிறது.

இழந்தைவைகள் இழந்தைவை தானோ என என்னும் போது ஒருவித இயலாமை வருத்தம் மேலோங்குகிறது.

விரைவில் அமைதி திரும்பி, அங்கே ஆனந்தம் நிலவ வேண்டும் என்பது தான் எனது ஆவல்.

உமது கட்டுரைகளைப் படிக்கும் போது நினைத்துக் கொள்வேன் நீர் நிச்சயம் ஒரு கவிஞராகவோ, எழுத்தாளராகவோ தான் இருக்க வேண்டுமென்று... உண்மை அறிந்தேன் இன்று..

வாழ்த்துகள். இந்த இனிய புத்தாண்டு எல்லோருக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் தருவதாக!

என்றும் அன்புடன்
ரமணன்

ஆதித்தன் சொன்னது…

அன்புள்ள ரமணன்,

கவிஞனாகத்தனிருந்தேன். பதிவுலகம் கட்டுரையாளனாக மாற்றிவிட்டது.:-D

//என்ன ஒரு கொடுமையான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது.. எத்தனை ஆதித்தன்கள் இது போன்று ஒரு வித மனச்சுமையில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மனது வருந்துகிறது.//
எங்களுக்காக மனமிரங்கிக் கண்ணீர் விடுகின்ற தாய்த்தமிழ்நாட்டை செத்தாலும் மறக்க மாட்டோம் ஐயா!
உங்களுக்கு என்றைக்கும் கடன்பட்டுப்போனோம்!

உங்களுடன் தொடர்பு ஏற்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!
உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருப்பின் அதை தருவீர்களா?
உங்கள் "மகாயோகி அரவிந்தர்" நூலில் அது தரப்படவில்லை.

கருத்துரையிடுக