அதுவாய் வாழ்தல்.

3:52 PM




ஆடாத விண்மேகக் கூத்துமாடி,
அசையாத விண்மீனைச் சேர்த்துமாடி,
வாடாத மின்பூக்கள் கோர்த்துமாடி,
வாழ்நாளுக் கிது இறுதி என்னுமாப்போல்
தேடாத இன்பநிலை தேடியாடி,
தெவிட்டாமல் ஓருணர்விற் கூடியாடி,
பாடாத பண்ணெல்லாம் பாடியாடி,
பற்றுநிலைவிட்டகலப் பாடினோமே!

மீறாத எல்லைவிதி எல்லாம்மீறி
மென் துகிலை விரிக்கின்ற வானமீதில்,
சாறாக ஒடுகிற ஒளியின் காமம்
சரித்திரத்தில் என்றுமென்றும் புதியவண்ணம்.
ஆறாத ரணம் ஆறும், அத்தமிக்கும்
ஆதித்தன் புலத்தழகை காண்தலுற்றால்.
தீராதகனவெல்லாம் திறந்துகொள்ளும்.
திமிரோடு ஒருகவிதை வடிவங்கொள்ளும்.

காற்றாடக் கனவாடக் கவிதையாட,
கனவுக்கும் நனவுக்கும் கலவியாட,
கீற்றாடக் கிளையாடக் கிளிகளாட,
கீதங்கள் தாளங்க ளோடுஆட,
ஆற்றோடு எழுந்தோயும் அலைகளாட,
அன்பென்ற ஒன்றோடு தழுவியாட,
நேற்றோடு இன்றோடு நாளையாட,
நான் என்னும் பேயோட, ஆடினோமே!

உள்ளமில்லை. எண்ணமில்லை. உள்ளேயேதும்
உடமையில்லை, கடமையில்லை. உரிமையேறி
வெள்ளமெனப் பாய்ந்துவரும் உறவு இல்லை.
வேகமுறத்தாக்குகிற கவலையில்லை.
அள்ள, அள்ள அமுதநிலை குறைவதில்லை.
அந்தி,பகல், இரவுநிலை தெரிவதில்லை.
முள்ளுமில்லை. பூவுமில்லை. ஓலமில்லை.
மெய்யுணர்வைப் புணர்தலுக்குக் காலமில்லை.

புல்நுனியில் புரளுகிற துளியில்வாழ்வோம்.
பூவிதழில் புலருகிற ஒளியில்வாழ்வோம்.
சொல்வடிவில் சுடருமொரு சுவையில்வாழ்வோம்.
சோகவிதை துளிர்த்தெழும்பும். அங்கும்வாழ்வோம்.
கொல் அழகு நதிவளைவில் நீந்திவாழ்வோம்
கூவியழும் குயில்களொடு பாடிவாழ்வோம்.
கல்மலையில் கார்முகில்கள் சூழவாழ்வோம்.
காலமென உங்களுடன் கூடிவாழ்வோம்.


:- ஆதித்தன்
06-07-2010

நடுநிசி

10:13 PM




நடுநிசியிற் பகையுணர்வு திமிருகிற வேளை.
நடுநிசியிற் கனவுலகின் கதவுடைக்கும் வேளை.
நடுநிசியிற் பிறப்பெடுக்கும் கவிகளதன் வேளை.
நடுநிசியிற் பெருமழையில் நனைந்துலவும் வேளை.


நடுநிசியிற் கைப்பிடிக்கும் கலையுறவின் வேளை.

நடுநிசியிற் பொழிபனியும் குளிர்த்துகிற வேளை.
நடுநிசியிற் பெருகிவரும் விழிமழையின் வேளை.

நடுநிசியிற் செறிமணத்தை பரவுமலர்வேளை.

நடுநிசியிற் திறந்தமனம் கிறங்குகிற வேளை.
நடுநிசியிற் காதலுறு உறவழைக்கும் வேளை.

நடுநிசியிற் தேடுகிற நினைவுகளின் வேளை.
நடுநிசியிற் பொங்கியழும் துன்பியலின் வேளை.

நடுநிசியிற் சிறையிருந்து வதைபொறுக்கும் வேளை.
நடுநிசியிற் குரலுயர்த்திக் கதறுகிற வேளை.
நடுநிசியிற் பிறருதைக்கும் வலிவெறுக்கும் வேளை.
நடுநிசியிற் கருகிவிழும் உயிரடங்கும்வேளை.

- ஆதித்தன்
15-06-2010

வேண்டிப் பிதற்றல்.

10:27 AM




அறியாப்பொருள் உன் பொருளன்றோ?
அறிய நினைத்தும் முடியாமல்

சரியோ பிழையோ அறியாத
சகதிக் குழம்பாய் இருப்பிங்கு.

முறியாவினையோ முன்வினைகள்?
மூலம் எதுவோ அறியேனே?

வெறியோடலையும் வெறுநாயென்
றெண்ணி என்னை வெறுக்காதே.

கனவிற் கிளர்ந்த சுகமோ இக்
காலக்கூத்தும் காட்சிகளும்?
உணவிற் கமைந்த சுவை போல
உண்டுமுடிக்க மறைந்திடுமோ?
தினவும் வலியும் வெறியோடு
திரியும் மூர்க்கக் கடையேனின்
குணமும் மனமும் ஒருநாளில்
கோவே உன்னைக் குறியாதோ?

பொருளுக்கலையும் உறவுகளும்
பொருளுக்கலையும் உள்மனமும்
பொருளுக்கலையும்படி சொல்லும்
பொருளுக்கலையும் போதனையும்
பொருளுக்கலைந்தே அழிவாகும்!
புன்மைச்சகதிப் பிரவாகம்
பொருளுக்கலைய வைக்காதுன்
பதமேபொருளாய்த் தருவாயே.

சொல்லும் நெஞ்சைக் கூறாக்கி,
கொத்திக் கொத்திக் கூழாக்கி,
அல்லும்பகலும் அது ஈனும்
ஆறாவலியாய்த் தீயூற்றி,
வெல்லும் சொல்லில் வாள்வீச்சை
வைத்துக்கீறி வாயூறிக்
கொல்வார் அவரைப்பழிதீர்க்கக்
காலந்தேடி அலைவேன்நான்.

வலியும் பழியும் உணர்வேறி
வாழ்வும் பிறருக்குதவாத
நிலையும் நிறமும் நீ மாற்றி
நீங்காக் கருணை நீரூற்றி
பழிகள்விட்டு மன்னிக்கும்
பண்பைத்தந்துன் அழகான
ஒளியின்மடியில் இனிதாக
நானும் உறங்க இசைப்பாயே.


:- ஆதித்தன்
09-06-2010

உற்ற உறவுகளில் உத்தமமே...

9:42 AM



வாய் ருசி மறந்தாய்.
வந்த என்னை உன் வயிற்றில்
நோயுடன் சுமந்திருந்தாய்.

சாய்ந்திருந்தே சாப்பிட்டாய்.
சட்டென ஒரு வாந்தி.
சடுதியில் துன்பங்கள்
பல உணர்ந்தாய்.

ஆனாலும்.......
பெற்ற அப்போதில்
என்னைப்
பேரன்பாய் முத்தமிட்டாய்.

உற்ற உறவுகளில் உத்தமமே
என் தாயே.....
விலையற்ற உன் அன்பென்
சிற்றறிவுக்கெட்டவில்லை.
சிறகடிக்கும் என் பருவக் கனவோடு
உன்னோடு பலதடவை
முட்டி மோதினேன்.
ஆனாலும்
அது பற்றி நினையாய் நீ.

பெற்றபிள்ளை நலம் வாழ வாழ்த்துகிற
உற்றவளே......
சுற்றம் உனக்கிணையா?
சூழ்ந்துவரும் நண்பர் உனக்கிணையா?
வெற்றியுறு காதல் இணைபெறுமா?
அத்தனையும்

மறுதலிப்பேன்.
என் தாயே.....உயிரைப்

பிச்சையிட்டாய் எனக்கு!

எளிய மகன்
விட்டபிழை பொறுத்தருள்வாய்.

-ஆதித்தன்

நேற்றைக்கும் அப்பாலே நினைவு

8:41 PM

சுவாலை முன்னால்
ஒழுகிவந்த கவிதையோடு
கண்ணீரும் உப்புக்கரித்தே
கலந்து கிடக்கும்.
வாழ்வின் வசந்த மலர்
காய்க்கும் முன்னே
கருக்கியது காலம்.

வண்ணத்துப்பூச்சிகளை வன்புணரும்
எண்ணற்ற கோட்டான்கள்
எதிர் எதிரே குரல்கூவி
இரவுகளில் உலவிவர
கிழிக்கப்பட்ட தாவணியாய்
நாங்கள்.

விட்டில்களை விரும்பியுண்ணும்
சுவாலையாக காலம்.
விரியும் சிறகுகள் குரூரமாய்
பொசுக்கப்படுவதில்
யாருக்கு என்ன ஆனந்தம்
இருக்க முடியும்?
வெறும் நீறாய்ப் போகும்
அதன் வாழ்வில் எதுவும் மிஞ்சாது.
ஆறாத ரண ஊஞ்சல்மேல்
விதி ஆடும். விளையாடும்.

பேய்கூடும் பெருங்காற்றில்
புதர்முயல்கள் புதர்தாண்டா.
அறுந்த நிலவின்
ஆடுகிற எச்சங்கள்
மிதந்து மீள்வந்து மண்சேரும்.

சிவந்த நீரும்
சிதைந்த மானமும்
வரண்ட மண்ணைச் சேறாக்கும்.
கண்விழித்தே காண்கின்ற
கனவில்
கறையான்கள் ஏறி
கணப்பொழுதில் கருவறுக்கும்.

பச்சையிலை வேப்பமரம்,
பசுங்கிளிகள் மைனாக்கள்,
பாசி படர்ந்த கேணி,
பிசுபிசுக்கும் மண்வீதி
ஒன்றும் மிஞ்சாது
ஒரு சுவடும் எஞ்சாது.

வேனில் பருவத்தில்
அணில் குஞ்சைப்போல்
அழகான ராப்போதில்
முற்றத்துமணல் மீது
முகிழ்க்கின்ற முல்லைமணம்.
பக்கத்தில் நீயிருக்க
பாய்கின்ற எந்தன் மனம்.
சொர்க்கத்தைக் கொண்டுவந்து
சொரியவிட்ட காலம்போய்
மறைந்தது.
இனி அது உயிர்க்காதோ?
என்றெண்ணிக் காத்திருக்கும்
இன்னும் அந்த இளமுற்றம்.

இறந்துபோன குழந்தைகளும்
சிறகு உதிர்ந்துபோன
வண்ணத்துப் பூச்சிகளும்
மறந்துபோன கனவுகளாய்
மாறிப்போகும்.

இழந்துபோன சிறகுகளின் வண்ணம்
வெயில் பட்டுச்
சிதைந்துபோன ஓவியமாய்
காலக்கடலில் கரைந்து போகும்.

உத்தரத்தின் மேலிருந்து
பல்லி சொன்ன மொழிகள்
சரமகவி வரிகளாகப் போயின.
பல ஆண்டுகளாய் அப்படியே
தேய்ந்து கிழித்தலுற்ற
தாவணியின் கரைப்பூக்கள்
இன்னும் அத்திகைப்பில்
இருந்து விடுபட்டிருக்காது.
ஆனாலும்
குருவி செத்துப் போன பின்பும்
கூடழுது என்ன பயன்?

உயிரோடிருந்திருந்தால்….
பனைமரத்துக்கு அப்பாலே
கருநீலவானத்து நட்சத்திரங்கள்
விட்டு விட்டு ஒளிர்வதை
எங்கள் பிள்ளைகளுக்கு
காட்டியிருப்போம்.
சோறு குழம்போடு
சொல்கூட்டிக் கதை சொல்லி
வேறோர் உலகத்தில்
இன்னும் வாழ்ந்திருப்போம்.

- ஆதித்தன்