பெருங்கோயிற் பயணம்

6:04 PM


நானும் நிமலபிரகாசனும் திடீரென்று நிச்சயித்த பயணம் அது! பெங்களூர்த்தரிப்பிடத்தில் எட்டுமணி போல வந்துசேர்ந்தோம். வண்டிக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது.நிமல் சென்னையில் ஒரு மடிக்கணணி வாங்கியிருந்தான். ஒரு காவல் அதிகாரி மடிக்கணணியை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
அவர் திருமுகம், விஜயகாந்த் மாதிரி இருந்ததா இல்லை அர்ஜுன் மாதிரி இருந்ததா என்பது இருட்டில் சரியாக தெரியவில்லை.

தமிழ்நாட்டு சொகுசுப்பேரூந்து வழமை போல் தாமதமாக வந்து, இனமானம் காத்தது. பேரூந்தில் இரவு வல்லவனுக்கு வல்லவன் படம் போட்டார்கள். தொடங்கிக் கொஞ்சநேரத்திலேயே ரஜினிகாந்த் நிமலுக்கு தூக்கமாத்திரைகொடுத்துவிட்டார். ராதிகா ரஜினிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கையில்தான் எனக்கு கொட்டாவியே வந்தது.

கண்விழித்த போது மலைக்கோட்டைதெரிந்தது. திருச்சிக்குள் நுளைந்து தஞ்சையை நோக்கி விரைந்தது பேரூந்து.கசிந்துவரும் காவிரிக்கே இந்தப் பசுமை என்றால், காவேரி நிரம்பிவந்த காலங்களில் தஞ்சை எப்படி இருந்திருக்கும்?
சங்ககாலத்தில் கட்டப்பட்டதைப் போன்ற ஒருவிடுதியில் பைகளைவைத்து குளித்துவிட்டு, தஞ்சைபெரிய கோயிலுக்கு நடந்தோம். நாம் எங்கே இருக்கிறோம் கோயில் எங்கே இருக்கிறதென்று கூடதெரியாது.வழிவிசாரித்து போய் சேர்வதில் என்னவோ ஒரு சுவாரசியசொர்க்கமே இருந்தது.

என்னவென்று சொல்ல? அந்தக்கோபுரத்தைக் கண்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சிவெள்ளம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது. நிச்சயமாக முழுவதுமான பக்தியின்பாற் பட்டதல்ல! பத்துவருடங்களுக்குபின் 2002ல் சமாதானம் வந்தபோது ஊருக்குப்போனபோது உள்ளெழுந்த அதே உணர்ச்சி!

வாளை உருவலாம் என்றுதான் பார்த்தோம்! அதற்கு வழியில்லாததால் புகைப்படக்கருவியை உருவிக்கொண்டு கோயிற்பிரவேசம் செய்தோம்.

2010ம் ஆண்டோடு தஞ்சைப்பெரிய கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிவடையப்போகின்றன. தமிழர்களின் கட்டிடக்கலையின் எழுச்சியை இன்றும் நிரூபித்திக்கொண்டிருக்கும் கருங்கல்காவியம். உலகில் எங்கிருந்து எண்ணினாலும் தமிழனாய்ப் பிறந்த பெருமையுணர்ச்சி உந்திவரத் தலைநிமிரச்செய்யும் தீப்பிளம்பு!

நந்திமண்டபத்தை மட்டும் பிற்கால நாயக்கமன்னர்கள் கட்டினார்கள் என்றும்,
நந்தியோடு சேர்த்து முழுமண்டபமும் நாயக்கர் காலத்தது என்றும் இருவேறுபட்ட கருத்துக்கள் உலாவுகின்றன. நந்தியை வணங்கிவிட்டு
கோயிலுக்குள் அடிவைத்தோம். எங்குபார்த்தாலும் சிற்பநுணுக்கங்கள்!
கால்வைக்கும் படியில்கூட கலைவழிகிறது. "பெருவுடையார்" என்று சொல்லப்படும் மகாலிங்கத்தின் அழகும் பிரம்மாண்டமும் மனத்தை ஈர்க்கின்றன.
தமிழ்நாட்டு அறநிலைத்துறையிடமில்லாமல், இந்தியத் தொல்லியல்துறையின்
பொறுப்பின் இருப்பதால், கோயில் கோயிலாக இருக்கிறது.

தன் இலட்சியங்களை அருள்மொழிவர்மன் எப்போதும் பெரிதாகவே வைத்துக்கொண்டான். கம்பன் சொல்லுகின்ற "சிறியன சிந்தியாதான்" என்ற
சொற்றொடர் அருள்மொழிக்கே நன்றாய்ப்பொருந்துகிறது. தன் உயர்ந்த இலட்சியங்களால்தான் அவன் வரலாற்றில் இன்றைக்கும் ராஜராஜசோழனாக ஒளிவீசி, எங்கள் நெஞ்சுக்குள் வாழ்கின்றான். அவனுடைய உயர்ந்த இலட்சியங்களில் ஒளிர்ந்த இலட்சியமாக தஞ்சைப்பெருங்கோயில் மிளிர்கிறது.

தமிழர் சிற்பக்கலையின் முழுப்பெரும்வெளிப்பாடான இக்கோயில், ராஜராஜேசுவரம், பெருவுடையார்கோயில், தட்சிணமேரு என்று பலபெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. தமிழர்தம் பெருமையைப்போல
உயர்ந்தோங்கி நிற்கின்ற விமானம், சிற்பசௌந்தர்யங்களைக் காட்டி உள்ளம் கவர்கள்வனாகிறது. விமானத்தைக்கட்டியபின் லிங்கத்தை உள்ளே கொண்டுபோக முடியாதாகையால், லிங்கத்தை உள்ளேவைத்து பின்பே விமானத்தைக்கட்டினார்கள். லிங்கப்பிரதிட்டையின்போது ஏதோ சிக்கல் ஏற்பட்டதாகவும், ராஜராஜசோழரின் குருவான கருவூர்ச்சித்தர் நேரில்வந்து இடையூறுநீக்கி பிரதிட்டை பண்ணினார் என்றும் அறியமுடிகிறது. கோயிலில்
கருவூர்த்தேவரும் ராஜராஜரும் அருகருகே நிற்கும் ஓவியம், ஆயிரமாண்டு கடப்பினும் தமிழோவியக்கலையின் சிறப்பைக் காட்டி நிற்கிறது.

ராஜராஜ சோழனுக்குப் பிறகு, இந்தக்கோயில் பல இடிபாடுகளையும், பல புனரமைப்புக்களையும் கண்டது. கோயிலில் குடிகொண்ட தேவிக்கு தனிச்சன்னதி அமைத்தபெருமை சுந்தரபாண்டியனைச்சாரும். தேவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

நாயக்கமன்னர்கள் சிற்ப அழகு பொலிந்துததும்பும் வண்ணம் வடமேற்கிலே, முருகப்பெருமானுக்கு கற்சன்னதி அமைத்திருக்கிறார்கள். அதன் சிற்பநுணுக்கங்கங்ககளின் அழகு சொல்லிமாளாது. அந்தக் குமரனை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.



மராத்தியமன்னர்கள் பிள்ளையாருக்கு சன்னதி எடுப்பித்திருக்கிறார்கள்.

தொல்லியல்துறை கோயிலின் பண்டையநிலைபற்றியும், இன்றையநிலைபற்றியும் கருத்துவிளக்கப்படங்களோடு கண்காட்சி வைத்திருக்கிறார்கள். அவர்களும் சில ஆங்கிலேயர்களும் கோயிலுக்கு செய்த பணிகளை நினைத்தால் கையெடுத்துக்கும்பிடவேணும் போலிருக்கிறது.
கண்காட்சிப்பொறுப்பாளரிடம் சோழரின் அடுத்த சிற்பக்களஞ்சியங்களான
"கங்கை கொண்ட சோழபுரம்", "தாராசுரம்" போகும் வழியை கேட்டறிந்தோம். (வேறொரு பதிவில் அவைபற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.)

பலதோழர்கள் உயர்ந்த விமானத்தை கோபுரம் என்கிறார்கள். கோபுரம் என்பது கோயிலின் நுழைவாயில். விமானம் என்பது மூலவருக்கு மேல் அமைந்திருக்கும்.விமானத்தின் உச்சியில் உள்ள உருண்டையானபாகம் தனிக்கல்லால் ஆனது.கிறேன்களும் தொழில்நுட்பவசதிகளும் அற்ற அக்காலத்தில், பல கிலோமீற்றர் தூரத்துக்கு "சாரம்" எனப்படும் மரச்சாய்தளத்தை அமைத்து, நிலத்துக்கும் விமானத்துக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தி, யானைகளின் மூலம் கல்லை அவ்வளவு உயரத்துக்கு கொணர்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!

அளவிறந்த பெருமையுடனும், பூரிப்புடனும் ஒருவழியாக நானும் நிமலும் வெளியேறினோம். பெருவுடையாரின் எல்லையற்ற கருணையால் எங்கள் செருப்புகள் எங்களுக்கே கிடைத்தன. ஒரு ஆச்சி இட்டிலி விற்றுக்கொண்டிருந்தார். வாங்கி தெருவோரத்தில் அமர்ந்து, பெருங்கோயிலைப் பார்த்தவண்ணம் விழுங்கல்படலத்தை ஆரம்பித்தோம். ஆகா! இப்பிடி ஒரு இட்டிலியை இந்தப்பிறப்பில் சாப்பிட்டதில்லை. இரண்டு இட்டிலிக்கு நாலுவகை சட்டினி. இட்டிலியின் அருஞ்சுவையை இன்னதென்று சொல்லுதற்கு ஆயிரம் நாக்கு தேவை. அடுத்தமுறை தஞ்சைக்குப்போனால் ஆச்சியிடம் இட்டிலி ஒருபிடி பிடிக்கவேணும். யாருக்குத்தெரியும்? அந்தநேரம், எங்களுக்கு இட்டிலி போட்ட புண்ணியத்தால் ஆச்சி, சொர்க்கத்தில் ராஜராஜசோழனுக்கு இட்டிலி விற்றுக்கொண்டிருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுகின்றன.

ஆதித்தன்
31-12-2008

வாழ்ந்த அதிகாலை

11:20 AM


பள்ளிக்காலத்து அதிகாலைகள் மறக்கமுடியாதவை. எட்டுமணிக்கு பாடசாலைதொடங்குமென்றால் ஐந்தரை,ஆறு மணிக்கெல்லாம் டியுசன் தொடங்கிவிடும். காலை ஐந்து மணியளவில் பம்பலப்பிட்டி வழியாக நடந்து வெள்ளவத்தைக்கு வருவேன். ஆமிக்காரர்களைத்தவிர யாருடைய நடமாட்டமும் இருக்காது. பம்பலப்பிட்டி வரும்வரை வீதியோரத்து பவளமல்லிகை மரங்கள் வாசம் வீசிக்கொண்டிருக்கும். சிவந்தகாம்போடு பல பவளமல்லிகள் தெருவில் உதிர்ந்திருக்கும். யாருமில்லாத வீதிகளில் நான் உரத்தகுரலில் பாடிக்கொண்டு போவேன். தெருவிளக்குகள் மஞ்சளாக பல்லிளிக்கும்.

சென்னையில் பெரும்பாலும் ஐந்தரைக்கே ஒளிபரவிவிடுகிறது. கொழும்பில்
ஆறுமணிவரை இருட்டுக்கு பஞ்சமே இல்லை. அநேகமாக பத்தாம் வகுப்பிலிருந்து காலைப்பயணம் தொடங்கியது. அப்போதெல்லாம் டிலுக்சனும்
வருவான்.அநேகமாக ஆனந்தன்சேரின் தமிழ்தேடிய பயணமாக இருந்தது.
பௌர்ணமிக்கு அடுத்தநாள் என்றால் நிலவொளியும் இருட்டும் நிரம்பி வழியும்.
நிலவு நிரம்பிய அந்த வேளையில் நடக்கும்போது, சத்தியமாய் பருத்தித்துறையில் நடப்பதாகவே ஒரு உணர்வு வந்து, மனம் நிறைக்கும்.


வெள்ளவத்தைக்கு போகவேணும் என்றால் காலிவீதியில் பேரூந்து பிடித்தும் போகலாம். பெரும்பாலும் நான் அதைத் தாண்டி இறங்கி பம்பலப்பிட்டியின் கடலோரமாகவே செல்வதுண்டு. கொழும்பின் கடற்கரை அந்திவேளையில் களியாட்டத்தோடே இருக்கிறது. அதிகாலையில் அதன் முகமே வேறு. அமைதியான ஒரு யோகியைப்போல கடல் இயங்கிக்கொண்டு இருக்கிறது. நீலமும் கறுப்பும் பின்னிப்பிணைந்த அந்த வானமும் கடலும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லும். கடற்காற்று வந்து சட்டையின் பொத்தான்களின் இடைவெளியூடாக உடல்தழுவும்.

கடலை ஒட்டிய தெருவில் சில "கன"வான்கள் நடைபயில்வார்கள். இயலுமானவரை நான் கடலோரத்தில் மெதுவாகவேநடப்பேன். வகுப்புக்கு போவதற்குக்கூட மனசிருக்காது. இப்படியே வாழ்க்கை முழுக்க நடந்து போய்க்கொண்டிருக்க மாட்டோமா என்றிருக்கும். எல்லாப் பயணங்களுக்காகவும், காலம் ஒரு முற்றுப் புள்ளியை வைத்திருக்கிறது.

வெள்ளவத்தைக்கடற்பகுதிக்கு வந்து சேரும் நேரத்தில், சிலவேளை வகுப்பு ஆரம்பித்து கால்மணிநேரம் கடந்திருக்கும்.அப்போதெல்லாம் வகுப்புக்கு இருக்கும் தெருவுக்குள் திரும்பாமல், தொடர்ந்து நடந்து கொண்டேபோவேன்.
ராமகிருஷ்ணமிஷன் வரமுதல் சற்றுமுன்னே அநேகமாக பிரஜீவை சந்திப்பேன்.
அதே இடத்தில் மாலைவேளைகளிலும் சந்தித்திருக்கிறோம் என்றாலும் நீலநிறமான காலை எழுதும் கவிதைக்கு தனிச்சுவை இருக்கிறது.

கரையில் கிடக்கும் பாறைகளில், அந்த நேரத்தில் அமர்ந்திருப்பது ஒரு தவம்.
நாங்கள் அமர்ந்திருக்கிறோம் ஆனந்தமாய் வெறுமனே கடலைப்பார்த்தபடி !
அதிகமாக பேச்சுவராது. அவன் தோளில் கை போட்டபடியிருந்த என்னிடம்
"மச்சான்! அங்க பார்!" என்றான்.கருப்புநண்டுகள் அலைகளைத்தாண்டி பாறைகளில் ஏறமுயற்சி்த்தன. பலதடவைகள் விழுந்தும் முயற்சியை விடவில்லை. பாறையில் மோதித்தெறிக்கும் அலை துண்டாய்ச்சிதறி துளிகளாகி மாயாஜாலம் காட்டியது.

பின்னாலிருக்கும் தண்டவாளத்தில் தடதடவென்று ரயில்பறக்கும் ஓசை அதிர்ந்தது. காற்றில் பின்தள்ளப்பட்ட தன் ஓலைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நின்ற தென்னைகள் சலசலகின்றன. அலைகளின் வீரியம்குறைந்து நுரை வந்து கால்கழுவியது. என் காலடிக்கு அடைக்கலம் தந்தமண், அலைகளால் பறிக்கப்பட்டு, எனக்கான குழி உருவாக்கப்பட்டது. அடுத்த அலையில் குழி காணாமல்போனது. எந்த எண்ணங்களும் எழும்பாமல், எந்த இலக்கும் இல்லாமல் நான் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிரஜீவ் சிட்னியிலும், டிலுக்சன் மெல்பேர்னிலும், நான் பெங்களூரிலுமாக சிதறிப்போனாலும், பழசுகளை நினைக்கும் போது, இப்பொழுதும் நுரைவந்து கால்கழுவுகிறது. தென்னைகள் சலசலக்கின்றன. இன்றைக்கும் நண்டுகள் பாறையில் ஏறமுயன்று கொண்டிருக்கலாம். இழந்தவைகள் ஈடுசெய்யமுடியாதவை என்ற போதும், சாகும்வரை நெஞ்சோடு வாழும்.

ஆதித்தன்,
25-12-2008.

நூலின்றி அமையாதென் வாழ்வு - 2

5:40 PM



"ஜனவரி மாதம் நான்காம் திகதி நான் அங்கு வருவதாயிருந்தேன். ஆனால் நான் வர முடியவில்லை. ஏனென்றால் அந்த விஷயத்தில் எனக்கு ஒரு செயலும் இல்லை. ஆண்டவன் என்னை எங்கே போகச் சொல்லுகிறானோ, அங்கே நான் போக வேண்டியதாய் இருக்கிறது. இப்போது நான் சொந்த வேலையாகப் போகவில்லை. அவனுக்காகவே போனேன். என் மனத்தின் நிலமை முற்றிலும் மாறிவிட்டது. அதனை இந்தக் கடிதத்தில் விவரிக்க நான் விரும்பவில்லை. நீ இங்கே வந்தால் நான் சொல்ல நினைப்பதைச் சொல்லுகிறேன். இப்போதைக்கு நான் சொல்லக்கூடியது என்னவென்றால் எனக்கு இனிமேல் சொந்தச் சுதந்திரம் இல்லை என்பதாகும். ஆண்டவன் போகச்சொல்லுகிற இடத்துக்கு நான் பொம்மை போல போவேன். அவர் செய்யச்சொல்வதை பொம்மை போல செய்வேன்."

அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வருவதற்கு சிலகாலங்களுக்கு முன்பு, பரோடாவில் இருந்து மேற்சொன்ன கடிதத்தை தன் மனைவிக்கு எழுதினார்.

மகாயோகி அரவிந்தரின் வாழ்வை விகடன் பிரசுரம் வாயிலாக,
எழுத்தாளர் பா.சு.ரமணன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அரவிந்தரின் வாழ்வு பலபருவங்களை உடையதாயிருக்கிறது. இந்தியக்கலாசாரத்தின் சுவடுகூட தன் பிள்ளைகள்மேல் படக்கூடாதென்று தந்தையால் இங்கிலாந்துக்கு அநுப்பப்பட்டார் அரவிந்தர். காலம் அவரை ஆழமான தேச பக்தராக்கியது.
இந்தியா திரும்பிய அரவிந்தர் தேசவிடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மிதவாதம் விடுதலைக்கு உதவாதென்று தீவிரவாதத்தையே அவர் ஆதரித்தார். ஒற்றர்களால் தொடரப்பட்டார்.
கைது செய்யப்பட்டார். அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் அரவிந்தர் அநுபவித்த கொடுமைகள் பல.
வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் வசதிகளே அற்ற அந்தக் கொடிய சிறைச்சாலையில்தான் முன்பு தான் பயின்ற யோகக்கலையை பயிற்சி செய்து பார்க்கத்தொடங்கினார். அவரின் மலம் அவர் அருகிலேயே கிடக்கும். தினம் இரண்டு வேளைகள் தான் அது அகற்றப்படும். குளிக்கவும் குடிக்கவும் ஒரேஒரு குவளைதான். கோடையில் வெம்மை தகிக்கும். மழைக்காலத்தில் சிறை அறைக்குள்ளேயே நீர் நிரம்பும். அவ்வளவையும் சகித்துக்கொண்டு தன் யோகப்பயிற்சிகளையும் தொடர்ந்தார் அரவிந்தர்.

வேதாந்த சாத்திரங்களில் ஆழ்கின்ற வாய்ப்பும் நேரமும் அவருக்கு அங்கே கிட்டியது. சிறைவாழ்வு அவரைப் புடம்போட்டது. அவர் செய்ய வேண்டிய பணி வேறென்று உள்ளது என்று அங்கேதான் இறைவனால் தாம் உணர்த்தப்பட்டதாக
அவர் குறிப்பிட்டார்.

இன்று மார்கழி பிறந்திருக்கிறது. காலைநேரத்தை கைக்குள் வைத்திருக்கும் மூடுபனியாக அரவிந்தரை என் கைக்குள்ளேயே வைத்திருக்கிறேன். சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்தர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்கின்ற அபாயத்தால் அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரி நோக்கி கிளம்பினார். வங்கத்திலிருந்து பாண்டிச்சேரி வழியாக கொழும்பு செல்லும் கப்பலில் ஏறி சித்திரை நான்காம் திகதி, தம் இலக்கை வந்தடைந்தார். பாரதியார், மற்றும் பலர் அவருடைய வருகையினால் மகிழ்ந்தனர்.

அரவிந்தரின் கடுமையான யோகப்பயிற்சியின் மூலமாக சில சக்திகள் அவருக்கு வாய்த்திருந்தன.பாண்டிச்சேரியில் இருந்த ஆரம்பகாலங்களில் அவர் தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆவிகளை அழைத்து உரையாடியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. ஆனால் இவையெல்லாம் சிறிதும் பயனற்ற முயற்சிகள் என்று அறவே தவிர்த்து விட்டார்.

அந்த ஆரம்ப காலங்களில் உணவுக்கும் பணத்துக்கும் அரவிந்தர் மிகுந்த சிரமப்பட்டிருக்கின்றார். சில நாட்கள் வெறும் சோற்றோடு மிளகாய்ப்பொடி இட்டு பிசைந்து மற்றவர்களுக்கும் கொடுத்து தானும் உண்டிருக்கிறார். அவர் உண்ணும் அளவு மிகச்சொற்பமே! பெரும்பாலான நேரங்களில் யோக சாதனைகளிலேயே மூழ்கியிருந்தார். அளவற்ற யோகப்பயிற்சியின் விளைவாக அவரது முகத்தில் தனிப்பிரகாசம் சுடர் விட்டது என்று அவரோடு கூட இருந்தவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.

இந்தநூலில் அவருடைய யோகசாதனைகளைப்பற்றி விரிவாக ஒன்றுமே எழுதப்படாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. பசியோடு இருந்தவனுக்கு கொடுக்கப்பட்ட சிறிதளவு உணவு, அவனுடைய பசியை தூண்டிவிடுவது போல், மீண்டும் பாண்டிச்சேரி போய் அவரின் யோகசாதனை பற்றிய விபரங்கள் அறிய வேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது.

பிரெஞ்சுப்பிரஜையான அன்னை மிரா அரவிந்தரிடம் சிஷ்யையாகி, அவரின் யோக வழிகாட்டலில் பூரணநிலையை அடைந்தார். பாண்டிச்சேரிக்கு அருகின் "அரோவில்"என்ற ஒரு நகரத்தையே கட்டுவித்தார்.

அரவிந்தரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாபாரதத்தில் வரும் பீஷ்மரை மனம் ஞாபகப்படுத்துகிறது. அவரது பிரகாசமான முகம், மௌனமான கம்பீரம் எல்லாம் நெஞ்சிலிருந்து அகலமுடியாதவை. அவர் தம்மை முழுமையாக இறையருளிடம் ஒப்படைத்து விட்டு வாழ்ந்த மகாஞானி.

இரண்டு வருடங்களுக்கு முன் இதே மார்கழியில் நான் பாண்டிச்சேரிக்குப் போனேன். அப்போது அவ்வளவாக அவரைப்பற்றி எனக்கு தெரியாது. தெரியாது என்று சொல்ல்வதை கொஞ்சம் நேர்மையாகச் சொன்னால், அவரைப்பற்றிய அக்கறை என்னிடம் இருக்கவில்லை. போனநேரம் தவறாகப் போய்விட்டது. அரவிந்தர் ஆசிரமம் பூட்டப்படும் நேரம்! எல்லோரையும் அன்பாக விரட்டிக்கொண்டிருந்தார்கள். மலர் நிறைந்த அவரது சமாதியில் என் நெற்றி வைத்து வணங்கினேன். சிறிது குளிர்ந்தது.அவ்வளவுதான். எத்தனையோ வெள்ளைக்காரர்கள்/காரிகள் அங்கே அசைவற்று தியானத்திலிருந்தார்கள்.
அருகிலிருந்து தியானம் செய்ய முயன்றேன். மனம் தன் எண்ணச்சிதறல்களையே தொடர்ந்தும் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.
வந்துவிட்டேன்.

இறைவனுடைய கருணைமழை எங்கும் எப்போதும் பெய்துகொண்டு தானிருக்கிறது. அவரவர் பாத்திரத்தின் அளவிற்கேற்ப, நீர் நிரம்புகிறது. அன்றைய தினத்தை விட இன்றைக்கு என் பாத்திரம் கொஞ்சம் பெரிதாக மாறியிருக்கலாம். யார் அறிவார் அந்த ரகசியத்தை?

ஆதித்தன்.
16-12-2008

பூக்களை கல்சுமக்கச் சொல்லாதீர்கள்!

10:01 AM


சலனமற்று வெறுமையாய்க் கடக்கிறது காலம். எல்லா மனிதர்களுடைய பாதங்களும் அடுத்த அடியை விரைந்து வைக்கவே முற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதங்களை நசித்து வலிதந்தாவது தம்முடைய இலக்கை
அடைதல் வேண்டுமென்ற சுயநலமனம் அந்தப்பாதங்களை விரைவுபடுத்துகிறது.

அரக்கப்பரக்க ஓடும் நம் நகரங்களின் பாதங்கள் சில பிஞ்சுகளை மிதித்து நசுக்கியவாறு தன் பயணங்களைத் தொடர்கின்றன. இன்னமும் பால்மணம் மாறாத சிரிப்புடன் மழலைக் குரலுடன் ஆறுவயதுக் குழந்தை பெங்களூர் மத்தியபேரூந்து தரிப்பிடத்தில் கஞ்சா விற்கிறது. அவன் மழலைக்குரலும் வஞ்சனையற்ற சிரிப்பும் பலநாட்களுக்கு கண்முன்னின்று அகலவில்லை.
உலகம் எதனையும் கண்டு கொள்ள்வதில்லை.

இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் கணம் தவறாமல்
அரங்கேறியவாறே இருக்கின்றன. நகரங்களின் இருண்ட முகங்களில் வாழும் சகோதரர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் கைக்குழந்தைகளாக இருக்கும் போதே, தொழில் அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. கைக்குழந்தையோடு பிச்சை கேட்கின்ற சகோதரிகளின் கண்களை பலதடவை உற்றுநோக்கியிருக்கின்றேன். திருட்டுத்தனத்தை அவர்கள் கண்களில் காட்டுவதில்லை. யார் குழந்தையோ? பாவம்!

சிறிது வளர்ந்ததும் ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற வேலைகள் அவர்களுக்கு சொல்லித்தரப்படுகின்றன. பிச்சை எடுக்கவும், "பின்பணப்பை"யை திருடவும்
அகப்பட்டால் அழுதுபுரளவும் இன்னும் பல சமூகவிரோத செயல்கள் செய்யவும்
பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகள் அவர்களுக்கு பாடம் எடுக்கின்றன.

பல சிறுவர்கள் கடைகளிலும் உணவகங்களிலும் வேலைசெய்கிறார்கள்.
நான் இரவு உணவுண்ணும் ஒரு கன்னட உணவகத்தில் சாம்பார் என்று சொல்லி
ஒரு சிறுவன் இனிப்புக்கஞ்சி ஊற்றுகிறான். தலைபரட்டையடித்து கலைந்து கிடக்கிறது. பலநாட்களாக துவைக்காத சட்டை. கனிவு மாறாத அந்தக் குழந்தையின் கையில் சூடுவைத்த தழும்புகள்! நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும் மறைத்துக்கொண்டான். போய்விட்டான்.

தனியார்களுக்குத்தான் நெஞ்சம் அழுகிப்போய் விட்டதென்று கூறமுடியாது.
அரச நிறுவனங்களும் போட்டிக்கு நிற்கின்றன. மேலே நான் இட்ட புகைப்படம்
பெங்களூரின் மெஜஸ்டிக் பேரூந்து நிலையத்தில் உள்ள, "நந்தினி" பால் சார் உணவுப்பொருள் கடையில் எடுக்கப்பட்டது. நந்தினி நிறுவனம் கர்நாடக அரசின்
கீழ், லாபத்தில் இயங்கும் பிரபல்யமான நிறுவனம்.

அரைசம்பளம் கொடுக்கலாம், நன்றாக வேலை வாங்கலாம், எதிர்த்துப் பேசமாட்டார்கள், பேசினால் கொடுக்கும் தண்டனைகள் பற்றி வெளியில் தெரியவராது... இப்படி பல காரணங்கள்! அந்தக் குழந்தைகளின் வண்ணக்கனவுகளில் தீயேற்றி வறுத்தெடுக்கும் இந்த மேல்த்தட்டு வர்க்கம்
தம் கனவுகளுக்கு சிறகு கட்டிப் பறக்கவிடுகிறது.

பெங்களூர் முழுவதும் இப்படி பல காட்சிகளைப்பார்க்கலாம். குழந்தைகளை வேலைக்கு வைத்திருக்கும் உணவகங்களில் உண்ணமாட்டேன் என்று சபதமிடுபவராக நீங்கள் இருந்தால் பட்டினிதான் கிடக்க வேண்டும்.
ஈரம் வரண்டுபோன மனத்துச்சமூகம் இன்னும் எவ்வளவு பாரத்தை தூக்கி
அந்தப் பிஞ்சுகளின் மேல் வைக்கப்போகிறது என்று தெரியவில்லை.

ஒருநாள் அந்தப்பையனை பிடித்து, என் அரைகுறைக் கன்னடத்தில் ஊர்,பேர் கேட்டேன்.
"பார்த்திபன், சேலம்"

"தமிழா?"

"ஆமா! யேன்?"

ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை என்ற கேள்வியை, என் உதடுகள் ஏனோ அடக்கிக் கொண்டன. அவன் மீண்டும் போய்விட்டான். இனம் புரியாத குற்ற உணர்வு இன்றுவரை நெஞ்சம் விட்டு விலகவில்லை. அவனுடைய அந்த நிலைக்குக் காரணம் நான் அல்ல, என்று விலகிப்போக முடியாது. நான் மட்டுமல்ல! நீங்களும் தான்!

ஆதித்தன்.
16-12-2008

நூலின்றி அமையாதென் வாழ்வு - 1

6:01 PM

கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களின் கனவுகள் என்னைத் தழுவுகின்றன.எனக்கே எனக்கான அந்தத் திரைப்படங்களில் ஆழ்ந்துபோகிறேன். அவற்றுள் சிலநேரம் நானும் பங்கேற்கின்றேன். பார்வையாளனாக நான்மட்டுமே பார்வையிடுவதில் தனிமையை ஒருபோதும் உணர்ந்ததில்லை. நல்ல புத்தகங்களும் இப்படிப்பட்ட கனவுகளைப்போல நம்மை தமக்குள் இழுத்துக் கொள்கின்றன. எழுத்துக்கள் சொற்களாகி, சொற்கள் வார்த்தைகளாகி வார்த்தைகள் கருத்துக்களாகி மனத்தில் புது உலகம் ஒன்றைக்கட்டுகின்றன.

எல்லோருக்கும் இந்த புதுச்சூழலில் ஆழும் உணர்வுகள் இருப்பதில்லை என்பதை
பலகாலம் கழித்துத்தான் அறிந்தேன். நூல்களை சில தோழர்கள் காகிதங்களாகவே பார்க்கிறார்கள். ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொன்றில் லயிக்கிறது. அதனால்தான் உலகத்தில் இன்னும் சுவாரசியம் மிச்சம் இருக்கிறது.

அநேகமாக பத்தாவது வயதில் "பாரதியார் கவிதைகளை" நான் புரட்டினேன் என்று நினைக்கின்றேன். பதின்மூன்றுவருடங்களாக அதனுடனே வாழ்கின்றேன்.
அக்காலகட்டத்தில் புரியாத பாரதியின் பல வார்த்தைகள், சொல்ல முனைந்த கருத்துக்கள் இன்று புலப்படுகின்றன. "பொன்னியின் செல்வனும்" இதைப்போலவே! வாழ்வின் ஒவ்வொருகட்ட முடிவின்போதும் அந்தக்கதை
மீண்டும் மீண்டும் புதிதாகவே தோன்றுகின்றது.

சில கனவுகள் வேதனையைக்கொடுத்துவிட்டு தமது இறுதிப்பக்கத்தை மூடிக்கொள்கின்றன. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுவதற்காய் என் கைகளை
அவைகளே இயக்குவது எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை. உயிரோட்டமுள்ள நூல்கள் கைகளை மட்டுமல்ல, உலகத்தையே இயக்கக் கூடியவை.

விரக்தியின் உச்சக்கட்டத்தில் மனம் சஞ்சரிக்கும் வேளைகளில், பாசமுள்ள எழுத்துக்கள் அதை இழுத்துக்கொண்டுவந்து தஞ்சம் கொடுக்கின்றன. மன இறுக்கத்தை விடுவிக்கக்கூடிய பண்பை சில புத்தகங்கள் அளவுக்கதிகமாக வெளிப்படுத்துவதால் வாசிக்கும்போதே வாய்திறந்து சிரித்துவிடுகின்றேன்.

பாக்கியம் ராமசாமியின் "அப்புசாமி"கதாபாத்திரத்தைக் கொண்ட புனைகதைகள்
வாசித்தபின்புகூட நினைத்து நினைத்துச்சிரிக்கவைத்து, திட்டு வாங்கித்தந்திருக்கின்றன. சுஜாதாவின் கதைகள் பெரும்பாலும் வாசகனின் வாயோரத்தில் சிரிப்பை குத்தகை எடுத்துவைத்திருக்கும்.

"பாரதியார் கட்டுரைகள்"என்ற நூலை எத்தனைபேர் அறிந்திருப்பர்களோ தெரியாது. என் அம்மா சிறுவயதில் அதைவாங்கித்தராமல் விட்டிருந்தால் இன்றுவரை அப்படிப்பட்ட ஒன்றை நான் அறிந்திருக்கமாட்டேன். பாரதியின் மனவெளிப்பாடுகளாக அந்தக்கட்டுரைகள் அமைந்தைருப்பதை இன்று உணர்கிறேன். சில பக்கங்கள் வெளிப்படுத்தும் நகைச்சுவை, இப்படிப்பட்ட மனிதருக்குள் இந்தளவுக்கு நகைப்புணர்வு இருந்ததா என்று எண்ண வைக்கின்றன.

நகைப்பு மட்டுமல்லாது பயம், ஆசை, கோபம், வேதனை, வறுமை, ஒருதலைக்காதல், வஞ்சனை என்று தான் கவிதைகளில் காட்ட முடிந்த உணர்ச்சியையும் விட பலமடங்கு உணர்ச்சியுடன் மனித இயல்புகளை கதாபாத்திரங்களாக்குகிறார் பாரதி. தூர நின்று எழுச்சியுடன் கவிதை சொன்ன ஒருவரை, தோளில் கைபோட்டு கதைசொல்லும் நண்பனாகக் காட்டுகின்றன அவரது கட்டுரைகள்!

உள்ளத்து உணர்ச்சிகள் எழுத்துக்களாகும் போதுதான், வெள்ளமாய்ப்பெருகி வாசகனின் மனத்தைத் திருடிக்கொண்டு போகமுடியும் என்ற ரகசியம் புரிந்தாலும் அதற்கான கொடுப்பினை பலருக்கு வாய்ப்பதில்லை.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு உழவன். படிப்பவன் மனதில் அவை எழுத்து என்ற ஏர்கொண்டு உழுது, பண்படுத்தி பல கருத்துவிதைகளை விதைக்கின்றன.
காலபெருவெளியின் ஓட்டவேகத்தில் பற்பல அழுத்தங்களால் சில விதைகள்
சிதைந்தாலும், மீதி விதைகள் மனிதனின் ஆளுமையை நிர்ணயிப்பதிலிருந்து அவனது நடத்தையை இயக்கும் குணங்களை மேம்படுத்துவது வரை பங்கெடுக்கின்றன.

இலையிலிருந்து பனி வழிந்து துளியாகாத ஒரு காலைப்பொழுதில் தேனீர் கோப்பையும் நானும், அரவிந்தரின் யோகவாழ்வைக் காட்டுகின்ற புத்தகத்தை வாசித்தோம். எழுந்துகொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தவண்ணம், அதன் கடைசிப்பக்கத்தை என்விரல்கள் மூடியபோது, மனம் அமைதியில் மூழ்கி அலையற்றுக்கிடந்தது.

ஆதித்தன்.
14-12-2008

ஏதடா உண்மையில் வாணிபூசை?

9:20 AM


இலங்கையில் உள்ள தமிழ் மாணவர்கள் படிக்கும் பாடசாலைகளின் நவராத்திரிநாட்களில் நடைபெறும் கலைவிழாக்களில்
ஒரு பாட்டு, கட்டாயமாக வீணைச்சத்ததோடும் மிருதங்கத் தட்டலோடும்
தன்னை இடஒதுக்கீடு செய்து கொள்ளும்.

"அடுத்த நிகழ்வாக பாரதியாரின் "வெள்ளைத்தாமரப்பூவிலிருப்பாள்" என்ற பாடலை இன்ன இன்ன மாணவர்(வி)கள் பாடவிருக்கிறார்கள். அதற்கான ஆயத்தங்கள் அரங்கத்தில் நடைபெறுவதால் சபையோரை சற்றுநேரம் பொறுத்திருக்குமாறு வேண்டுகிறோம்" என்ற [பொறுமையை கொல்கின்ற] அறிவிப்பின் பின்னர், அந்தப்பாடலின் அர்த்தம் புரியாமல்
குழந்தைகள் (அல்லது குமரிகள்) வந்து பாடிவிட்டு செல்வார்கள்.(பொருள் புரியாம பாடினா சிவலோகம் போக ஏலாது என்று மாணிக்கவாசகரே சிவபுராணக்கடைசியில் சொல்லிப்போட்டார் என்பதை கவனத்திற் கொள்க.)

சொல்லவந்தது என்னவென்றால்..., இந்த உலகத்தில் பிறந்த இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பட்ட அநுபவம் என்ன சொல்லுதென்டா...,
அந்த அற்புதமான கவிதையின் முதல் இரண்டு பந்திகளுமே
எல்லா இடங்களிலும் திருப்பித்திருப்பி பாடப்படுகின்றன.
எழுச்சியும் சமுதாயத்துக்குத் தேவையான கல்வியைப் பற்றிய ஆழ்ந்த கருத்தும்
விழிப்புண்ர்வு ஏற்றும் திறமும் கொண்ட
அந்தப்பாடலின் மிகுதி எட்டுப் பந்திகளையும் ஏன் தீண்டத்தகாததாய் ஆக்கினார்கள் என்ற கேள்விக்குப் பதிலை அந்தந்தப் பாடசாலைகளின் இசை ஆசிரியர்கள் தான் சொல்லவேண்டும்.


போனபிறவியில் செய்த புண்ணியத்தின் மிச்சப் பயனாக பாரதியாரின்
வெள்ளைத்தாமரைக் கவிதையின் கடைசிப் பந்தியையும் நான் சில இடங்களில் கேட்க நேர்ந்தது. பாட்டில் அல்ல!பேச்சில்!
"நிதி மிகுந்தவர் பொற்குவைதாரீர்" என்று தொடங்கும் அந்தப்பந்தி
எதற்கு உபயோகப்பட்டதென்றால் "நன்கொடைகேட்டல்" என்கின்ற படு புண்ணிய கைங்கரியத்திற்கன்றி வேறல்ல.

ஆக, சுப்பிரமணியத்தாரின் கவிதையின் முதலிரண்டு பந்தி பாட்டாகவும் கடைசிப்பந்தி பேச்சாகவும் வாழவைத்த தமிழ்ப்பெருங்குடியே! கருத்துக் களஞ்சியமாய் விளங்கும் மிச்ச ஏழு பந்திகளையும் அதேபோல் அர்த்தம் புரியாமல் பாடித்தொலைப்பதற்கென்ன? என்ற பெருங்கேள்வி தொண்டை வரை வந்தும், விழுங்குகிற இட்டிலி,சாம்பார் உந்தித்தள்ள வயிற்றுக்கே போய்விடுகிறது.

கலைவாணி விரும்பிக் கேட்கும் பூசை எதுவென்று பாரதியார்
சொல்லுவதை கேட்கையிலே, உணர்ச்சிப்பெருக்கு ஏறுவதையும்
நமக்குத் தெரிந்ததைக்கூட அடுத்தவருக்கு சொல்லித்தராமல் மறைத்தவண்ணம் இருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாது.
இந்தப் பதிவுகூட அந்த உணர்ச்சியின் வெளிப்பாடுதான்!

எளிதாக விளங்ககூடிய இக்கவிதைக்கு உரை என்பது தேவையில்லாததுதான்.
ஆனாலும், ஏற்கனவே அழகாக இருக்கும் நம் தமிழ்க்கன்னியர்கள் தேவையில்லை என்று சீப்பை,கண்ணாடியை முகப்பூச்சை தள்ளிவைக்காத அருங்குணத்தை வணங்கி தமிழ்கூறும் நல்லுலகிலே என் முதலாவது உரைப்படலத்தை ஆரம்பிக்கின்றேன்.
[உரையிற்குறையிருப்பின் என்னைச்சார்ந்தது! கவியில் நிறையிருப்பின் பாரதியைச்சார்ந்தது.]

.


வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்

வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்!

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத்திருப்பாள்!

உள்ளாதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்!

கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

கருணைவாசகத்துட் பொருளாவாள்!

வெள்ளைத்தாமரை பூவில் இருக்கின்ற கலைமகள் (அங்கு மட்டுமே இருப்பதில்லை) வீணைமீட்டுகின்ற ஒலியிலும் இருக்கின்றாள். கொள்ளை இன்பம் தந்து நெஞ்சோடு குலவிக் களிக்கின்ற கவிதைகளைப் படைக்கும் கவிஞர்களின் சிந்தையிலே இருந்து கற்பனை வளத்தையும் கருத்துச்செறிவையும் அளிக்கின்றாள்.
வேதத்தில் உள்ளபொருளைத் தேடி அறிந்து, பின் உணர்ந்து ஓதப்படும்
வேதத்தில் உள்ளாள். (ஐயர்மார் கவனிக்கவும். விக்கிரகத்துக்கு முன்னால் நின்று கடுகதிவேகத்தில் மந்திரங்களை உதறித்தள்ளுகின்ற செயலில் கலைமகள் இருக்கமாட்டாளாம்.) மனதில் கள்ளமில்லாத முற்றும் துறந்த துறவிகள் சொல்லுகின்ற கருணை நிறை வார்த்தைகளில் சரஸ்வதி இருக்கின்றாள்.

மாதர் தீங்குரற் பாட்டிலிருப்பாள்!
மக்கள்பேசும் மழலையில் உள்ளாள்!

கீதம்பாடும் குயிலின் குரலை

கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்!
கோதகன்ற தொழிலுடைத்தாகி

குலவு சித்திரம் கோபுரம் கோயில்

ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்!

இன்பமே வடிவாகிடப்பெற்றாள்!

பெண்களது இனிமையான குரலிலிருந்து வரும் பாட்டில் இருப்பள் கலைவாணி.
வெள்ளைமனத்துப் பிஞ்சுகளான குழந்தைகளின் மழலைப்பேச்சில் உறைகின்றாள். கீதங்கள்பாடித்திரிகின்ற குயிலின் குரலையும் கிளியின் நாக்கையும் அவள் தனது வசிப்பிடமாக்கிக் கொண்டாள்.

ஒருதரம் பார்த்தபின்பு, மறக்க இயலாமல் சிந்தையில் ஞாபகம்வந்து எம்மோடு கூடிகுலவிக் கொண்டிருக்கும்...
ஒருதவறுமில்லாத சிறந்த் வேலைப்பாடுகள் உடைய சித்திரங்கள், சிற்பங்கள் நிறைந்த கோயில்கள் இவற்றிலெல்லாம் பொங்கிச்சொரிந்திருக்கும் அழகின் இடையே வாழுகின்ற கலைத்தாய் ஆனந்தமே உருவானவள்.


வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்!

வெஞ்சமர்க்குயிராகிய கொல்லர்,

வித்தை ஓர்ந்திடு சிற்பியர்,தச்சர்

மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்,

வீரமன்னர் பின்வேதியர் யாரும்

தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்

தரணி மீதறிவாகிய தெய்வம்!


அடுத்தவரை வஞ்சிக்காத தொழிலைப் புரிந்து அதன்மூலம்
தம் வயிற்றுக்கு உணவுதேடி வாழுகின்ற நல்ல மனிதர்களுக்கு மட்டுமே
அன்னை குலதெய்வமாக நின்று பரம்பரையையே காப்பாள்.
[என்ன? வேற தெய்வத்தை தேடலாம் எண்டுதானே யோசிக்கிறீங்கள்?]

போர்நடக்கின்றதென்றால் ஆயுதங்கள் செய்கின்ற கொல்லர்களுக்கு நிறைய வருமானம் வரும். அதனால் அவர்களுக்கு போர் என்றால் உயிருக்கு உயிர்.
[அமெரிக்க ஆயுத வியாபாரிகளையா சொல்லுறார்?]

அப்படிப்பட்ட கொல்லர்களும்,
தத்தம் கலைகளில் கரைகண்ட சிற்பிகளும், தச்சர்களும்,
(பதுக்கிவைக்காமல்) நிறைவாக நல்ல பொருட்களை விற்கும் வியாபாரிக்ள், வீரமுள்ள அரசர்கள், மற்றும் அந்தணர்கள் எல்லோருமே
"தாயே! எங்களுக்கு நீயே தஞ்சம்"என்றுகூறி வணங்கி நிற்கின்ற தெய்வம்
யார் என்றால், அது இந்த உலகத்தில் "அறிவு"என்னும் தெய்வத்தைத் தான்.


தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்!
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்!

உய்வமென்ற கருத்துடையோர்கள்

உயிரினுக்குயிராகிய தெய்வம்!

செய்வமென்றொரு செய்கையெடுப்போர்

செம்மை நாடிப்பணிந்திடுந் தெய்வம்!

கைவருந்தி உழைப்பவர் தெய்வம்!

கவிஞர் தெய்வம்! கடவுளர்தெய்வம்!


அப்படிப்பட்ட அந்தத்தெய்வம் எல்லவற்றையும் அறியும்.
தீமையை நாங்கள் உணர்வதற்காக எங்களுக்குக் காட்டி, பின் அத்தீமையிலிருந்து ஒருபாதிப்பும் இல்லாமல் காப்பற்றுகின்ற தெய்வம்.

முக்தியை விரும்பி உயர்ஞானத்தை வேண்டி நிற்கின்றவர்கள் உயிருக்கு உயிராய் விரும்புகிற தெய்வம். ஒரு செயலை செய்வது என்று முடிவு செய்தவர்கள், அச்செயல் நன்றாக செம்மையாக நடக்க வேண்டும் என்று பணிகின்ற தெய்வம்.

அந்தத் தெய்வம் கை வருந்தி உடலால் வியர்வை சிந்தி உழைக்கின்ற பாட்டளிகளின் தெய்வம்.
கவிஞர்களின் தெய்வம்.
அது தெய்வங்களுக்கே மேலான தெய்வம்.


செந்தமிழ்மணிநாட்டிடை உள்ளீர்!

சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!

வந்தனம் இவட்கே செய்வதென்றால்

வாழி அஃதிங்கெளிதன்று கண்டீர்!

மந்திரத்தை முணுமுணுத்தேட்டை

வரிசையாக அடுக்கி, அதன்மேல்

சந்தனத்தை, மலரை இடுவோர்

சாத்திரம் இவள் பூசனையன்றாம்!



செந்தமிழை இரத்தினம் போல உயர்வாகக் கருதும் நாட்டிலே உள்ளவர்களே!
[அப்பிடி யாரவது இருக்கிறீங்களா?]
நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தத் தெய்வத்தை வழிபடுவோம்!வாருங்கள்!
ஆனால் ஒரு விசயம்!
இவளை வணங்குவது என்றால், "வாழ்க வாழ்க"என்று சொல்லிவிட்டுப் போவதைப்போல எளிதான செயல் இல்லை. கண்டுகொள்ளுங்கள்!
[இங்கே தான் பாரதியார் திருப்புமுனையே வைக்கிறார்]
மந்திரங்களை முணுமுணுத்துக்கொண்டு, புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்து அதற்கு மேலே சந்த்னத்தையும் மலர்களையும் இடச்சொல்லுகின்ற நெறிகள் கலைமகளின் பூசைக்குப் பொருந்தாது.


வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி,

நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்

நகர்கள் எங்கும் பலபல பள்ளி,

தேடு கல்வியிலாதொரு ஊரைத்

தீயினுக்கிரையாக மடுத்தல்

கேடுதீர்க்கும் அமுதம் என் அன்னை

கேண்மை கொள்ளவழியிவை கண்டீர்!


எல்லாத்தீமைகளையும் தீர்க்கக் கூடியவளான என்னுடைய தாய் கலைவாணியின் நட்பைப் பெறுவதற்கு சில வழிகள் இருக்கின்றன. அவை:
1]ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு கலையாவது விளங்கி ஒளிவீச வேண்டும்.
2]ஒவ்வொரு வீதியிலும் ஒன்று அல்லது இரண்டு பாடசாலைகள் அமைக்கவேண்டும்.
3]நம்முடைய தேசத்திலே எத்தனை நகரங்கள் இருக்கின்றனவோ, எத்தனை கிராமங்கள் இருக்கின்றனவோ....., அங்கெல்லாம் பற்பல பாடசாலைகளையும் கல்லூரிகளையும் கட்டவேண்டும். 4]கல்வி என்றஒன்று இல்லாத ஊர் இருக்கின்றதா என்று தேடவேண்டும்.
அப்படி இருந்தால் அதை தீ இட்டு அழித்தே விட வேண்டும். அது இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
இப்படிப் பட்ட இலட்சிய வழிகளைப் பின்பற்றினால் என் அன்னையின் அருளை எளிதாகப் பெறலாம்.

ஊணர்தேசம் யவனர்தந்தேசம்
உதயஞாயிற்றொளிபெறு நாடு

சேணகன்றதோர் சிற்றடிச்சீனம்

செல்வப்பாரசிகப்பழந்தேசம்

தோணலத்த துருக்கம் மிசிரம்

சூழ்கடற்கப்புறத்தினில் இன்னும்

காணும் பற்பல நாட்டிடை எல்லாம்

கல்வித்தேவியின் ஒளிமிகுந்தொங்க



[ஹூணர் என்னும் இனத்தவர் அசோகர் காலத்தில் கணவாய்களினூடாக வட இந்தியாவினுள் புகுந்து சில பகுதிகளை ஆட்சி செய்த இனத்தவர்கள் என்று அறிகிறேன்.]
ஹூணர் தேசம், கிரேக்க,உரோம தேசங்கள்,
உதிக்கும் சூரியனின் முதல் ஒளியை பெறும் நாடு (ஜப்பானை சொல்கின்றாரோ?),
அகலமான சீனா, செல்வம் நிறைந்த பழமையான பாரசிக நாடு,
துருக்கி, மிசிரம் எனப்படும் நாடு, இவை தவிர இன்னும் சூழ்ந்த கடலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் எத்தனை எத்தனையோ நாடுகளில் எல்லாம்
கல்வித்தெய்வமான சரஸ்வதியின் அருள் ஒளி மிகுந்து ஓங்கி நிற்கிறது. அவ்வாறான நிலையில்........ . . . . . , [அடுத்த பாடலில் தொடர்கிறது கருத்து!]


ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்லபாரத நாட்டிடை வந்தீர்

ஊனம் இன்று பெரிதிழைக்கின்றீர்!

ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!

மானமற்று விலங்குகளொப்ப

மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ?

போனதற்கு வருந்துதல் வேண்டா!

புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!


(இப்படியெல்லாம் பற்பல நாடுகள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து
பெருமை பெற்று விளங்கிவரும் இந்த நாளில்....,)
"அறிவு"என்ற சொல்லுக்கே அர்த்தமாக விளங்ககூடிய பாரத நாட்டிலே
வந்து உதித்த மகாஜனங்களே! [இங்கு வந்து என்னத்தைக் கிழித்தீர்கள் என்றால்]

நாட்டின் அறிவுச் சொத்துக்கே ஊனத்தை ஏற்படுத்துகின்றீர்கள்.
கல்வி நாட்டில் ஓங்கி நிற்பதற்காக செய்யவேண்டிய உழைப்பை மறந்தீர்கள். இந்த மண்ணில் மானமில்லாமல் மிருகங்களைப் போல, வாழுவதெல்லாம் ஒரு வாழ்வா?
சரி விடுங்கள்! நடந்து போனதுக்கு வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்?
கவலைப்பட வேண்டாம்! முதலில் இந்தத் தாழ்வை நீக்க முயற்சி செய்வோம்! வாருங்கள்!

அடுத்து வருவது தான் எனக்கு மிகவும் பிடித்த பாரதியார் பாட்டு!

இன்னறுங்கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியங்கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.


1] நம்முடைய சூழல் மாசடைவதைத் தடுத்து, எல்லா இடங்களிலும்
இனிமையான பழங்களைத் தருகின்ற மரங்களை நாட்டி சோலைகளையும் காடுகளையும் அமைத்தல்.

2]இனிய நீரை தருகின்ற குளிர்ந்த நீர்நிலைகளை உருவாக்குதல்.

3]பசி என்று ஒரு உயிர் வருந்தாதவண்ணம் எல்லா இடமும் அன்னதான சாலைகளை ஆயிரக்கணக்கில் கட்டி, உயிர்களின் பசியாற்றுதல்.

4]எல்லா இடமும் பத்தாயிரம் கோயில்கள் கட்டி வைத்தல்.

5]இன்னும் பின்னால் என்னென்ன தருமங்கள் இருக்கின்றனவோ
அவை எல்லாவற்றையும் சிறப்புறச்செய்தல்.

மேலே சொன்ன எல்லாமே சிறந்த தருமங்கள்தான். உயிர்களின் துன்பத்தை
கண்ணீரை துடைப்பவை தான். புண்ணியத்தை வாரி வாரிக் கொடுப்பவைதான்.
ஆனாலும், இவை எல்லாம் செய்வதை விட, முதலில்
ஒரு ஏழைக்கு கல்விவைக் கொடுங்கள்! அதுவே மாபெரும் தர்மம்.
எல்லாப்புண்ணியங்களையும் விட கோடிமடங்கு புண்ணியத்தை கொடுக்கும்.


நிதி மிகுத்தவர் பொற்குவைதாரீர்!
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!

அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்!

ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!

மதுரத்தேமொழிமாதர்களெல்லாம்

வாணிபூசைக்குரியன பேசீர்!

எதுவும் நல்கியிங் கெவ்வகையானும்

இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!



பணம் நிறைந்து கொழிக்கின்றவரே! பொன்குவியலைத்தாருங்கள்!
நடுத்தரவர்க்க மக்களே! உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதைகொடுங்கள்!
அதையும் செய்ய முடியாமல் இருப்பவர்களே!
உங்கள் வாய்ப்பேச்சினால் கல்வியின் தேவையைபற்றி எல்லாரிடமும் பேசி மனமாற்றத்தை கொண்டுவாருங்கள்.

உடல்பலம் பெற்றவர்களே. உங்கள் உடல் உழைப்பைக்கொடுங்கள்!

இனிமையான மொழிகளை உதிர்க்கும் பெண்களே!
(வளவளவென்று ஊரான் வீட்டுக் கதைகளைப் பேசிக்கொண்டு இருக்காமல்)
நாம் செய்யப்போகும் இந்த உண்மையான "வாணி பூசை"க்கு தேவையானவற்றையே பேசுங்கள்!

எதைக் கொடுத்தென்றாலும்......, எப்படியாவது......, இந்த மாபெருஞ்செயலைச் செய்து முடிப்போம்! வாருங்கள்!

ஆதித்தன்.
09-12-2008

நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்

1:08 AM

"ஆப்பிரிக்க இலக்கியங்களுக்கோ, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களுக்கோ எங்கள் சமகாலத்து இலக்கியங்கள் குறைந்து போய்விடவில்லை. ஆனால் அவை உலக அளவுக்கு அறியப்படவில்லை. அங்கீகாரம் பெறவுமில்லை. எங்கள் கண்களுக்கு தெரியாத ஏதோ சூட்சுமமான விதிகளின் பிரகாரம் இலக்கியத்தரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்."
- சுந்தர ராமசாமி.

1] எதற்காக நம் இலக்கியங்கள் பிறமொழிகளில், மொழிபெயர்க்கப்பட வேண்டும்?
நாகரிகப் பழமையும்,
முற்காலத்திலேயே அடைந்திருந்த பண்பாட்டுச்செழுமையும்,
இலக்கியப் புலமையும், பொறியியற்திறனும், கட்டிடக்கலைவடிவமைப்பும்,
சிற்பப்பெருங்கலையில் சிறந்தோங்கிய தன்மையும்,
வணிகமேலாண்மையில் பழந்தின்று கொட்டைபோட்ட முதிர்ச்சியும், போர்க்கலையும், பரதமும், கூத்தும், இயற்கைவிவசாயமுறைகளும்,
தளராத வீரமும், அகலாத ஈரமும் இன்னும் பலபெருஞ்சிறப்புக்களையும்
தன்னகத்தே கொண்டு, மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இனம் ஒன்று இருக்கிறது.அதன் இலக்கியங்கள் உலக மனித சமுதாயத்தின் பொக்கிஷம்.
என்பதனை பிறதேசத்தவர் உணர்ந்து, அவ் இலக்கியங்களைக் கற்று, அதன்படி ஒழுகி தத்தம் சந்ததியர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் படி செய்வதற்காக!

2]எந்தெந்த மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்?
எந்தெந்த மொழிகள் உலகில் எழுதவும், பேசவும் பயன்படுகின்றனவோ,
அந்தந்த மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்படவேண்டும்.

3]ஏற்கனவே பல தமிழ் இலக்கியங்கள் பிறமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதே? அவற்றால் எந்தப்பயனும் இல்லையா?
சேக்ஷ்பியரின் நூல்களை உலகம் முழுவதும் விழுந்து விழுந்து படிக்கிறது.
திருக்குறளை, சிலப்பதிகாரத்தை, மணிமேகலையை, திருவாசகத்தை
படிப்பறிவுள்ள உலகமக்களில் எத்தனை பேர் அறிவார்கள்? பிறமொழிநூல்களைவிட நம் நூல்கள் தரம் குறைந்தனவா? ஒருபோதும்
இல்லை. எங்கள் நூல்கள் மொழிமாற்றம் செய்யப்படுகையில் எளியமொழிநடையில் கருத்துக்கள் வாசகருக்கு போய் சேரக்கூடிய வகையில் எழுதப்படாமை, அவற்றை பிரபல்யம் அடையாமல் செய்துவிட்டது.

4] நம் இலக்கியங்கள் சிறப்பாக மொழிமாற்றம் அடையும் வேகத்தைக்கூட்ட
இனி என்ன செய்ய வேண்டும்?
1.அரசாங்க உதவிகளை மட்டுமே நம்பியிருத்தலை அறவே நிறுத்தல்.

2.இலாப நோக்கம் அற்ற, அரசியல் மத சாதி சார்பு அற்ற தமிழ் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தல்.

3.நிபந்தனைகள் அற்ற, பிரதியுபகாரம் எதிர்பார்க்காத நிதியுதவிகளை
தேடிப் பெறுவதற்காக தனிப் பிரிவு ஆரம்பித்தல்.

4. பொருத்தமான, திறமையான, பல்மொழியறிவுமிக்க தமிழ் அறிஞர்களை சிறந்த ஊதியம் அளித்து நிறுவனத்தில் இணைத்தல்.

5. பொருத்தமான, திறமையான, குறித்த பிறமொழியில் சிறந்த அறிவும், சுவாரசியமான எழுத்துத் திறனும் உள்ள அறிஞர்களை, மொழி வாரியாக,
சிறந்த ஊதியம் அளித்து நிறுவனத்தில் இணைத்தல்.

6.நிறுவனத்தின் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தக் கூடிய வகையில்
பல குறுங்கால, நீண்டகாலதிட்டங்களைத் தீட்டி, விரைந்து அமுல்ப்படுத்தல்.

7.மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை சிறந்த தரத்தில் அச்சிட்டு
இலாபம் இல்லாதவகையில் விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடுதல்.

8."பிரிட்டிஷ் கவுன்சில்" எவ்வாறு உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தையும்
ஆங்கில இலக்கியத்தையும் பரப்புகின்றதோ, அதே போல், பல நாடுகளிலும்
கிளைகள் திறந்து, தமிழ்மொழியையும், தமிழிலக்கியங்களையும் பயிற்றுவி்த்தல். தமிழ் தெரிந்திருத்தல் ஒரு பெருமைக்குரிய விடயம் என்ற எண்ணக்கருத்தை பிறநாட்டவரிடம் ஏற்படுத்தல்.

9.மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை மின்னூலாக்கி, எவரும் இணையத்திலிருந்து இலகுவாக பதிவிற்க்கம் செய்யக்கூடியவாறு அமைத்தலுடன், வருங்காலத்தில் அறிவியற்புரட்சியால் வரும் எந்தவொரு உபயோகமான ஊடகங்களின் மூலமும் நம் தயாரிப்புக்கள் மற்றவரை இலகுவாக சென்றடையுமாறு செய்தல்.

மேற்கூறப்பட்ட தன்மைகளை உடைய தன்னார்வ தமிழ்த் தொண்டு நிறுவனங்கள், துளியாய்..., தூறலாய்..., மழையாய்..., பெருங்கடலாய்ப் பெருக வேண்டும் என்பதே தமிழுணர்வுள்ள தமிழர்களின் ஒரே பெருவிருப்பு!

-ஆதித்தன்

உருப்படாத தி.மு.க. விற்கான எதிர்க்கணைகள் சில!!

11:11 PM

1]பொழுதைப் போக்க இலவசத்தொலைக்காட்சி வழங்கும் கருணாநிதியால்,
ஏன் உயிரைக்காக்க இலவசத்தலைக்கவசம் வழங்க முடியவில்லை?

2]மரணதண்டனையை நீக்க கோரும் கனிமொழி, மதுரையில் சன்குழும தொழிலாளர்கள் அழகிரி ஆதரவாளர்களால் பெற்றோல்குண்டு வீசிக்கொல்லப்பட்டமைக்கு எதிராக, போர்க்கொடி உயர்த்தவில்லை?

3]தமிழ் எங்கள் மூச்சு என்று கூவும் கழகத்தின் தூண்களில் ஒருவரான
ஆற்காடு வீராசாமி, தன் பெயரின் ஆங்கிலஎழுத்துக்களில் வீராஸ்வாமி
என்று மாற்றியது ஏன்?

4]மத்திய அரசே கைவசம் உள்ளபோது, தமிழகத்திற்கு எவ்வளவோ முன்னேற்ற அடிக்கற்கள் நாட்டியிருக்கலாம். அதை விடுத்து கனிமொழிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளை எடுத்தளிப்பதிலேயே குறியாக நிற்கின்ற கருணாநிதியைப் போய் யார் "நிர்வாகத்திறன் கொண்டவர்" என்று
புகழ்ந்தது?

5] தமிழ் நாட்டிலேயே தலையை பிய்த்துக்கொண்டு நடக்கின்ற மின்சாரப் பற்றாக்குறைச் சண்டைகளுக்கு மத்தியில், இலங்கைக்கு தனுஷ்கோடி-மன்னார் வழியாக மின்சாரம் வழங்குவதைப் பற்றி ஆற்காடு வீராசாமி வாயே திறக்காதது
ஏன்?

6] உலகத்தமிழர் தலைவராக கழகக் கண்மணிகள் மார்தட்டும் கருணாநிதியால்
பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் திறக்கப்பட முடியாத நிலையில் கன்னட வெறியர்களால் தடுக்கப்பட்டு வரும் வள்ளுவர் சிலையை ஏன் திறக்க முடியவில்லை?

7] பெரியார் சீடர் என்று தன்னைச்சொல்லும் கருணாநிதி எதற்காக பெண்தெய்வமாக போற்றப்படும் கண்ணகிக்கு சிலை வைத்தார்?
[சிலை வைத்தது தவறு இல்லை. பெரியார் சீடர் கடவுளுக்கு சிலை வைப்பது ஏன்?]

8] திருக்குறளை கசடறக் கற்று உரை எழுதி, "வாழும் வள்ளுவரே" என்று
தொண்டர்கள் அழைப்பதை அநுமதித்து வரும் கருணாநிதி,
திருக்குறளை வாழ்கையில் பெரும்பாலும் கடைப்பிடிக்காதது ஏன்?
[இந்த தலைப்பில் எழுதத்தொடங்கினால் ஒரு பெரும் நூலே எழுதலாம்.]

9] கவிதை என்ற பேரில் முரசொலியில் கருணாநிதி எழுதும் சொற்கலவைகளுக்கும் கவித்தரத்திற்கும் சம்பந்தம் குறைவாயுள்ளமை பற்றி,
அவருடன் கலந்து உறவாடும் வைரமுத்து,பா.விஜய் போன்றவர்கள் வாய்திறக்காமைக்கு காரணம் என்ன?

10] வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில்
தனக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தமைக்கு காரணம் கலைஞர்தான் என்று கூறியுள்ளார். உண்மையான திறமையின் அடிப்படையில்
பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகாமல், சிபாரிசின் அடிப்படையில் மதன்கார்க்கிக்கு இடம் கிடைத்தது எவ்வாறு?

11] இவ்வாறு தன் தோழர் மகனுக்கு சிபாரிசு பண்ணி இடமளித்த கழகத்தலைவர்
கழகத்தின் அடிமட்டத்தொண்டர்களின் சந்ததிகளுக்கும் சிபாரிசு செய்து உதவலாமே? என்ற பகுத்தறிவு அப்பாவித் தொண்டர்களுக்கு வராமற் போனது ஏன்?

12] தன் உறவினருக்குமேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக்கோரி லஞ்சதடுப்புபிரிவு அதிகாரியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பூங்கோதைக்கு
எதிராக ஆதாரங்கள் இருந்தும், வழக்கு தொடராதது ஏன்?

13] (பகுத்தறிவு இயக்கமாக வெளிக்காட்டிக்கொள்ளும்) "திராவிட முன்னேற்றக் கழகத்தின் எந்த உறுப்பினரும் சாமி கும்பிடக்கூடாது; கும்பிட்டால் கட்சியில் இருக்க கூடாது. கடவுள் பக்தி உள்ள எவரும் தி.முகவிற்கு வாக்களிக்கத் தெவையில்லை." என்று ஏன் வெளிப்படையாக கருணாநிதி தெரிவிக்கவில்லை?

14] வெறுமனே பேச்சில் கொல்லுவேன்,வெட்டுவேன் என்று கூறிய காடுவெட்டி குருவை, அதிகாலையில் கதவை உடைத்து கைது செய்த தி.மு.க.அடிமைக் காவல் அதிகாரிகள், மதுரையில் இரு தமிழர்களின் கொலைக்கு காரணமான
செயல்புயல் மு.க.அழகிரியின் வீட்டுக் கதவை ஏன் தடவக்கூட முடியவில்லை?

15] விடிதலைப்புலிகளின் தூண்களில் ஒருவரான சு.ப.தமிழ்ச்செல்வன் மரணத்திற்காக கவிதை எழுதிய கருணாநிதி, தமிழ்ச்செல்வனின் படுகொலையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரை,
தம் பெயர்ப் பட்டியை கழற்றிவைத்துவிட்டு வந்த காவற்துறையினரைக்கொண்டு
அடித்துக் கலைப்பித்தது ஏன்?

விழித்தெழுக என் தேசம்! - இரவீந்திரநாத் தாகூர்

3:00 PM

இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாச மின்றிஅறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரணவிடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டுத்துண்டுகளாய்ப்போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கேமெய்நெறிகளின்அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கிதனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்தெளிந்தஅறிவோட்டம்
எங்கேபாழடைந்த பழக்கம் என்னும்பாலை மணலில்
வழி தவறிப்போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கேவழிநடத்திச் செல்கிறாயோ,
அந்தவிடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுகஎன் தேசம்!

பழகிய பாரதி !

12:53 PM



பாரதியாரை நேரில் கண்டவர்கள் எவராவது இருப்பார்களா என்று பலவருடம் தேடியலைந்திருக்கிறேன். எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடும் பாண்டிச்சேரியில் உள்ள பாரதி நினைவகமும் போகும் போதெல்லாம் அவரைச் சந்தித்த மனிதர்களில் ஒருவரையாவது பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் உருவாகும். பாரதியாரை தன்னுடைய பள்ளிவயதில் பார்த்துப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற முதியவரைப் பற்றி அறிந்த போது உடனே காண வேண்டும் என்ற வேட்கை உருவானது.


நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் உள்ள பழைய வீடொன்றில் உள்ளே மர நாற்காலியில் அமர்ந்தபடி. பாரதியாரை தான் பார்த்துப் பழகிய தன்னுடைய பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பேசினார் 90 வயதைக்கடந்த கல்யாண சுந்தரம். 1999 ல் நடந்த இந்தச் சந்திப்பின் இரண்டு ஆண்டுகளில் அவர் காலமானார். அந்த சந்திப்பின் வரிவடிவம்.


தூரத்துமலைகளின் நிசப்தம் நிரம்பிய விசிபுரம் எனப்படும் விக்கிர சிங்கபுரம். வயல்களின் செழுமை காணுமிடமெல்லாம் பச்சையாக விரிந்து கிடக்கிறது. மேகங்கள் சிதறிய வானம். தென்னைகள் நிரம்பிய நிலவளம். ஆற்றோட்டத்தின் வற்றாத நீர்வளம். அதிக பரபரப்பு இல்லாத மென்மையான வாழ்க்கை.


கல்யாண சுந்தரம் பற்றிக் கேள்விபட்டு அவர் வீடு தெரியாமல் தேடி அலைந்த போது கோவிலின் முன்பாக இருந்த வயதான நபர் யாரைத் தேடுகிறீர்கள் என்று சுத்தமான அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் கேட்டது வியப்பாக இருந்தது. அந்த மனிதர் சட்டை கூட அணிந்திருக்கவில்லை. நாலு முழ வேஷ்டியும் அருவிக்கரை துண்டும் போட்டு இருந்தார்.


கல்யாண சுந்தரம் என்றதும் எந்தக் கல்யாண சுந்தரம் என்று ஆங்கிலத்திலே தொடர்ந்தார். விபரம் சொன்னதும் அப்படி ஒருவர் இருக்கிறாரா என்று தெரியாது எதற்கும் கேட்கலாம் என்றபடியே தனது பையன் அமெரிக்காவில் இருப்பதால் தான் சில வருடம் அமெரிக்கா சென்று இருந்ததாகவும் தற்போது ஊரிலே தங்கிவிட்டதாக சொன்னார். கல்யாண சுந்தரம் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை அவரது உறவினர்கள் திருநெல்வேலியில் வங்கியில் வேலை செய்கிறார்கள் என்றவுடன் கண்டுபிடிப்பது சுலபமாகயிருந்தது.


தன்னைப் பார்க்க வந்திருப்பவர் யார் என்று புரியாத குழப்பத்துடன் அருகில் வரச்சொன்னார். அருகில் அமர்ந்து விவரித்த போது உற்றுப்பார்த்தபடியே உங்களை பார்த்து இருக்கிறேனா என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். ஏதோ யோசனைக்குப்பிறகு என்னை எப்படி உங்களுக்குத் தெரியும். யாரு அடையாளம் சொன்னது? என்னிடம் கேட்டார்.


பாரதியாரைப் பற்றி படிச்சிருக்கேன். பாரதியாரோட பழகின யாராவது ஒருத்தரை நேர்ல பாக்கணும் ரொம்ப நாள் ஆசை. அப்படி விசாரிச்சிகிட்டு இருக்கும் போது உங்களைப் பத்தி சொன்னாங்க. ஆனா முகவரி கிடைக்கலை. அதைத் தேடி பிடிச்சி வர்றதுக்குள்ளே ரெண்டு மாசமாகி போச்சி என்றேன்.


என்னை உற்று நோக்கியபடியே உங்களுக்குப் பாரதியாரை ரொம்பப் பிடிக்குமா ? என்று கேட்டார். மனம் பின்னோக்கி செல்லத்துவங்கியது.


என்னோட பள்ளி வயசில பாரதியாரை வாசிக்க ஆரம்பிச்சேன். அந்தக் கவிதைகளை வாசிக்க வாசிக்க உடம்புக்குள்ளே விறுவிறுனு ஏதோ செய்யுது. திடீர்னு உலகத்து மேலே கோவம் வருது. வீட்ல சொல்லிக்குடுத்த தேவாரம் திருவாசகம் எல்லாத்தையும் விட பாரதியார் மேல பெரிய ஈர்ப்பு உருவானது.பாரதியாரைப் படிக்கிறது வெவ்வேறு வயசில வெவ்வேறு அனுபவம் குடுத்திருக்கு. கல்லூரி நாட்களில் எப்பவும் என் பைக்குள்ளே பாரதியார் கவிதைகள் புத்தகமிருக்கும். பல முறை எட்டயபுரத்துக்குப் போயிருக்கேன். எங்கோ அந்த ஊரோட ஆழத்தில பாரதியாரோட எலும்புகள் முணங்கிக்கிட்டு இருக்கிற மாதிரி சப்தம் கேட்டிருக்கு. என்னோட ஆதர்சனங்களில் பாரதியாரும் ஒருத்தர் என்றபடியே அவரிடம் நீங்க பாரதியாரை எப்போ பாத்தீங்க என்று கேட்டேன்.


அவரும் தன் நினைவில் ஆழ்ந்து போனபடியே சொன்னார் . 1919 ம் வருஷம் பாரதியார் கடையத்துக்கு வந்தாரு. அப்போ நான் சின்னப் பையன். புதுசா எது வந்தாலும் வேடிக்கை பாக்கிற மாதிரிதான் பாரதியாரையும் வேடிக்கை பார்க்கப் போனோம். அவர் மனைவி செல்லம்மா வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அவர் மனைவியோட சகோதரர் அப்பாத்துரை தான் பாரதியாரை கவனிச்சுக்கிட்டு இருந்தார்.ரொம்ப மிடுக்கான ஆளு, குரல் கார்வையா இருக்கும். தெருவிலே நேரே நடந்து மிலிட்டரிக்காரர் மாதிரிப் போவாரு. சாயங்காலமாச்சுன்னா கல்யாணியம்மன் கோயிலுக்குப் போவாரு... அவருக்கு அக்ரஹராத்தில மதிப்பே இல்லை. யாரோடயும் சேரவும் மாட்டாரு... அவங்களும் இவரை ரொம்பத் தாழ்வாதான் நடத்தினாங்க. என்று விவரித்தபடியே மௌனத்தில் ஆழ்ந்து போனார்.


அதைப் பத்தி நானும் வாசித்திருக்கிறேன். பாரதியார் நல்லா பாடுவார்னு நாமக்கல் கவிஞர் தன் புத்தகத்திலே ஒரு சம்பவத்தை எழுதியிருக்கிறார். அதிகாலையில் எழுந்து பாரதியார் பாடுனதை அவர் கேட்டதாகவும் அது மிகசிறப்பாக இருந்தாகவும் வருது. நீங்க அவர் பாடி கேட்டு இருக்கீங்களா?


இல்லை என்று மறுத்தபடியே சொன்னார்.


அப்போ நான் ரொம்பச் சின்னப் பையன். அக்ரஹாரத்தில இருந்த எல்லாருக்கும் நல்லாப் பாடத் தெரியும். ஆனா.. பாரதியார் பாடி நான் கேட்டதில்லை. தனியா மலைப்பக்கம் போயி உட்கார்ந்துகிட்டு அவரா பேசிகிட்டு ஏதையாவது சொல்லிகிட்டு இருக்கிறதை பாத்து இருக்கேன். அப்போ அவரைப் பத்தி அதிகம் தெரியாதில்லையா. அதனாலே ரொம்பப் பழக முடியலை. ஆனா இப்போ ரேடியோவில பாரதியார் பாட்டு போடுறப்போ.. நிறைய தடவை என்னை மீறி அழுதிருக்கேன். இப்பேர்பட்ட மனுசனை நாம நேர்ல பாத்து இருக்கமேனு.. மனசுக்குள்ளே சந்தோஷமாவும் இருக்கு. நெல்லைல அந்தக் காலத்தில ஊர்வலம் போறவங்க கூட பாரதியார் பாட்டைப் பாடிகிட்டு போனாவங்க. கேட்டா அது நம்ம மனசில அப்படியே வந்து ஒட்டிகிடும்.


அது நிஜம் என்பது அவரது பார்வையிலே தெரிந்தது. மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் அவரைப் பத்தின ஞாபகங்களைச் சொல்லுங்க என்றேன்.


ஒரு நாள் ஊருக்கு வெளியில ஒரு கழுதைக் குட்டி படுத்துக் கிடந்தது. கழுதைக் குட்டி கிட்டே போய் பாரதியார் உட்கார்ந்துகிட்டு அதைத் தடவித் தடவி விட்டுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருந்தாரு. சின்னப்பிள்ளைகளுக்குத் தர்ற மாதிரி முத்தமெல்லாம் குடுத்தாரு. பார்க்கிறவங்க இந்த ஆளுக்குப் புத்தி கெட்டு போச்சுன்னு சொல்லிக்கிட்டுப் போனாங்க. இவரு அதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை என்றபோது குறுக்கிட்டு கேட்டேன் "உங்களுக்கு அப்போ வயது என்ன இருக்கும்?".


பள்ளிக்கூடத்தில படிச்சுக்கிட்டு இருக்கேன். பத்து, பனிரெண்டு வயசு இருக்கும். பாரதியாரோட மக சகுந்தலா நான் படிச்ச ஸ்கூல்ல சின்ன வகுப்பிலே படிச்சுக்கிட்டு இருந்தா... நான் பாரதியாரைப் பார்க்கப் போனா வீட்டில திட்டுவாங்க.. யாருக்கும் தெரியாமத்தான் போயி பார்ப்பேன். என் வயசு பையன்க நாலஞ்சு பேர் தினம் போயி அவரைப் பாத்து பேசுவோம். அவரு எங்களைக் கூட்டிக்கிட்டு ஊரைவிட்டு வெளியே வந்து மலையடிவாரத்தில் உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பாரு.அக்ரஹராத்தில இருந்த ஆட்கள் அவரைக் கண்டா முகத்தைத் திருப்பிகிடுவாங்க. அப்பாத்துரை மட்டும் தான் அத்திம்பேர்னோ, ஓய் பாரதின்னோ கூப்பிட்டுப்பேசுவார்.


பாரதியார் தினம் கடுதாசி எழுதுவார். அதை தபால்ல சேர்க்க வேண்டியது எங்க வேலை. அவருக்கு கஞ்சாப் புகைக்கிற பழக்கம் இருந்துச்சு. அதை ஏற்பாடு பண்றதுக்கு ஆறுமுகம்னு ஒருத்தன் இருந்தான். புகைகுழல் ஏற்பாடு பண்ண, வீட்டுக் கிணற்றில இருக்க தண்ணிக்கயிற்று நுனியை வெட்டி எடுத்துக்கிடுவாரு. அது சன்னமா இருக்கும். அதை மெல்லுசாப் பொசுக்கி அதை ஈரத்துணியிலே சுத்தி ஏற்பாடு செய்வாங்க. புகைக்க புகைக்க அவர் கண்ணு துடிச்சுக்கிட்டேயிருக்கும். செவசெவனு பாக்கவே பயமா இருக்கும். ஆனா குழந்தை மாதிரி பேசுவார் எப்பவாவது அவர் கவிதைகளைப் பாடுவாரு. எழுதி வச்சதப் பாடுறாரா, இல்லை இப்போதான் புனைஞ்சு பாடுறாரான்னு தெரியாது. ஆனா எதுக்க இருக்க ஆள் அவர் குரலைவிட்டு விலக முடியாம இருக்கற மாதிரிப் பாடுவாரு என்று விவரித்தார்.


அவரோட கவிதைகளை அப்பவே வாசிச்சு இருக்கீங்களா? என்றதுமஸ்வதந்திர கீதங்கள், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு போன்ற பொஸ்தகங்களை எல்லாம் நாலணாவிற்கு விற்பாரு. நாங்க வாங்கிப் படிப்போம். இப்போ அவர் புஸ்தகத்தை 60 ரூபா, நூறு ரூபான்னு விக்கிறாங்களே எதுலயும் அப்பிடிச் சுத்தமா பதிப்பிச்ச கவிதை இருக்காது என விளக்கம் சொன்னார். தினசரி பாரதியாரைப் பார்ப்பீங்களா? அவரோட யாராவது நண்பர்களா இருந்தார்களா என்று கேட்டதும் கல்யாணசுந்தரம் தன் நினைவில் அமிழ்ந்தபடியே, ஆறு மாசம் இருக்கும். தினம் பார்ப்போம். அவர் அக்ரஹாரத்தில இருந்தாலும் அதுக்குக் கட்டுப்பட்டு நடக்கலை. நல்ல மீச வச்சிருந்தார். அல்பெர்கா கோட்டு, விறைப்பா கையை வெச்சுக்கிட்டு நடப்பாரு. அவர் நடந்து போகும்போது சில பேர் அவர் முன்னாடியே, பிரஷ்டன்... பிரஷ்டன்னு சொல்லி விலகிப் போறதப் பாத்திருக்கேன். யாரும் அவருக்கு மதிப்புக் குடுக்கலை. கொஞ்சநாள் அவரை அக்ரஹாரத்துக்குள்ளவே சேத்துக்கலை. வெளியே ஒரு இடத்தில தனியா இருந்தாரு. வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு கொடுத்திட்டு வருவாங்க. சில நாள் சலவை தொழிலாளி வீட்ல கூடச் சாப்பிடுவார். அவருக்குப் பேதம் கிடையாது.


ஒரு நாள் பாரதியார் இன்னைக்குச் 'சாகாமல் இருப்பது எப்படி?' ன்னு சொற்பொழிவு செய்யப் போறாருன்னு தண்டோரா போடச் சொன்னாரு. நிறைய கூட்டம். அங்கே வந்து நின்னுகிட்டு.நீங்க எல்லாம் உயிரோட இருந்து என்ன பிரயோசனம்னு சொல்லுங்க நான் சாகாமா இருக்கிறது எப்படினு சொல்லித்தர்றேனு சொன்னாரு. கூட்டத்தில ஒரே சலசலப்பு. பாரதியார் கூட்டத்தைப் பாத்துக்கிட்டே, ' ஜெயபேரிகை கொட்டடா' பாட்டைப் பாடினாரு. கண்ணு அப்பிடி அம்பு மாதிரி கூர்மையா இருக்கு. கொட்டடா, கொட்டடான்னு அவர் சொல்ற வேகத்தைக் கேட்ட தண்டோரா போடுறவன் நம்மளைத்தான் சொல்றாரு போல இருக்குன்னு நினைச்சு நிஜமாவே தண்டோராவை அடிச்சான்.அவ்வளவு வீரமாப் பாடுவாரு. அந்த குரல் மனசிலயே இருக்கு.


அவருக்குப் பொய் பேசினா பிடிக்காது. திட்டுவாரு. கோபப்பட்டு எதாவது செய்துட்டாலும் பிறகு மன்னிப்புக் கேட்டுக்கிடுவாரு. வயது வித்தியாசம் பாக்காம மன்னிப்புக் கேட்டுடுவாரு. அவரோட மதிப்பு அன்னைக்கு எனக்குத் தெரியிலே. வீட்டுல திட்டுவாங்கன்னு பயந்துகிட்டே பழகுவோம்.


யார்கிட்டயும் நிமிர்ந்து பாத்துதான் பேசுவாரு. அவரு தெய்வத்தை வேண்டுறபோது எதிரே நிக்கற மாதிரிதான் அம்மா... சக்தினு உரக்கச் சொல்வாரு. எல்லாத்துலயும் அவருக்கு சக்தி இருக்கிறமாதிரிதான்சொல்வாரு.


அவர்கிட்டே ரொம்ப நாளா யானையோட விளையாடுற பழக்கம் இருந்துச்சு. கோவில்ல இருந்த யானைகிட்டே போயி, பாகன் கிட்டே காசு குடுத்துட்டு யானையைத் தொட்டுப் பாக்கட்டா' ன்னு கேப்பாரு. அதுக்கு என்ன, பாருங்க சாமின்னு சொல்வான். தும்பிக்கையைச் சுத்தி கையைப் போட்டுக்கிட்டு முத்தம் குடுப்பாரு. சில சமயம் பல்லுல மெல்ல அதைக் கடிப்பாரு. அதுக்கு வலிக்கவா போகுது .விளையாடிகிட்டேயிருப்பார். அதுதான் பின்னாடி அவருக்கு வினையா வந்துச்சு. யானைன்னா ஆச்சரியமா பார்ப்பாரு. சின்னப்பிள்ளை மாதிரி என்றார்.


கல்யாணசுந்தரம் பேச்சின் ஊடே யாரோயோ அழைத்து காபி கொண்டு வரச்சொன்னார். வீட்டிலிருந்த ஒரு பெண் எங்கள் பேச்சை உன்னிப்பாக கவனித்தபடியே நின்று கொண்டிருந்தார். உங்களோட குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க? என்றேன்.


நான் 'குற்றாலக் குறவஞ்சி' எழுதின திரிகூடராசப்பக் கவிராயர் வம்சாவழியில பிறந்தவன். நாடகம், கவிதை, கதையெல்லாம் எழுதியிருக்கிறேன். பாரதியார் மேல கூட கவிதைகள் பாடியிருக்கேன். இப்போ எனக்கு 92 வயசாகுது. கல்கியில அந்தக் காலத்துல 'கண்ணா மூச்சி'ங்கற என் கதை பரிசு வாங்கியிருக்கு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு அரசாங்க வேலைக்குப் போயிட்டேன். பாரதியோட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சது என் வாழ்க்கையில பெரிய பாக்கியம். யாருக்கு அது கிடைக்கும் என்றார்.


புதுமைப்பித்தனைத்தெரியுமா? என்று கேட்டேன். அவரது முகம் இறுக்கம்கலைந்து இயல்பானது.


அவரு எனக்கு சொந்தக்காரர்தான். பார்த்ததில்லையே தவிர கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகளைப் படிச்சிருக்கிறேன். புதுமைப்பித்தனை விருத்தாசலம்னு சொன்னாத்தான் இங்க பலருக்கும் தெரியும். அவுங்க அப்பா தாசில்தார். பெரிய ஆராய்ச்சியாளர். புஸ்தகமெல்லாம் எழுதியிருக்கிறாரு என்றபடியே வீட்டிலிருந்த பெண்ணிடம் விருத்தாசலம் வீடு திருநெல்வேலியில் எங்கே இருந்தது என்று விசாரிக்கத் துவங்கினார்.


காபி வந்தது. அந்த பெண் அய்யாவுக்கு பழசு எல்லாம் அப்படியே ஞாபகமிருக்கும். நீங்க கேளுங்க என்று என்னிடம் சொன்னார். இப்போ பாரதியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்றேன்.அவர்கூட கொஞ்ச காலம் பழகினதுக்கு எனக்கே இந்த மரியாதை கிடைக்குதுன்னா பாத்துக்கோங்க. எல்லாம் தெய்வ சித்தம் என்றபடியே கண்களை மூடிக்கொண்டார்.


சற்றே தயக்கத்துடன் உங்க கையை நான் தொட்டுப் பாக்கலாமா? என்று கேட்டேன். புரியாதவரைப் போல எதுக்காக என்றார். பாரதியாரைத் தொட்டு இருக்கீங்கல்லே அதான். என்றதும் அவராக என் கைகளை எடுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டார்.


நடுங்கிக் கொண்டிருக்கும் அந்த வயசாளியின் கைகளில் இருந்த வெம்மை என் உடலினுள் பரவுகிறது. கண்ணுக்குத் தெரியாத மகாகவிஞனின் கரத்தைத் தொடுவது போன்ற மன நெருக்கமும் சந்தோஷமும் உண்டானது. சில நிமிசங்களில் அவரது கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது. பேச்சற்ற மௌனத்தில் இருவரும் அமர்ந்திருந்தோம். இவரது மனதிலும் பாரதியார் மெல்லத் ததும்பிக் கொண்டிருந்தார். அந்த மௌனத்தைக் கலைக்காமல் அங்கிருந்து விடைபெற்றுத் திரும்பி வந்துவிட்டேன்.


மௌனத்தைக் காப்பாற்றுவது எளிதானதில்லை என்று எனக்குத் தெரியும்.


- எழுத்தாளர் ராமகிருஷ்ணன் [http://www.sramakrishnan.com/]



அருணகிரிநாதர் அருளிய முதல் திருப்புகழ்-"முத்தைத்தரு"

11:55 AM

ராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான........

பாடல்.......
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

"முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை "
முத்தினைப் போன்றொதொரு வெண்ணிறத்தின் எழிலுக்குஒத்ததாய் அமைந்தவொரு ஒளிமிகு இளஞ் சிரிப்புடனேதேவர்க்குத் தலைவனாம் இந்திரன் பெற்றிட்டதேவயானை எனும் கரிமகளின் நாயகனே!

"சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர"
அன்னையாம் உமையவள் அன்புடன் ஈன்றிட்ட சக்திவேல் எனும் ஆயுதத்தை கையினில் ஏந்துகின்றசரவணபவ என்கின்ற அறுமுகக் கடவுளே!முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே!தந்தைக்கே ஒரு மந்திரத்தின் பொருள் சொல்லி தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே!

"என ஓதும் முக்கட் பரமற்குச் சுருதியின்முற்பட்டது கற்பித்து இருவரும்முப்பத்து மு வர்க்கத்து அமரரும் ..... அடிபேணப்"
என்றெல்லாம் உனைத்துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு முன்மைக்கெல்லாம் மூத்ததான முழுமுதற் பொருளானசுருதியெனும் வேதத்தின் முற்றுப் பொருளான
"ஓம்" என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்தபிரமன் திருமால் இருவரும் கூடமுப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,

"பத்துத்தலை தத்தக் கணை தொடு"
திக்குக்கொரு தலையெனப் பத்துத்தலை படைத்திட்ட இராவணனின் தலைகள் சிதறி வீழ அன்றங்கு ஓர் அம்பை விட்டு அவுணரை அழித்த,

"ஒற்றைக்கிரி மத்தைப் பொருது"
ஒப்புவமை இலாத மந்திரமெனும் மலையினைமத்தாகவே கொண்டு பாற்கடலைக் கடைந்திட்ட,

"ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்"
அன்றொருநாள் அண்ணன் தம்பிகளுக்கிடையே மூண்டதோர் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளினிலே அதமத்தின் வழி நின்று அபிமன்யுவைக் கொன்ற ஜயத்திரதன் எனும் அரசர் கோமானை, "மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள் என்மகனின் மறைவுக்குக் காரணமான ஜயத்திரதனைக் கொல்லானேயாகில், அக்கினியில் புகுந்து அன்றே உயிர் துறப்பேன்" என சூளுரைத்த பக்தனாகிய அர்ச்சுனனை காக்கவென 'போரிலே ஈடுபடேன்' எனும் வாக்கினையும் மறந்துதன் கையில் தாங்கியுள்ள சக்கரத்தை விட்டெறிந்துசூரியனைச் சிலகாலம் சயனிக்கச் செய்ததாலே வெளிவந்த சிந்துராசனாம் ஜயத்திரதனைவிரைவாகக் கொல்லச் செய்தருளி உதவிட்ட,

"பத்தற்கு இரதத்தைக் கடவிய"
இத்துணை வல்லமை இயல்புடனே படைத்திருந்தும் அத்தனையும் காட்டாமல் அடக்கமாக நண்பனுக்குத் தேரோட்ட இசைந்து தேர்ப்பாகனாய் வந்திட்ட

"பச்சைப் புயல்"
மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட, அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும் மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்

"மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ..... ஒருநாளே"
மெச்சுகின்ற பரம் பொருளே! என்னை நீ பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் ஒருநாளும்உண்டோ என நான் இறைஞ்சுகின்றேனே!

[இனி வரும் வரிகள் முருகன் அசுரருடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது]
"தித்தித்தெய ஒத்தப் பரிபுரநிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக்"
தித்தித்தெய என்கின்ற தாளத்துக்கு இசைவாகமுத்துகள் அமைந்த சிலம்பினை அணிந்த நர்த்தனம் செய்கின்ற பதங்களை வைத்து பார்த்தவர் நடுங்கும் பத்திரகாளியும் எத்திக்கும் சுழன்று தாண்டவம் செய்யவும்,

"கழுகொடு ..... கழுது ஆடத்"
பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன் பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்,

"திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ..... என ஓதக்"
எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும் அட்டப் பயிரவர் என்கின்ற எண்மரும் ஆட்டத்தில் அழகிய இக்கூத்தினுக்கு ஏற்ப தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்னுமோர் தாள ஓசையினைக் கூறிடவும்,

"கொத்துப்பறை கொட்டக்"
கூடவே தாரை, தமுக்கு, தப்பட்டம் என்கின்ற பற்பல பறைவாத்தியங்களையும் முன்சொன்ன தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்கின்ற அதே தாளத்தில் அழகுற முழங்கிடவும்,

"களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகுகுத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை கொட்புற்று எழ"
பலகாலம் வாழ்ந்திருந்து, பல போர்களைப் பார்த்திட்ட கிழமான முதிர்ந்த கோட்டான்களும் மகிழ்ந்து குக்குக்குகு குக்குக் குகுகுகு, "குத்திப் புதை", "புக்குப் பிடி" எனகூக்குரலிட்டுக் குழறி, வட்டமெனச் சுழன்று இட்டமுடன் மேலே எழுந்திடவும்,

"நட்புற்று அவுணரை வெட்டிப் பலி யிட்டுக்"
தனக்கு வரமளித்த சிவனாரின் மகனென்னும் இணக்கத்தை மறந்து பகைகொண்ட அசுரர்களைவெட்டிக்கொன்றங்கு குவித்துப் பலிகொண்டு,

"குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ..... பெருமாளே."
அவுணர் குலத்துக்கு இசைவாய் நின்றிட்ட கிரௌஞ்சமெனும் மாமலையும் வேலாலே குத்துண்டு பொடிப்பொடியாய் உடைந்துபட அறவழியில் நின்றன்று அசுரருடன் போர் செய்த பெருமையிற் சிறந்தவரே!*************************************************************************************[அருஞ்சொற்பொருள்:
அத்திக்கிறை:: தெய்வயானை அம்மைக்குத் தலைவரே!;
சுருதி:: வேதம்;
ஒற்றைகிரி:: ஒப்பற்ற மந்தரமலை;
திகிரி: சக்கரம்;
பச்சைப்புயல்:: பச்சைமாமலை போல் மேனி கொண்ட திருமால்;
பரிபுர:: சிலம்புகள் அணிந்த;
கழுது:: பேய்கள்;
சித்ரப் பவுரி:: அழகிய கூத்து;
கொத்துப்பறை:: கூட்டமாக பல பறை வாத்தியங்கள்;
முதுகூகை:: கிழக்கோட்டான்;
கொட்பு:: சுழலுதல்;
அவுணர்:: அரக்கர்;
குலகிரி:: அசுரர்களின் குலத்துக்கு இயைந்த கிரௌஞ்ச மலை;
பொரவல:: போர் செய்ய வல்ல;
பெருமாள்:: பெருமை மிகுந்தவர் ]*************************************************************************************அருணாசலத்தில், அருணகிரிநாதர் முருகனிடமிருந்து, "சொல்லற; சும்மா இரு!" என உபதேசம் பெறுகிறார்.அதனைக் கேட்டு, சமாதியில் ஆழ்ந்த அருணகிரியார் முன் முருகப்பெருமான் மீண்டும் தோன்றி, "நம் புகழைப் பாடுக!" எனப் பணிக்கிறான்."என்ன சொல்லிப் பாடுவேன்? எப்படி உன்னை அழைப்பேன், கல்வியறிவு சிறிதுமில்லா இவ்வேழை" என அருணகிரியார் வேண்டுகிறார்."முத்தைத்தரு" எனத் தொடங்கிப் பாடு என செவ்வேட் பரமனும் அருள எழுந்ததே இந்தப் பாடல்.அதன் பின்னர் திறந்த வெள்ளம்தான் திருப்புகழ்!*************************************************************************************'மு' எனும் சொல்லைப் பிரித்தால் வருவது, ம்,உ,அ.இம்மூன்றும் சேர்ந்ததே பிரணவம் என்னும் ஓம் எனும் மந்திரம்.பிரணவத்தில் தொடங்கியே திருப்புகழ் அமைந்ததைக் கண்டு மகிழ்வோம்!*************************************************************************************வேலும் மயிலும் துணை!முருகன் அருள் முன்னிற்கும்!அருணகிரிநாதர் தாள் வாழ்க!*************************************************************************************
நன்றி- VSK ஆத்திகம் வலைப்பதிவு

தமிழ்க் கணிமை விருது - பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

7:17 PM

விசேட வேண்டுகோள் : இந்த அறிவித்தலை தங்களால் இயன்ற அளவில் பிற வலைப்பதிவுகள், மின்னஞ்சல் குழுக்கள், சஞ்சிகைகள் பிற ஊடகங்களில் மறுபிரசூரம் செய்து உதவ வேண்டுகிறேன்
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல்விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும்.

2007 ஆம் ஆண்டில் கனடாவின் மாண்ட்ரியாலைச் சேர்ந்த முனைவர் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு முதல் விருது வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சயைனான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

2008 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.

பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இறுதிநாள்: 31 மார்ச்சு 2008
பரிந்துரைகளை tcaward {at} gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செயப்படும்.
பரிந்துரை படிவங்களை http://tcaward.googlepages.com/ தளத்திலிருந்து பெறமுடியும்.

இழந்து விட்டோம் ஒரு உன்னத படைப்பாளியை!!!

2:47 PM


தமிழ் நவீன எழுத்தாக்கத்தில் மாபெரும் புரட்சி செய்த
எழுத்தாளர் சுஜாதா [ரங்கராஜன்] அவர்கள், 27-02-2008 புதன்கிழமை இரவு9.30மணியளவில், தமிழ்கூறும் நல்லுலகை விட்டு
மறைந்தார்.

அறிவியற் கருத்துக்களை தமிழுக்குள் கொண்டு வருவதில்
தன்னையும் தன் எழுத்தையும் அர்ப்பணித்து உழைத்த அந்த
எழுத்துச்சிற்பியின் மறைவு, தமிழ்மொழிக்கும் தமிழர் சமுதாயத்திற்கும்
மறுக்க முடியாத மாபெரும் இழப்பு!

தமிழ் சமுதாயத்தின் நலனிலும் தமிழர்தம் தொழினுட்ப வளர்ச்சியிலும்
மிகுந்த அக்கறை கொண்ட சுஜாதா அவர்கள், ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளிலும் ஈடுபாடு காட்டினார். ஈழத்தமிழர்களின் படைப்புக்களை
வெளிக்கொண்டு வருவதிலும் பங்களித்தார்.

புனைகதை,சிறுகதை,அறிவியற்கட்டுர

ைகள்,கவிதை,பண்டைத்தமிழிலக்கியம்,
திரைக்கதையாக்கம் என்று சுஜாதா தடம்பதித்த துறைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த அளவு பன்முகப்பட்ட அறிவைக்கொண்ட அவரின் சிம்மாசனம் இனி வெறுமையாகவே இருக்க பொகிறது.

நவீன எழுத்துச் சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த அஞலிகள் உரித்தாகுக.

ஆதித்தன்.
பெங்களூர். 28-02-2008.

என். சொக்கன் - தமிழ் எழுத்தாளர்

2:07 PM



என். சொக்கன் (N. Chokkan, பிறப்பு: ஜனவரி 17, 1977; ஆத்தூர், சேலம்) என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.

தொண்ணூறுகளில் எழுதத் துவங்கிய என். சொக்கன் இதுவரை சுமார் நூறு சிறுகதைகளும் இரு நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நூல்கள் வடிவில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வெளி வந்துள்ளன.

சேலம் ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் என். சொக்கன் ஒரு மென்பொருள் நிபுணர் ஆவார். இணையத்தில் இவர் தொடங்கி, நடத்திவந்த 'தினம் ஒரு கவிதை' என்னும் மடலாடற்குழு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவாகும்.

சிறுகதைத் தொகுப்புகள்

  • பச்சை பார்க்கர் பேனா
  • உன் நிலைக்கண்ணாடியில் என் முகம்
  • மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)

வாழ்க்கை வரலாறுகள்

  • அம்பானி ஒரு வெற்றிக்கதை
  • பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை
  • அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி
  • லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி
  • சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை
  • திராவிட்:இந்திய பெருஞ்சுவர்
  • ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை
  • நெப்போலியன்: போர்க்களப் புயல்
  • சல்மான் ரஷ்டி: ஃபத்வா முதல் பத்மாவரை
  • குஷ்வந்த் சிங்: வாழ்வெல்லாம் புன்னகை
  • அண்ணா(ந்து பார்!)
  • வீரப்பன்: வாழ்வும் வதமும்
  • வாத்து எலி வால்ட் டிஸ்னி
  • சார்லி சாப்ளின் கதை
  • நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்

அரசியல்

  • மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)
  • அயோத்தி: நேற்றுவரை
  • கேஜிபி: அடி அல்லது அழி
  • Hamas: பயங்கரத்தின் முகவரி
  • CIA: அடாவடிக் கோட்டை

குழந்தைகளுக்கான படைப்புகள்

  • கம்ப்யூட்டர்
  • விண்வெளிப் பயணம்
  • டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?
  • அப்துல் கலாம்
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
  • பில் கேட்ஸ்
  • அறிஞர் அண்ணா
  • நெப்போலியன்

பிற

  • தேடு: கூகுளின் வெற்றிக்கதை
  • நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா
  • வல்லினம் மெல்லினம் இடையினம் (மென்பொருள் துறைபற்றிய பன்முகப் பதிவுகள்)
  • நலம் தரும் வைட்டமின்கள்

English

  • Hi Computer
  • Vicky In Space
  • Narayana Murthy: IT Guru (Translated By: Lakshmi Venkatraman)
  • Dhirubai Ambani: (Translated By: R Krishnan)

வெளியாகும் தொடர்கள்

  • கில்'லேடி'கள் ('பெண்ணே நீ' மாத இதழ்)
  • வெற்றிக்குச் சில புத்தகங்கள் ('குமுதம்' வார இதழ்)

என். சொக்கனின் பேட்டிகள் / அறிமுகங்கள்


- கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிங்கை நகர் - பண்டைய ஈழத் தமிழர் தலைநகரம்

8:47 PM

வல்லிபுரத் திருமால் கோயில்

சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு.

சிங்கை நகர் பற்றிய கலாநிதி குணராசா பின்வருமாறு கூறுவார்: '... உக்கிரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராச்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்தில் திக் விஜயம் ஒன்றினை மேற்கொண்டான். அவன் வன்னி மார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர்கள் ஏழுபேரும் எதிர்கொண்டு வந்து வன்னி நாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். உக்கிரசிங்கன் அதற்குச் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்ட தலைநகர் சிங்கை நகராகும்... ' (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம் 59).

வன்னியர்கள் வாழ்ந்த பகுதி அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. இதற்குரிய முக்கிய காரணங்களிலொன்று வன்னிச் சிற்றரசர்கள் பலதடவைகள் யாழ்மன்னர்களுட்பட ஏனைய மன்னர்களுக்கு அடங்காமல் வாழ்ந்தவர்கள் என்னும் கூற்று. சில சமயங்களில் யாழ்மன்னர்களுக்கெதிராகக் கலகங்களையும் தூண்டி விட்டுள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை (யாழ்ப்பாணவைபவமாலை, முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம் 37-40) விபரிக்கும். மேலும் பழைய வரலாற்று நூல்களில் பூநகரி, பல்லவராயன் கட்டு போன்ற வன்னிப் பகுதிகளை 'வெளிநாடு ' (யாழ்ப்பாணவைபவமாலை: பக்கம் 29) என்றுதான் அழைத்துள்ளார்கள். இவ்விதமான வெளிநாடொன்றிற்கு, அதிலும் அதிக அளவில் எதிர்ப்புச் சூழல் நிலவியதொரு இடத்துக்கு எதற்காக இராஜதானி கதிரைமலையிலிருந்து மாற்றப்பட்டது ?

'...சிங்கை நகர் என்ற பெயர் கலிங்கநாட்டு நகரங்களுள் ஒன்றாகிய ஸிங்கபுரத்தின் தொடர்புடைய பெயர் என்று கொள்ள இடமுண்டு.... சிங்கை நகர் என்ற பெயர், முதன் முதல் கதிரைமலையிலிருந்து தலைநகரை வேறிடத்திற்கு மாற்றிப் புதிய தலைநகர் ஒன்றினை உருவாக்கிய உக்கிரசிங்கனின் பெயரைத் தாங்கி சிங்க(ன்) நகர் என விளங்கியிருந்தது எனக் கொள்வதே சாலப் பொருத்தமானது. ' (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம் 59) என்பார் க.குணராசா. இதுபற்றிய கலாநிதி புஷ்பரட்ணத்தின் கருதுகோள் வேறானது. அவர் சோழரே சிங்கைநகரென்னும் பெயர் ஏற்படக் காரணமென்பார்: ' ...இப்பெயர் ஒற்றுமை கூடக் கலிங்கநாட்டுச் சிங்கபுரத்தொடர்பால் நேரடியாக வட இலங்கைக்கு வந்ததெனக் கூறுவதைவிடத் தமிழகத்துடனான தொடர்பால் வந்ததெனக் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஏனெனில் தமிழகத்திலும் இப்பெயர் நீண்டகாலமாகப் புழக்கத்திலிருந்து வந்துள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் சந்திராதித்ய காலச் செப்பேடு சிங்கபுர என்ற இடத்தில் இவன் அமைத்த ஆலயம் பற்றிக் கூறுகிறது.... அதே போல வட இலங்கையை வெற்றி கொண்ட முதலாம் பராந்தக சோழன் கால இரு நகரங்கள் சிங்கபுரம், சிங்கபுரநாடு என்ற பெயரைப் பெற்றிருந்தன. அத்துடன் கொங்கு மண்டலத்திலுள்ள காங்கேயநாடு சோழர் ஆட்சியின்போது சிங்கை என்ற இன்னொரு பெயரையும் பெற்றிருத்தது. இச்சிங்கை நாட்டு வேளாளத் தலைவர்களுக்கு சோழர்கள் இட்ட மறுபெயர் சிங்கைப் பல்லவராயர் என்பதாகும். இவர்கள் சோழருடன் இணைந்து இலங்கை நாட்டுடனான அரசியலிலும், படையெடுப்புக்களிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டதற்குப் பல சான்றுகள் உண்டு.. ' (நூல்: தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - ப.புஷ்பரட்ணம்; பக்கம் 183)

முதலியார் இராசநாயகம் 'கோட்டகம ' கல்வெட்டில் 'பொங்கொலி நீர்ச் சிங்கை நகராரியன் ' எனக் குறிப்பிட்டிருப்பதைக் காரணம் காட்டி அதற்குரிய பிரதேசமாக வல்லிபுரமே அவ்விதமான துறைமுகப் பொலிவுள்ள நகரென்று கருதுவார். ஆனால் கலாநிதி க.குணராசாவோ இது பற்றிப் பின்வருமாறு கூறுவார்: '....யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது.... ' (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம் 60) பதினான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவத்தைக் கூறுவது கோட்டகம கல்வெட்டு. இக்காலகட்டத்தில் கலாநிதி க.குணராசா குறிப்பிடுவது போல் யாழ்ப்பாணக் கடனீரேரி பொங்கு கடலாக இருந்ததா என்பது சந்தேகத்திற்குரியது. இதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்னரே மாந்தை கூடத் தன் முக்கியத்துவத்தினை இழந்து விட்டது. பொங்கு கடலாகவிருந்த யாழ்ப்பாணக் கடனீரேரி மிக விரைவாக அதன் இன்றைய நிலைக்கு மாறி விட்டதா ?

இவ்விடத்தில் முதலியார் இராசநாயகத்தின் இவ்விடயம் சம்பந்தமான கருதுகோள்களை ஆராய்வதும் பயனுள்ளதே. இவரது 'யாழ்ப்பாணச் சரித்திரம் ' பண்டைய யாழ்ப்பாணம் பற்றி விபரித்தபடியே தொடங்குவது குறிப்பிடத்தக்கது. அதில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது: 'இப்போது குடாநாடாக விருக்கும் யாழ்ப்பாணம், முன்னொரு காலத்தில் அதாவது கிறிஸ்துவுக்கு அநேக ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே, இரண்டு தீவுகளாகவிருந்தது. மேற்கே நாகதீவம், மணிநாகதீவம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் நாமங்களால் வழங்கபப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமைத் முல்லைத்தீவு, எருமைதீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் ஆக இரு பிரிவாக இருத்தது. காலந்தோறும் பூகம்பங்களினாலும், பிரளயங்களினாலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த பெருந்தீவகம் பலதீவுகளாகப் பிரிக்கப்பட்டது. காரைதீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகளும், வலிகாமமும் அப்பெருந்தீவகத்தின்பகுதிகளேயாம். அவ்வாறே கிழக்கே ஒன்றாகவிருந்த சிறுதீவகம் களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளியென்னும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பண்ணைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக்கடல் என்னுங் களப்புக்கடல்கள் முன்னே வங்காளக்குடாக்கடலுடன் சேர்ந்து, ஆழமும் அகலமும் உள்ளனவாயிருந்தன; அன்றியும் மேலைத்தேசங்களிலும், சீனம் முதலிய கீழைத்தேசங்களிலுமிருந்து போக்குவரவு செய்யுங் கப்பல்களுக்குப் பெரும் வழியாகவும், சோளகம் வாடைக்காற்றுக்கள் தொடங்குங் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு, அக்கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன ' ( 'யாழ்ப்பாணச்சரித்திரம் '; பக்கம்1-2). இவ்விதமாகவிருந்த நிலை காலப்போக்கில் மாறி யாழ்ப்பாணக்குடாநாடு உருவாகியதற்குக் காரணங்களாக வங்காளக்குடாக்கடலின் அலைகளால் ஒதுக்கப்படும் மணற்றிரளினையும், வடக்கில் முருகைக்கற்பூச்சினால் உண்டாக்கப்படும் கற்பாறைகளையும், தெற்கிலிருந்து சோளகக்காற்றினால் கொண்டுவரப்படும் மணலினையும் சுட்டிக் காட்டுவார் முதலியார் இராசநாயகம்.

மேலும் இவரது ஆய்வின்படி கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி..மூன்றாம் நூற்றண்டுவரையில் மாதோட்டம் புகழ்மிக்க துறைமுகமாகவிருந்தது. கிரேக்கர், ரோமர் மற்றும் அராபியர்கள் எனப்பலர் மாதோட்டத்துறைமுகத்து தமது கீழைத்தேய வியாபாரநிமித்தம் வந்து போயினர். மன்னாரிலும் ,மாதோட்டத்திலுங் காணப்படும் பெருக்குமரங்கள் அராபியர்களால் கொண்டுவரப்பட்டவையே என்பது இவரது கருத்து. மாதோட்டம் பற்றி யாழ்ப்பான இராச்சியம் பின்வருமாறு விபரிக்கும்: 'அக்காலத்தில் இலங்கையின் பிரசித்த துறைமுகம் மாதோட்டம் என்னும் பெருந்துறையே. அதைப் பிரதான துறைமுகமாகக் கொண்டு வங்காளக்குடாக்கடலுக்கூடாய்க் கீழைத்தேசங்களுக்குப் போகும் மரக்கலங்களும், சீன தேசத்திலிருந்து வரும் மரக்கலங்களும் யானையிறவுக்கடலுக்கூடாகப் போக்குவரவு செய்வதுண்டு ' (யாழ்ப்பாணச்சரித்திரம் '; பக்கம் 19). அக்காலகட்டத்தில் நாவாந்துறை, பூநகரி மற்றும் கல்முனை ஆகியனவும் துறைமுகங்களாக விளங்கியதாகவும், நாவாந்துறையிலிருந்து வழுக்கியாற்றின் வழியே தலைநகராயிருந்த கதிரைமலைக்கு சங்கடம் என்னுந் தோணிகளில் வியாபாரப்பண்டங்கள் ஏற்றி செல்லப்பட்டனவென்றும், இதனாலேயே நாவாந்துறைக்கு சங்கடநாவாந்துறையென்னும் பெயர் இப்பொழுதும் வழங்கிவருவதாகவும் இராசநாயகம் அவர்கள் மேலும் கருதுவார். இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய மாதோட்டம் 'மண்ணேறிட்டிருந்தபடியால் துறை உபயோகம் அருகி, ஒன்பதாம் நூற்றாண்டளவில் கப்பல்கள் அத்துறைக்கு வருதல் முற்றாக ஒழிந்து, அதன் பின் முஸ்லீம்கள் வரத்தொடங்கிய காலத்தில் அவர்கள் நூல்களில் 'கலா 'வென்றழைக்கப்பட்ட ஊராத்துறை முக்கியத்துவம் பெற்றதென்று கருதுவார் இராசநாயகம் அவர்கள்.

சி.பத்மநாதனின் மாந்தை பற்றிய கருத்தும் இத்தகையதே. 'சோழராட்சிக்குப் பிற்பட்ட காலத்தில் மாந்தை நகரம் வீழ்ச்சியுற்றது. பதினோராம் நூற்றாண்டின்பின் மாந்தைத் துறைமுகத்திற்குத் தூரதேசங்களிலிருந்து ஆழ்கடல் வழிச் செல்லும் பெருங்கப்பல்கள் வந்திருந்தமைக்குச் சான்றுகளில்லை. ஆழ்கடல் வழியான வாணிபத்தில் ஒரு பிரதானதொடர்பு நிலையம் என்ற நிலையினை இழந்தமையால் மாந்தையில் நகர வாழ்க்கை சீரழிந்தது. கி.பி.1050 ஆம் ஆண்டிற்குப் பிறபட்ட சாசனங்களிலும் இலக்கியங்களிலும் மாந்தையிலுள்ள வணிகரைப்பற்றியோ அங்கிருந்த கட்டட அமைப்புகளைப்பற்றியோ குறிப்புக்கள் காணப்படவில்லை ' என்பார் அவர் (கட்டுரை: 'இலங்கை தமிழ வணிகக் கணங்களும் நகரஙக்ளும் '- சி.பத்மநாதன்; 'சிந்தனை ' ஆடி 1984 இதழிலில்). கி.மு காலத்திலிருந்தே வங்காளக்கடலினூடு தூர நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் யானையிறவுக் கடலினூடு மாந்தை துறைமுகம் வழியாகப் பயணிக்க முடிந்ததால் அந்நகர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவிருந்தது. காலப்போக்கில் யானையிறவுக் கடல் மண்மேடிட்டுத் தூர்ந்ததால் அது தடைபடவே காலப்போக்கில் மாந்தை தன் முக்கியத்துவத்தினை இழந்தது.

இதேசமயம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இபின் பதூத்தா என்னும் முஸ்லீம் பயணி ஆரிய மன்னனை இலங்கையின் சுல்தானெனவும், பல கப்பல்களுடன் விளங்கிய கடற்படையினை அவன் வைத்திருந்தது பற்றியும் தெரிவித்திருக்கின்றான். இத்தகைய மன்னனின் சிங்கை நகர் அமைந்திருக்கக் கூடிய இடம் வல்லிபுரம் போன்றதொரு பகுதியாக இருந்திருப்பதற்கே அதிகமான சாத்தியங்களுள்ளன.

இத்தகையதொரு நிலைமையில் க.குணராசா அவர்கள் 'யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது ' என்று பொதுவாகக் கூறுவது பொருத்தமற்றதாகவே படுகிறது. கோட்டகம் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள 'பொங்கொலி நீர்சிங்கைநகர் ' பூநகரியினை அண்டிய வன்னி மாவட்டத்தில் இருப்பதை வலியுறுத்துவதற்காக அவ்விதம் கூறினார் போலும். அவர் கூறுவது உண்மையானால் கடந்த எட்டு நூற்றாண்டுகளுக்குள் பொங்கு கடலாக விளங்கிய யாழ்ப்பாணக் கடனீரேரி தூர்ந்து இன்றைய நிலையினை அடைந்திருக்க வேண்டும்.

மேலும் யாழ்பாடி பற்றிய யாழ்ப்பாண வைபவமாலையின் கூற்றினைக் குறிப்பிடும் கலாநிதி க.குணராசா பின்வருமாறு குறிப்பிடுவார்: '...கண்தெரியாத ஒரு யாழ்ப்பாடிக்கு இசைக்குப் பரிசாகத் தனது இராச்சியத்திற்கு வடக்கே இருந்து ஒரு மணல் வெளியே தமிழ்மன்னன் ஒருவன் பரிசளித்ததாகக் கூறும் இச்சம்பவத்தின் உண்மை பொய் எவ்வளவு என்பதை ஆராய்வதைவிடுத்து மணல் வெளியாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கேயிருந்தது என்றால், அதைப் பரிசாகத் தந்த மன்னன் இருந்தவிடம் தென்நிலப்பரப்பாக இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதே.. ' ((நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம் 62). இது பற்றிய கலாநிதி ப.புஷ்பரட்ணத்தின் கூற்றும் இத்தகையதே.

'... இதில் சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடர் எனக் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15ஆம் நூற்றாண்டில் ஏற்படும்வரை இதும்மணற்றி, மணவை, மணற்றிடர் என அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்களுண்டு.... இதில் வடக்காகவுள்ள இப்பிராந்தியத்தை சிங்கையில் இருந்து ஆட்சிபுரிந்த மன்னன் யாழ்ப்பாணனுக்கு வழங்கினான் எனக் கூறுவதிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக சிங்கையிருந்தது தெரிகிறது. இங்கே யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக வன்னிப் பிராந்தியமே இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தக்கது... ' (நூல்: 'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு '- ப.புஷ்பரட்ணம்; பக்கம்: 168). உண்மையில் இவர்களிருவரும் கூறும் யாழ்ப்பாண வைபவமாலையில் '.... அரசன் அதைக்கேட்டு மிகுந்த சந்தோசம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர் என்னும் நாட்டைக் கொடுத்தான்.. '(நூல்: 'யாழ்ப்பாண வைபவமாலை ' - மயில்வாகனப்புலவர், முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம்:24) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.. சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடரென்று கூறப்படவில்லையே. 'இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர் ' என்றுதானே கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடதிசையில்தானே யாழ்ப்பாணமுள்ளது. இதிலென்ன ஆச்சரியம் ? சிங்கை நகரிலிருந்து ஆண்ட மன்னன் இலங்கையின் வடக்கிலுள்ள மணற்றிடரென்பதை ஏன் கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும் சிங்கை நகருக்கு வடக்கிலென்று வலிந்து பொருள்கண்டார்கள் ? இலங்கை என யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படுவதை கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும் சிங்கைநகரினைக் குறிப்பதாகக் கருதுகின்றார்களா ? ஏன் ?

இவற்றையெல்லாம் பார்க்கும்போது சிங்கைநகர் பூநகரிப்பகுதியில் இருந்திருக்கலாமென்று ப.புஷ்பரட்ணம் மற்றும் க.குணராசா ஆகியோர் கருதுவது காத்திரமான வாதமாகப் படவில்லை. மேலும் யாழ்பாடி கதையினை ஆதாரம் காட்டும் அவர்கள் அதில் யாழ்ப்பாணத்தை (மணற்றிடர்) சிங்கை நகருக்கு வடக்கிலுள்ளதொரு நகராக வலிந்து பொருள்கண்ட விதமும் எப்படியாவது தங்களது 'சிங்கை நகர் பூநகரிப் பகுதியிலிருந்துள்ளதென்ற ' கருத்தினை எப்படியாவது நிறைவேற்றவே அவர்கள் முனைந்துள்ளார்களோவென்ற ஐயத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் ப.புஷ்பரட்ணம் அவர்கள் தனது சிங்கை நகர் பற்றிய கருத்தினை நிறுவுவதற்காக பூநகரிப்பகுதியில் கிடைக்கப்பெறும் கட்டடப்பகுதிகள், நாணயங்கள் மற்றும் இடப்பெயர்களையும் துணைக்கழைப்பார். ஆனால் இவையெல்லாம் அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தினை வலுப்படுத்துகின்றனவேயல்லாமல் அங்கொரு இராஜதானி இருந்திருப்பதற்கான உறுதியான சான்றுகளாகக் கருதமுடியாது. வரலாற்றில் கி.மு.காலகட்டத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்றிருந்த பூநகரிப்பகுதியில் அரசர்கள், சிற்றரசர்கள், வணிகக்கணங்கள் மற்றும் படைத்தலைவர்களுக்கெல்லாம் மாளிகைகள், வியாபாரநிலையங்கள், மற்றும் அரசமுக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் இருந்திருப்பது இயல்பே. அத்தகைய பகுதியில் இதன் காரணமாகப் பெருமளவில் நாணயங்கள் கிடைக்கப்படுவதும், அரச முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்கள் நிலவுவதும் பெரிதான ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. இவற்றைக் கண்டுவிட்டு , விழுந்தடித்துக் கொண்டு, இதற்குக் காரணம் அங்கொரு அரசு இருந்ததுதான் என்று முடிவுக்கு வந்து விடுவது உறுதிமிக்க தர்க்கமாகப் படவில்லை. இதற்கு மாறாக கி.மு.காலத்திலிருந்தே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கிய பூநகரிப் பகுதி பின்னர் சோழர் காலத்திலும், யாழ்ப்பாண அரசின் காலத்திலும் அதன் கேந்திர, வர்த்தக, இராணுவரீதியான முக்கியத்துவத்தினை இழக்காமலிருந்துள்ளதையே மேற்படி கட்டடச் சிதைவுகளும், இடப்பெயர்களும் மற்றும் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன என்று வேண்டுமானால் வாதிடலாம். அது பொருத்தமாகவும், வலுவானதாகவுமிருக்கும்.

உசாத்துணை நூல்களில் சில:

1. 'யாழ்ப்பாண வைபவமாலை '- மாதகல் மயில்வாகனப் புலவர் (முதலியார் குல. சபாநாதன் பதிப்பு)

2. 'யாழ்ப்பாணச் சரித்திரம் ' - முதலியார் செ.இராசநாயகம்

3. 'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு '- ப.புஷ்பரட்ணம்

4. 'யாழ்ப்பாண அரச பரம்பரை ' - கலாநிதி க.குணராசா

5. 'இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் (கி.பி.1000 - 1250) -சி.பத்மநாதன் (ஆய்வுக் கட்டுரை; 'சிந்தனை ' ஆடி 1984 இதழ்).

6. 'இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை ' - கலாநிதி கா.இந்திரபாலா



நன்றி-திண்ணை