நூலின்றி அமையாதென் வாழ்வு - 2

5:40 PM



"ஜனவரி மாதம் நான்காம் திகதி நான் அங்கு வருவதாயிருந்தேன். ஆனால் நான் வர முடியவில்லை. ஏனென்றால் அந்த விஷயத்தில் எனக்கு ஒரு செயலும் இல்லை. ஆண்டவன் என்னை எங்கே போகச் சொல்லுகிறானோ, அங்கே நான் போக வேண்டியதாய் இருக்கிறது. இப்போது நான் சொந்த வேலையாகப் போகவில்லை. அவனுக்காகவே போனேன். என் மனத்தின் நிலமை முற்றிலும் மாறிவிட்டது. அதனை இந்தக் கடிதத்தில் விவரிக்க நான் விரும்பவில்லை. நீ இங்கே வந்தால் நான் சொல்ல நினைப்பதைச் சொல்லுகிறேன். இப்போதைக்கு நான் சொல்லக்கூடியது என்னவென்றால் எனக்கு இனிமேல் சொந்தச் சுதந்திரம் இல்லை என்பதாகும். ஆண்டவன் போகச்சொல்லுகிற இடத்துக்கு நான் பொம்மை போல போவேன். அவர் செய்யச்சொல்வதை பொம்மை போல செய்வேன்."

அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வருவதற்கு சிலகாலங்களுக்கு முன்பு, பரோடாவில் இருந்து மேற்சொன்ன கடிதத்தை தன் மனைவிக்கு எழுதினார்.

மகாயோகி அரவிந்தரின் வாழ்வை விகடன் பிரசுரம் வாயிலாக,
எழுத்தாளர் பா.சு.ரமணன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அரவிந்தரின் வாழ்வு பலபருவங்களை உடையதாயிருக்கிறது. இந்தியக்கலாசாரத்தின் சுவடுகூட தன் பிள்ளைகள்மேல் படக்கூடாதென்று தந்தையால் இங்கிலாந்துக்கு அநுப்பப்பட்டார் அரவிந்தர். காலம் அவரை ஆழமான தேச பக்தராக்கியது.
இந்தியா திரும்பிய அரவிந்தர் தேசவிடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மிதவாதம் விடுதலைக்கு உதவாதென்று தீவிரவாதத்தையே அவர் ஆதரித்தார். ஒற்றர்களால் தொடரப்பட்டார்.
கைது செய்யப்பட்டார். அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் அரவிந்தர் அநுபவித்த கொடுமைகள் பல.
வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் வசதிகளே அற்ற அந்தக் கொடிய சிறைச்சாலையில்தான் முன்பு தான் பயின்ற யோகக்கலையை பயிற்சி செய்து பார்க்கத்தொடங்கினார். அவரின் மலம் அவர் அருகிலேயே கிடக்கும். தினம் இரண்டு வேளைகள் தான் அது அகற்றப்படும். குளிக்கவும் குடிக்கவும் ஒரேஒரு குவளைதான். கோடையில் வெம்மை தகிக்கும். மழைக்காலத்தில் சிறை அறைக்குள்ளேயே நீர் நிரம்பும். அவ்வளவையும் சகித்துக்கொண்டு தன் யோகப்பயிற்சிகளையும் தொடர்ந்தார் அரவிந்தர்.

வேதாந்த சாத்திரங்களில் ஆழ்கின்ற வாய்ப்பும் நேரமும் அவருக்கு அங்கே கிட்டியது. சிறைவாழ்வு அவரைப் புடம்போட்டது. அவர் செய்ய வேண்டிய பணி வேறென்று உள்ளது என்று அங்கேதான் இறைவனால் தாம் உணர்த்தப்பட்டதாக
அவர் குறிப்பிட்டார்.

இன்று மார்கழி பிறந்திருக்கிறது. காலைநேரத்தை கைக்குள் வைத்திருக்கும் மூடுபனியாக அரவிந்தரை என் கைக்குள்ளேயே வைத்திருக்கிறேன். சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்தர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்கின்ற அபாயத்தால் அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரி நோக்கி கிளம்பினார். வங்கத்திலிருந்து பாண்டிச்சேரி வழியாக கொழும்பு செல்லும் கப்பலில் ஏறி சித்திரை நான்காம் திகதி, தம் இலக்கை வந்தடைந்தார். பாரதியார், மற்றும் பலர் அவருடைய வருகையினால் மகிழ்ந்தனர்.

அரவிந்தரின் கடுமையான யோகப்பயிற்சியின் மூலமாக சில சக்திகள் அவருக்கு வாய்த்திருந்தன.பாண்டிச்சேரியில் இருந்த ஆரம்பகாலங்களில் அவர் தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆவிகளை அழைத்து உரையாடியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. ஆனால் இவையெல்லாம் சிறிதும் பயனற்ற முயற்சிகள் என்று அறவே தவிர்த்து விட்டார்.

அந்த ஆரம்ப காலங்களில் உணவுக்கும் பணத்துக்கும் அரவிந்தர் மிகுந்த சிரமப்பட்டிருக்கின்றார். சில நாட்கள் வெறும் சோற்றோடு மிளகாய்ப்பொடி இட்டு பிசைந்து மற்றவர்களுக்கும் கொடுத்து தானும் உண்டிருக்கிறார். அவர் உண்ணும் அளவு மிகச்சொற்பமே! பெரும்பாலான நேரங்களில் யோக சாதனைகளிலேயே மூழ்கியிருந்தார். அளவற்ற யோகப்பயிற்சியின் விளைவாக அவரது முகத்தில் தனிப்பிரகாசம் சுடர் விட்டது என்று அவரோடு கூட இருந்தவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.

இந்தநூலில் அவருடைய யோகசாதனைகளைப்பற்றி விரிவாக ஒன்றுமே எழுதப்படாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. பசியோடு இருந்தவனுக்கு கொடுக்கப்பட்ட சிறிதளவு உணவு, அவனுடைய பசியை தூண்டிவிடுவது போல், மீண்டும் பாண்டிச்சேரி போய் அவரின் யோகசாதனை பற்றிய விபரங்கள் அறிய வேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது.

பிரெஞ்சுப்பிரஜையான அன்னை மிரா அரவிந்தரிடம் சிஷ்யையாகி, அவரின் யோக வழிகாட்டலில் பூரணநிலையை அடைந்தார். பாண்டிச்சேரிக்கு அருகின் "அரோவில்"என்ற ஒரு நகரத்தையே கட்டுவித்தார்.

அரவிந்தரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாபாரதத்தில் வரும் பீஷ்மரை மனம் ஞாபகப்படுத்துகிறது. அவரது பிரகாசமான முகம், மௌனமான கம்பீரம் எல்லாம் நெஞ்சிலிருந்து அகலமுடியாதவை. அவர் தம்மை முழுமையாக இறையருளிடம் ஒப்படைத்து விட்டு வாழ்ந்த மகாஞானி.

இரண்டு வருடங்களுக்கு முன் இதே மார்கழியில் நான் பாண்டிச்சேரிக்குப் போனேன். அப்போது அவ்வளவாக அவரைப்பற்றி எனக்கு தெரியாது. தெரியாது என்று சொல்ல்வதை கொஞ்சம் நேர்மையாகச் சொன்னால், அவரைப்பற்றிய அக்கறை என்னிடம் இருக்கவில்லை. போனநேரம் தவறாகப் போய்விட்டது. அரவிந்தர் ஆசிரமம் பூட்டப்படும் நேரம்! எல்லோரையும் அன்பாக விரட்டிக்கொண்டிருந்தார்கள். மலர் நிறைந்த அவரது சமாதியில் என் நெற்றி வைத்து வணங்கினேன். சிறிது குளிர்ந்தது.அவ்வளவுதான். எத்தனையோ வெள்ளைக்காரர்கள்/காரிகள் அங்கே அசைவற்று தியானத்திலிருந்தார்கள்.
அருகிலிருந்து தியானம் செய்ய முயன்றேன். மனம் தன் எண்ணச்சிதறல்களையே தொடர்ந்தும் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.
வந்துவிட்டேன்.

இறைவனுடைய கருணைமழை எங்கும் எப்போதும் பெய்துகொண்டு தானிருக்கிறது. அவரவர் பாத்திரத்தின் அளவிற்கேற்ப, நீர் நிரம்புகிறது. அன்றைய தினத்தை விட இன்றைக்கு என் பாத்திரம் கொஞ்சம் பெரிதாக மாறியிருக்கலாம். யார் அறிவார் அந்த ரகசியத்தை?

ஆதித்தன்.
16-12-2008

3 comments:

Nimal சொன்னது…

நல்ல பதிவுகள் பல... தொடருங்கள்...!

பெயரில்லா சொன்னது…

அன்பு ஆதித்தன்,

// இந்தநூலில் அவருடைய யோகசாதனைகளைப்பற்றி விரிவாக ஒன்றுமே எழுதப்படாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது//

ஆம், உண்மை தான். நான் அதுபற்றி விரிவாக ஏதும் அதில் குறிப்பிடவில்லை தான். காரணத்தை முன்னுரையிலேயே சொல்லியிருப்பேனே! அரவிந்தர் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதன்று என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
அதுவும் அவரது யோக சாதனைகளை விளக்குவது மிகக் கடினமான ஒன்றாகவே உள்ளது. அது வெறும் மூச்சுப் பயிற்சியோ, குண்டலினி எழுப்புதலோ அன்று. அல்லது தற்கால ஹைடெக்-சாமியார்களின் தற்காலிக அமைதி தரும் மனச்சமன்பாட்டுத் தியானமும் அன்று.
அது பூரண யோகம். அதை வார்த்தையால் விளக்குவது மிக மிகக் கடினம்.

தெய்வ சக்தியை புவிக்கு வரவழைத்தல்.. அதன் மூலம் மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்துதல்.. அவனை அதிமனிதனாக்குதல் என பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டதாய் விளங்கும் அவரது பூரண யோகம் பற்றி நாம் எழுத்தால் வடிப்பதை விட, உள்ளத்தால் உணர்வதே சிறந்தது.

ஆதலால் தான் ஆங்காங்கே அதுபற்றி சிறு சிறு அறிமுகம் பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு விரிவாக அதுபற்றி விளக்கவில்லை.

உங்களுடைய விமர்சனம் மிக நன்றாக இருந்தது. உங்களுக்காக கீழ்கண்ட நூல்களை சிபாரிசு செய்கிறேன். இவை அரவிந்தர் ஆசிரமத்தில் கிடைக்கும்.

1. ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்

2. சாவித்ரி

3. Life Divine

அன்புடன்
ரமணன்

ஆதித்தன் சொன்னது…

நன்றி நிமல்!

அன்பின் ரமணன்,
உங்கள் அன்புக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி. இதை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் நூல் என்மனத்தில் ஏற்படுத்திய பாதிப்பின் வெளிப்பாடே இக்கட்டுரை.
நீங்கள் குறிப்பிட்ட நூல்களை பெற முயற்சிக்கிறேன்.

ஆதித்தன்.

கருத்துரையிடுக