சலனமற்று வெறுமையாய்க் கடக்கிறது காலம். எல்லா மனிதர்களுடைய பாதங்களும் அடுத்த அடியை விரைந்து வைக்கவே முற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதங்களை நசித்து வலிதந்தாவது தம்முடைய இலக்கை
அடைதல் வேண்டுமென்ற சுயநலமனம் அந்தப்பாதங்களை விரைவுபடுத்துகிறது.
அரக்கப்பரக்க ஓடும் நம் நகரங்களின் பாதங்கள் சில பிஞ்சுகளை மிதித்து நசுக்கியவாறு தன் பயணங்களைத் தொடர்கின்றன. இன்னமும் பால்மணம் மாறாத சிரிப்புடன் மழலைக் குரலுடன் ஆறுவயதுக் குழந்தை பெங்களூர் மத்தியபேரூந்து தரிப்பிடத்தில் கஞ்சா விற்கிறது. அவன் மழலைக்குரலும் வஞ்சனையற்ற சிரிப்பும் பலநாட்களுக்கு கண்முன்னின்று அகலவில்லை.
உலகம் எதனையும் கண்டு கொள்ள்வதில்லை.
இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் கணம் தவறாமல்
அரங்கேறியவாறே இருக்கின்றன. நகரங்களின் இருண்ட முகங்களில் வாழும் சகோதரர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் கைக்குழந்தைகளாக இருக்கும் போதே, தொழில் அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. கைக்குழந்தையோடு பிச்சை கேட்கின்ற சகோதரிகளின் கண்களை பலதடவை உற்றுநோக்கியிருக்கின்றேன். திருட்டுத்தனத்தை அவர்கள் கண்களில் காட்டுவதில்லை. யார் குழந்தையோ? பாவம்!
சிறிது வளர்ந்ததும் ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற வேலைகள் அவர்களுக்கு சொல்லித்தரப்படுகின்றன. பிச்சை எடுக்கவும், "பின்பணப்பை"யை திருடவும்
அகப்பட்டால் அழுதுபுரளவும் இன்னும் பல சமூகவிரோத செயல்கள் செய்யவும்
பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகள் அவர்களுக்கு பாடம் எடுக்கின்றன.
பல சிறுவர்கள் கடைகளிலும் உணவகங்களிலும் வேலைசெய்கிறார்கள்.
நான் இரவு உணவுண்ணும் ஒரு கன்னட உணவகத்தில் சாம்பார் என்று சொல்லி
ஒரு சிறுவன் இனிப்புக்கஞ்சி ஊற்றுகிறான். தலைபரட்டையடித்து கலைந்து கிடக்கிறது. பலநாட்களாக துவைக்காத சட்டை. கனிவு மாறாத அந்தக் குழந்தையின் கையில் சூடுவைத்த தழும்புகள்! நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும் மறைத்துக்கொண்டான். போய்விட்டான்.
தனியார்களுக்குத்தான் நெஞ்சம் அழுகிப்போய் விட்டதென்று கூறமுடியாது.
அரச நிறுவனங்களும் போட்டிக்கு நிற்கின்றன. மேலே நான் இட்ட புகைப்படம்
பெங்களூரின் மெஜஸ்டிக் பேரூந்து நிலையத்தில் உள்ள, "நந்தினி" பால் சார் உணவுப்பொருள் கடையில் எடுக்கப்பட்டது. நந்தினி நிறுவனம் கர்நாடக அரசின்
கீழ், லாபத்தில் இயங்கும் பிரபல்யமான நிறுவனம்.
அரைசம்பளம் கொடுக்கலாம், நன்றாக வேலை வாங்கலாம், எதிர்த்துப் பேசமாட்டார்கள், பேசினால் கொடுக்கும் தண்டனைகள் பற்றி வெளியில் தெரியவராது... இப்படி பல காரணங்கள்! அந்தக் குழந்தைகளின் வண்ணக்கனவுகளில் தீயேற்றி வறுத்தெடுக்கும் இந்த மேல்த்தட்டு வர்க்கம்
தம் கனவுகளுக்கு சிறகு கட்டிப் பறக்கவிடுகிறது.
பெங்களூர் முழுவதும் இப்படி பல காட்சிகளைப்பார்க்கலாம். குழந்தைகளை வேலைக்கு வைத்திருக்கும் உணவகங்களில் உண்ணமாட்டேன் என்று சபதமிடுபவராக நீங்கள் இருந்தால் பட்டினிதான் கிடக்க வேண்டும்.
ஈரம் வரண்டுபோன மனத்துச்சமூகம் இன்னும் எவ்வளவு பாரத்தை தூக்கி
அந்தப் பிஞ்சுகளின் மேல் வைக்கப்போகிறது என்று தெரியவில்லை.
ஒருநாள் அந்தப்பையனை பிடித்து, என் அரைகுறைக் கன்னடத்தில் ஊர்,பேர் கேட்டேன்.
"பார்த்திபன், சேலம்"
"தமிழா?"
"ஆமா! யேன்?"
ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை என்ற கேள்வியை, என் உதடுகள் ஏனோ அடக்கிக் கொண்டன. அவன் மீண்டும் போய்விட்டான். இனம் புரியாத குற்ற உணர்வு இன்றுவரை நெஞ்சம் விட்டு விலகவில்லை. அவனுடைய அந்த நிலைக்குக் காரணம் நான் அல்ல, என்று விலகிப்போக முடியாது. நான் மட்டுமல்ல! நீங்களும் தான்!
ஆதித்தன்.
16-12-2008
பூக்களை கல்சுமக்கச் சொல்லாதீர்கள்!
10:01 AMசமூகம் |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 comments:
//அவனுடைய அந்த நிலைக்குக் காரணம் நான் அல்ல, என்று விலகிப்போக முடியாது. //
ஏதோ இதை நாம் எல்லோரும் உணர்ந்திருந்தாலும் அதை தாண்டி காத்திரமான நடவடிக்கைகளை தனி மனிதர்களாக நாம் ஏனோ எடுப்பதில்லை...!
அனைவரும் யோசிக்க வேண்டிய கேள்வி ஆதித்தன்.. நானும் பலமுறை கண்டிருக்கிறேன். 'சார் பிளேட்' என்று வந்து நிற்கும் போதெல்லாம் என்னவென்று சொல்லமுடியாக கேள்விக்கணைகள் மனதில் எழுவதுண்டு. எல்லாவற்றையும் மிகத் தெளிவாக பதிந்தமைக்காகவே என் பாராட்டுகள்..
எழுத்தின் கனம் குறையாத சரளமான நடை கூடியிருக்கிறது உங்களுக்கு.. வாழ்த்துகள்
நிமல் , Bee' morgan
நன்றி!
வலிக்கிறது, கன்னத்திலும் - இதயத்திலும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முகில்!
கிழக்கு வாயிலாக நீங்கள் குழந்தைத்தொழிலாளர் பற்றி ஒரு புத்தகம் எழுதினால்,
பலருக்கு விழிப்புணர்வு அளித்த புண்ணியம் உங்கள் எழுத்துக்கு கிடைக்கும்.
எழுதுவீர்களா?
ஆதித்தன்,
நெகிழச் செய்யும் பதிவு, நன்றி!
- என். சொக்கன்,
பெங்களூர்.
அன்புள்ள என்.சொக்கன்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக