ஆண்டொன்று ஓடியது / பறந்தது / நீந்தியது!!!

3:16 PM

இத்தால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....,
ஆங்கில நாட்காட்டியின்படி, இன்றோடு நான் பதிவுலகில் தடம் பதித்து ஒரு ஆண்டு கழிந்தது என்பதாகும். இந்தச்செய்தியை முக்கியமற்றதாக்கும் சதிநோக்கில் இன்றையதினம் பல செய்திகள் வெளிவந்த போதும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, இப்பதிவைப் படித்து, தாம் முன்செய்த பாவவினைகளை
கழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என் வணக்கம்.

என்ன எழுதுவது என்று தெரியாமல் நிறைய நாட்கள் பதிவைத் தொடவில்லை.
பதிவைத் தொடவில்லையாதலால், பதிவொன்று வைத்திருக்கிறேன் என்பதை மறந்து சில வாரங்கள் கழிந்தன. எப்போதாவது நடக்கும் கிரகமாற்றங்கள் பதிவுலகத்தை ஞாபகப்படுத்துவதால், மூக்கு என்று ஒன்று இருந்தால் சளி என்று ஒன்று இருக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை மீறாது, தமிழ்வற்றிப்போய் என் பதிவு காய்ந்துவிடாமல் அவ்வப்போது பதிவு போட்டுவருகிறேன்.

தமிழ்கூறும் நல்லுலகம் செய்த தவப்பயனாக, இன்னும் ஆறுமாதங்களுக்கும்
இதே நிலை நீடிக்கும். அதன்பிறகு ஏற்படப்போகும் கிரகமாற்றத்தினால் நாள்தோறும் என்பதிவுக்கு முகங்கொடுக்கும் சங்கடநிலை அனைவருக்கும் வரக்கடவது!

பதிவு இடும் தொழில்நுட்பம், தமிழை இணையத்தில் எழுதும் முறைகள், தமிழ்மணம் போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தி, என்னையும் ஒரு வலைப்பதிவராக்கி அழகுபார்க்கவேண்டி,
(திருமங்கலத்தில் அழகிரியைப்போல்) கடுமையாக உழைத்து,
என் தளத்தின் வார்ப்புருமுதற்கொண்டு அனைத்தையும் வடிவமைத்து, (இடைக்கிடையே நான் விட்ட கொட்டாவிகளையும் சகித்துக்கொண்டு,) இன்று நான் இந்த நிலைக்கு(?) வரக்காரணமாக இருக்கும் நண்பர் (தோழர்)ஸ்கந்தகுமார் நிமலப்பிரகாசன் அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து மகிழும் இந்த இனிய வேளையிலே...,
இனிமேலும் எனக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் பெறற்கரிய பெரும் பேறு, அவருக்கு மட்டுமே இருப்பதை ஞாபகப்படுத்தி வைக்கிறேன்.

காசு கொடுத்தால்தான் வலைப்பதிவு வைக்கமுடியும் என்ற நிலை இருந்தால்,
ஒரு தலைசிறந்த வலைப்பதிவரை இந்தச்சமூகம் இழந்திருக்கும். அப்பேரிழப்பை தடுத்து நிறுத்தி, என் உரைநடைத்தமிழ் தவழ, ஒரு தரை தந்த (இலவசமாக),
கூகுள் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவிக்கிறேன்.

அத்துடன், என்பதிவுகளை திரட்டி வழித்தெடுத்து பிறபதிவர்தம் கண்காணச்செய்து, அவர்கள் காறித்துப்பும் முன்பே, பட்டியலில் இருந்து அப்புறப்படுத்தி காத்து ரட்சிக்கின்ற தமிழ்மணம் திரட்டி குழுவினருக்கும்,
எப்போதாவது இருந்துவிட்டு நான் எட்டிப்பார்க்கும் ஆளாக இருந்தாலும்
என்முயற்சி இன்றியே பதிவை இணைத்துக்கொள்ளும்
இலங்கை வலைப்பதிவர் திரட்டியின் நிர்வாகிகளுக்கும், இன்னும் என்பதிவுகள் எங்கெங்கெல்லாம் திரட்டப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் நிர்வாகிகளாக இருக்கும் புண்ணியவான்களுக்கும் நன்றிகள்.


அப்படி, அவ்வப்போது நான் போடும் பதிவுகளுக்கு, (என்னைப்போல அல்லாமல்)
சுறுசுறுப்பாக கருத்துக்களை அள்ளி வழங்குவதற்காக பாரி மன்னனின் பேரப்பிள்ளைகள் பதிவுலகத்தில் பிறந்து உலா வருகிறார்கள். (கவனிக்க! என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம்!) அவர்களுக்கும் என் நன்றியறிதல் சென்றடைகிறது. என்பதிவுக்கு வரும் கருத்துக்கள் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துக்கு மாற்றாக வருவதில்லை. இந்தப்பதிவினால் பலர் உளரீதியாக பாதிப்புறப்போவது நிச்சயம் என்பதால், இன்றுமுதல், மாற்றுக்கருத்துக்களே அரங்கேறும் என்று களிப்பெய்துகிறேன். (பின்னூட்டம் என்ற சொல், FEEDBACKஎன்ற ஆங்கிலச்சொல்லின் தாக்கம் உள்ளதால் மட்டுமன்றி, என் பின்னால் நின்று எதை ஊட்டினாலும் நான் ஏற்பதில்லையாதலாலும் தவிர்க்கமுடியாதநிலையால் அச்சொல் தவிர்க்கப்படுகிறது.)

இந்த வலைத்தளத்தின் அத்தியா"வசிய"த் தேவைக்காக, சில பதார்த்தங்கள் கி.பி.2008ம் ஆண்டு திருடப்பட்டன. அவையாவன:
(தி.ப.இ. :- திருடப் ட்ட டம்)
1] தலைப்பு- காலப்பெருங்களம்.
தி.ப.இ:- எட்டயபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்
சுப்பிரமணியத்தின் வீடு.
2] தஞ்சைப்பெரியகோயில் விமானம்.
தி.ப.இ:- தஞ்சைப் பெரியகோயில் விமானம்.


இந்த ஒருவருட காலமாக, தெரிந்தோ தெரியாமலோ என் எழுத்துக்கள் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், எந்தச் சகோதர / சகோதரியாவது என்பதிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், தயவு செய்து என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற வார்த்தையை, என்னிடம் எதிர்பார்த்தால், அதனால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். "உன் எழுத்து மற்றவர்களை எந்தவகையிலாவது பாதிக்கும் போது தான், அது வெற்றி பெறுகிறது" என்பதை, ஒருநாள் என் முன் தோன்றிய ஒரு மகான் திருவாய்மலர்ந்தருளினார்.
(அப்போது நான் கண்ணாடியின் முன் நின்றேன் என்பது இங்கு தேவையில்லாத விடயம்!)

ஆதித்தன்
27-01-2009.

சாவோடிவை போகும்! - திருக்குமரன் கவிதைகள்

3:14 PM

கண்ணுருட்டிக் கண்ணுருட்டிக்
களவாய் எனை எடுத்து
உன்னிலெனை இறுக்கி
ஒட்ட வைத்துயிர் குடித்து
ஏனென்றே விளங்காமல்
எனையெறிந்து நீ போக
நான் நின்று நடுத்தெருவில்
அழுவனென்றா நினைத்தாய்?

போ.....

மண்ணளவும் கவலையில்லை!
மரித்தது போல் ஆனாலும்
எண்ணி இதைப்பற்றிக் கவலையுறேன்.
வாழ்வோட்டம்
என்னை இரும்பாக மாற்றும்தான்!
ஆனாலும்......,
கடல் பார்க்க, மரம் பார்க்க
நாம் போன இடம் பார்க்க,
சொன்ன கதை எல்லாம்
சுத்திவரும்.
போகட்டும்!

மனக்கொதிப்பு, உடற்கொதிப்பு
எல்லாமே உன்னிடத்தில்
தினம் தினம் நான் சமர்ப்பித்து
திருப்தி அடைந்த சுகம்
இனியில்லை என்றாலும்,
எனக்கென்ன இது பெரிய
பனிப்போரா?
"மறக்காமல் தினம் உருகிச்சாவதற்கு"
விதி வந்துந்தி எமை
வேறாக்கி....,
இன்னொரு கை

உன்மீது தொடுவதற்கு உரிமை கொண்டால்...?

நான் 'பெரிசாய்'
நொந்தொடிந்து போகேன்!?
நெகிழேன்!?
இருந்தாலும்......

சின்னக்கண்கலக்கம்,
தொண்டை அடைத்தபடி
சொற்கள் வரமறுக்கும்.
நெற்றிச் சுருக்கு விழும்,
நெஞ்சடைக்கும், வாய் குளறும்.
பற்றுதல் அற்றுப்போம்!
பார்வைத்திரை நடுங்கும்.

'சற்றுக் காலத்தில் என்
சாவோடிவை போகும்'
சிற்றின்பப்பிரிவில்லை
என அறிவேன். என்றாலும்
மற்ற மனிசரைப்போல்
கவலையுறேன்.
நீ போடி.


நன்றி:
கவிஞர் திருக்குமரன்.
"திருக்குமரன் கவிதைகள்".

என் வானிலே.....

1:03 PM

எங்கும் பரந்து நிரம்பிக்கிடக்கிறது வானம். ஏதுமற்ற ஒன்று எப்படி எல்லாமாக முடியும் என்பதற்கான விடை கண் முன்னே விரிந்து கிடக்கிறது! உச்சிக்கொம்பிலிருந்து வான்பார்க்கும் குருவியைப்போல பல நாட்கள் அதையே பார்த்துக் களித்திருக்கிறேன். என் இரவு பகல் வேளைகளும் சிலவேளை வான்பார்த்தலில் கழிந்திருக்கின்றன.

பெரும்பாலும் பகலில் காகங்கள் ஆட்சிசெய்யும் வானம் கொழும்பினுடையது.
பருத்தித்துறை இரவுகளை மாம்பழம்தேடும் வௌவால்களோடு, சில உலோகப்பறவைகளும் சுற்றின. ஊரில் பின்னேரத்தில் உலாப்போகும் கோழிகுஞ்சுகளை கைப்பற்ற பருந்துகளும் வான்மீது உலாத்தும். "பருந்து மூன்று தரம் சுத்திப்போட்டு அப்பிடியே கீழபாய்ஞ்சு கோழிக்குஞ்சை லபக் என்று பிடிச்சுக்கொண்டு போயிடும்." என்று பாட்டிமார் பேரக்குழந்தைகளுக்கு சொன்ன கதை ஞாபகம்.

வடிவம் அற்ற ஒரு வடிவமாய் உலாவரும் முகில்களில் இருக்கும் அழகு பெண்களில் கூட இல்லாதது. வெண்ணை திரண்டதைப்போல வானமெங்கும் சில நேரம் நிரம்பி நிற்கும்.சில நேரம் ஒன்றுமே இருக்காது. எந்தவொரு காட்சியும் ஒன்றை ஒன்று ஒப்பிடமுடியாத அளவு, ஈர்த்தெடுக்கும்.

பௌர்ணமிஇரவுகளில் ஊரில் வாழ்ந்த காலங்கள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. பிள்ளையார் கோயிலில் சாமப்பூசை மணிஅடித்து ஓய்ந்தபிறகுதான், அண்டைவீட்டு பெண்கள் சிலர் வம்பளக்க வருவார்கள். அம்மம்மாவின் மடியில் இருந்துகொண்டு, ஊட்டுவதை தின்று கொண்டு அப்போதும் வான் பார்ப்பேன். மாமரக்கிளைகளூடாக நிலவொளி விட்டுவிட்டுப் பாயும். சிலநேரம் புட்டு, சில நேரம் இடியப்பமும் சொதியும். யாழ்ப்பாணச்சமையலில் உறைப்புக்கு பஞ்சம் வந்த சரித்திரம் கிடையாது. எனக்கு சொல்லப்படும் கதைகளில் வரும் மாந்தர்கள்
அந்த நிலவுவானத்தில் உலவுவார்கள். நரி வரும். முயல் வரும். வடைதிருடும் காகம் வரும். ராசாக்கள் வருவினம். இப்பிடி எத்தனையோ!!

வானம் என்றால் விமானம் இல்லாமலா? சிறுவயதில் வான்பார்த்துகொண்டிருந்த என்னை, மண்குழிக்குள் பதுங்கவைத்த பெருமை விமானங்களையே சாரும். அது தவிர, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சொந்தக்காரர்களை வழியனுப்பப் போகும்போது, பயணியர்விமானங்களை ஓரளவு அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. "நாங்கள் எப்ப பிளேனில போவம்?" எண்டு அம்மாவை நச்சரித்த நாட்களும் உண்டு.
எவ்வளவோ நாட்கள்தான் கீழே இருந்து அண்ணாந்து வானத்தைப்பார்ப்பது?

அன்று, விமானத்தில் ஏறியபோது, பயத்தைக்காட்டிலும் வானத்திலிருந்து பார்த்தால் வானம் எப்படியிருக்கும் என்ற ஆவலே மிஞ்சிநின்றது. அதிஷ்டவசமாய் யன்னலோர இருக்கை வேறு. விமானம் கிளம்பி மேகங்களை கிழித்துக் கொண்டு பாய்ந்து, பின்பு நேராகப் பறந்தது. யன்னலுக்கு வெளியே வெள்ளைவெள்ளையாய் பஞ்சுப்பொதிகளை நிரப்பி வைத்திருப்பதைப் போல தோன்றியது. ச்சே!இவ்வளவுதானா? இதைவிட பூமியில் இருந்து ரசிப்பது எவ்வளவோ பரவாயில்லை.

எவ்வளவு நேரம்தான் இந்த பஞ்சுப்பொதிகளையே பார்த்துக்கொண்டிருப்பது? அந்த நேரம் பார்த்து ஒரு விமானப்பணிப்பெண் வந்து ஏராளமாய் ஏதேதோ சொல்லி, தாராளமாய் புன்னகைத்தாள். வெள்ளைப்பஞ்சுவரிசையை விட அவள் பல்வரிசை ரசிக்ககூடியதாய் இருந்ததென்று சொன்னால், நீங்கள் ரசிப்பீர்களோ தெரியவில்லை.

ஆதித்தன்.
09-01-2009

நூலின்றி அமையாதென் வாழ்வு - 3

9:01 AM


"பன்னெடுங்காலமாக நீங்கள் அழுதுபுலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல்லாம் என் இதயம் வெடித்துச்சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப்பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா?"

என்று சொன்னது அம்பேத்கரின் உதடுகள் அல்ல! காலம்காலமாக ஆதிக்கவர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு
கீழ்சாதி எனப் பிற்படுத்தப்பட்ட அப்பாவி உயிர்களின் வேதனை, வெள்ளமாகப் பாய, அம்பேத்கரின் இதயம் சொன்ன வார்த்தைகள் இவை.

விகடன் பிரசுரத்தின் வாயிலாக, அஜயன்பாலா எழுதியிருக்கும் "அம்பேத்கர்" என்ற நூல் அவரின் வாழ்க்கையை உணர்ச்சிபடக்கூறுகிறது. அம்பேத்கரின் குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும் அவருக்கு, மேல்சாதிமக்களால்
நடந்த கொடுமைகளைப் படிக்கையில், சாதித்தீயின் கொடிய சுவாலைகள் கண்களைத் தீய்க்கின்றன.

கல்வியே சாதியின் கடுந்தளை உடைக்ககூடிய ஆயுதம் என்று எண்ணி, அம்பேத்கர் கல்விகற்ற உறுதியையும், அவர் வாங்கிக்குவித்த பட்டங்களையும் பார்க்கும் போது, வியப்பு என்னும் சுழல் நம்மை உள்ளிழுப்பது தவிர்க்க முடியாது.

உடம்பில் ஓடுவது ஒரே இரத்தமாக இருந்தாலும், துடிக்கும் நெஞ்சு ஒரேமாதிரித்துடித்தாலும், நூறு நூறு ஆண்டுகளாக, கீழ்மைப்படுத்தப்பட்டு, தாங்கள் கீழ்மையானவர்கள் என்று முழுமனதோடு நம்பவைக்கப்பட்டு அடிமைகளாய் வாழவைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின்
கண்ணீர்க்கடலில் எழுந்த சூரியனாக அம்பேத்கர் வந்தார்.
பறிபோன உரிமைகளை பிச்சையாகப் பெறமுடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
என்ற பேராவேசத்தோடு, தன் இன மக்களுக்கு அவர்கள் கீழ்மையானவர்கள் அல்ல என்பதை திட்டவட்டமாக எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் அவர்பேச்சைக்கேட்க யாருமே இல்லை. அவருடைய இனமக்களே அவரை ஏற்கவில்லை. அம்பேத்கரின் தோழர்கள் தளர்ந்து போனார்கள். ஆனால்
அம்பேத்கர் கொஞ்சமேனும் கலங்கவில்லை. மாறாக ஒருவார்த்தை சொன்னார்,

"அவர்கள் வேறு யாருமல்ல! நம் சொந்தச் சகோதரர்கள்தான். அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, சரியான பாதையில் நடத்திக் கூட்டிப்போகவேண்டும்"


குடிக்க நீர்மறுக்கப்பட்ட மகத் குளத்தை நோக்கி அவர்களை, அம்பேத்கர் நடத்திக்கூட்டிப்போனார். காலம்காலமாக மறுக்கப்பட்டு வந்த நீர் உரிமையை வென்றெடுத்தார். நீரைவிட மேலான நியாயத்தை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பை அவருக்கு காலம் வழங்கியது. மேல்சாதிச்சமூகத்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விடியல் பிறக்கவேண்டுமாயின் அவர்களுக்கு இரட்டைவாக்குரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசோடு வாதாடினார். இக்கோரிக்கையை முற்றாக மறுத்த மகாத்மா காந்தி, சிறுபான்மை கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போல தாழ்த்தப்பட்ட இந்துக்களைக் கருதுவது
இந்துசமுதாயத்தையே இரண்டாகப் பிரிப்பது போலாகும் என வாதிட்டார். ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒன்றாய் இருக்கவேண்டிய சகோதரர்களை, தாழ்த்தி தாமுயர்ந்துகொண்ட அந்தக்கணத்திலேயே இந்து சமுதாயம் இரண்டுபட்டுப் போய்விட்டது.

அரசு இரட்டைவாக்குரிமை அளிக்க முன்வந்தபோதும், மகாத்மாகாந்தியின் எரவாடாசிறை உண்ணாவிரதத்தால் அது தடுக்கப்பட்டது. அம்பேத்கர்மேல் பாய்ந்த அழுத்தங்களால் அவர் இரட்டைவாக்குரிமைக் கோரிக்கையை கைவிட நேர்ந்தது. காந்தியின் உயிரைக்காப்பதற்காக வேண்டாவெறுப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அம்பேத்கர்.
"மகாத்மாக்கள் வந்தார்கள்! மகாத்மாக்கள் மறைந்தார்கள்! ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்!"


சுதந்திரத்தின் பின்பு, சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற அம்பேத்கர், இந்தியாவின் சட்டத்தை உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுச்சுதந்திரத்தை அவரால் வாங்கித்தர முடியாமல் போனாலும்,
காலம்காலமாக "நாங்கள் தாழ்த்தப்பட்ட பிறவிகள்" என்று அவர்களுக்கு இருந்த
மூடநம்பிக்கையை தகர்த்து ஒழித்தமை அவருடைய பெருவெற்றி.

அஜயன்பாலாவுக்கு உணர்ச்சி பெருக்கும் எழுத்து நன்கு கைவந்திருக்கிறது.
அருமையான ஒரு வார்த்தையால், அவர் அம்பேத்கரின் வரலாற்றை முடிக்கிறார். இன்றைக்கு சாதித்தாக்கத்தின் நிதர்சனத்தை அது காட்டுகிறது.

"எண்ணிக்கையில் 6லட்சமாக இருந்தாலும், அவை இரண்டாகப் பிளவுண்டு 12லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை"

ஆதித்தன்
07-01-2009.