பிளக்கப்பட்ட இந்தியா

3:32 PM

சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? சுதந்திரம் கிடைப்பதற்கு சில நாட்கள் முன்பும், சில நாட்கள் பின்பும் மக்கள் அனுபவித்த குரூரக் கொடுமைகள் எங்கிருந்து ஆரம்பித்தன? வங்காளத்திலும் பஞ்சாபிலும் பற்றி எரிந்த தீயை விசிறி விட்டது யார்? அந்தத் தீயில் வெந்துபோனது யார்?

எழுந்துபோன பாகிஸ்தானிலும், பிளந்துபோன இந்தியாவிலும் அந்நாளில்
விளைந்துபோன மதவெறிப்பேய்க்குப் பலியாய், விழுந்துபோன மானிடர்களின் சடலங்களில் ஈ மொய்க்கும் பொழுதில்….,
கதறிய குரலடங்கி, கண்கள் உதறிய ஒளியடங்கி மதங்களின் காமவக்கிரத்தில் மிதிபட்டு கருக்கப்பட்ட பெண்களின் மூச்சு நிறுத்தப்பட்ட பொழுதில்…..,
கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றைக்கிழித்து சிசு வெளியெடுத்து எரிக்கப்பட்ட பொழுதில்….., கந்தல் கந்தலாய் குழந்தைகள் சிதைக்கப்பட்ட பொழுதில்…..,
அந்த இரண்டு தேசங்களும் சுதந்திரம் பெற்றுக்கொண்டன.

காந்தி, நேரு, ஜின்னா, படேல், மவுண்ட்பேட்டன் என்று நீளும் அரசியல்தலைவர்களின் பட்டியலில் யாருடைய குடும்பமும் இந்தக் கலவரங்களின்போது சாதாரண மனிதனைப்போல் பாதிக்கப்படவில்லை. அவர்களில் யாருக்குமே அந்தவலி தெரியவில்லை. அவர்கள் தேசத்தின் பிளவுகளைப்பற்றியே கருத்து முரண்பாடு கொண்டார்கள்.பிளந்த கோடுகள் மக்களை அறுத்துச்சென்றதைப் பற்றி அதிக அக்கறைப்படவில்லை.


ஆகஸ்ட் 15, 1947 அன்று, லாகூரிலும், அமிர்தசரஸிலும் பெட்டி பெட்டியாய்
நடமாடும் பிணங்களும் நாறும் பிணங்களும் வந்து இறங்கும்போது, ஜின்னாவும் நேருவும் தத்தம் கொடிகளை வானளாவப் பறக்கவிட்டார்கள்.

பிரிவினையோடு வழங்கப்பட்ட அந்த சுதந்திரத்தைப் பற்றியும், அது பெறப்பட முன்பும் பின்பும் நடந்த, நடத்தப்பட்ட காட்சிகளையும், முடிந்தவரை நடுநிலையாய் நின்று சொல்லுகின்றது, மருதன் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட “இந்தியப்பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு”.

என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” என்று சொன்ன காந்தியால் இந்தியப்பிளவைத்தடுக்க முடியவில்லை. அக்கால இந்தியாவின் பிரதான அரசியற் சக்தியாய் விளங்கிய காங்கிரஸின், தூண்களான
நேரு, வல்லபாய் பட்டேல் போன்றவர்களாலும் தடுக்கமுடியவில்லை. அதேபோல முகமது அலி ஜின்னாவின் அசைக்கமுடியாத ஆளுமையாலும் அவரது பிடிவாதத்தாலும் மட்டும்கூட பாகிஸ்தான் பிறக்கவில்லை.

இந்து, இஸ்லாம் சீக்கிய மதங்களின் பெயரால் வன்முறையிலிறங்கி
யார் கொன்றார்களோ அவர்களாலும்,
யார் கொல்லப்பட்டார்களோ அவர்களாலும்,
யார் வன்புணர்ந்தார்களோ அவர்களாலும்,
யார் வன்புணரப்பட்டார்களோ அவர்களாலும்
அகண்ட பாரதம் பிளக்கப்பட்டே ஆகவேண்டிய சூழ்நிலை உருவானது.
பற்றி எரியும் ஒவ்வொரு வீடும்
பதறி ஓடும் ஒவ்வொரு காலும் “ஒன்றாய் வாழ்வது இனி நடக்காது” என்பதை உரக்கச்சொல்லின.

மதத்தை இழிவுபடுத்த பெண்கள் உபயோகப்பட்டார்கள். கலவரங்களில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, இறந்தவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்லக்கூடியவாறு, உயிர்பிழைத்தவர்கள் உடற்சிதைவுகளோடு நிரந்தர மனச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இந்துப்பெண்ணின் வாயில் மாட்டுக்கறி போடப்பட்டது. முஸ்லிம் பெண்ணின் நெற்றியில் குங்கும்ம் அள்ளிப்பூசப்பட்டது. மசூதிகளின் முன்னால் பன்றித்தலைகள் வெட்டி வீசப்பட்டன. மத வேறுபாடு இல்லாமல் நிறையப்பேர் ஒரு காரியம் செய்தார்கள். எதிரிகளின் கையில் அகப்படமுன் தங்கள் வீட்டுப்பெண்களை அவர்களே கொன்றார்கள். அவர்களும் தற்கொலை செய்தார்கள்.

மருதன் இப்படிச்சொல்லுகிறார்.
எங்கோ தொலைவில் கல்கத்தாவிலோ, கராச்சியிலோ, லாகூரிலோ, வங்காளத்திலோ அல்ல; சுதந்திர இந்தியாவின் புதிய தலைநகரத்தில் வெட்டிக்கொண்டார்கள். முஸ்லிம்பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்.”
புது தில்லியில் மட்டும் பத்தாயிரம் பிணங்கள்.”
தலைப்பாகைகளும் திரிசூலங்களும், பர்தா துணித்துண்டுகளும் வளையல்களும் செருப்புகளும் வண்டி வண்டியாக கிடைத்தன.

இந்தியாவைப் பற்றி தெரிந்திராத ராட்கிளிஃப் என்ற பிரிடிஷ்காரரை
கூட்டிக்கொண்டு வந்து,கோடு கீறி எல்லைகள் பிரித்தார்கள்.
ஒரு கிராமத்துக்கு நடுவே கோடு இழுக்கப்பட்டு இருந்தது. ஒரு பகுதி பாகிஸ்தான். ஒரு பகுதி இந்தியா. எப்படிப் பிரிப்பது அந்தக் கிராமத்தை? பத்துக் குடும்பங்கள் அங்கே; இருபது குடும்பங்கள் இங்கே என்றா? எனில் இதுவரை ஒரே குடும்பமாக இருந்தவர்கள் இனி இரு தேசத்தவர்களாக மாறி விடுவார்களா? உச்சக்கட்டமாக அந்தக் கோடு ஒரு வீட்டை இரண்டாகப்பிரித்துச்சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா. பின்பக்கம் பாகிஸ்தான்.

ஆசை காட்டியும், ஆள்பலம் காட்டியும் பல சமஸ்தானங்கள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. மக்களின் விருப்பத்துடனேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று சொன்ன நேருவின் வாக்குறுதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு அவரை முன்னோடியாக்கி கேலிச்சிரிப்பு சிரித்தது.

இந்தியப்பிரிவினையில் இந்துத்துவ சக்திகளின் பங்களிப்பையும் மருதனின் புத்தகம் புலப்படுத்துகிறது. முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் என்றால்
இந்தியாவை இந்துக்களின் தேசமாக்கவேண்டும் என்ற கோரிக்கையை
இந்துமகாசபை வெளியிட்டது. இந்துமகாசபையின் தலைவரான சாவர்க்கரின்
அதிதீவிரமான இந்துத்துவக் கனவுகள், எழுத்துக்களாக வெளிவந்தன. அவருடைய கருத்துக்களில் ஒன்றிப்போனவர்களால் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது. காந்தியைக்கொன்ற நாதுராம் கோட்சே முன்பு
காந்தியின் சீடர்தான். சாவர்க்கரின் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு
ஆர்.எஸ்.எஸ் ல் இணைந்து கொண்டார். அகண்ட இந்தியாவைப் பிளந்தவர் காந்திதான் என்று, அவரை சுட்டுக்கொலை செய்தார். கோட்சே அளித்த வாக்குமூலத்தில் தான் செய்த கொலைக்கு வேறுயாருமே பொறுப்பு அல்ல
என்று சொன்னதனால்தான், இந்துமகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மேல் இருந்த தடை மீளப்பெறப்பட்டது. பிரிவினைக்கான உண்மைக் காரணங்கள் பற்றி அபிப்பிராயங்கள் மாறுபட்டுக்கொண்டிருந்தாலும், பிரிவினையின் வெளிப்படையான விளைவுகள் மறுக்கமுடியாதவை என்று மருதன் சொல்வது முற்றிலும் உண்மை.

இந்தியப்பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு” புத்தகத்தில்
வெள்ளைத்தாளில் பட்ட சிறுகறையைப்போல, வைசிய சமுதாயத்தைச்சேர்ந்த காந்தியை சனாதன பிராமணன் என்று குறிப்பிடுவது நெருடுகிறது. இன்னும் தெளிவான விளக்கமான பிரிவினைக்கால இந்தியாவின் வரைபடங்கள் தரப்பட்டிருக்கலாம். இவ்வளவு அலங்கோலங்கள் வட இந்தியாவை அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்த சூழலில், தென்னிந்தியாவின் நிகழ்வுகளையும் நேரடி மற்றும் மறைமுகப் பங்களிப்புக்கள் பற்றியும் எழுதி இருக்கலாம்.

பாதிப்புக்களும் பரிதவிப்புக்களும் கருவறுப்புக்களும் கழுத்தறுப்புக்களும்
நிர்வாணங்களும் நிஜக்கோரங்களும் நிரம்பிய அந்த நாட்களை எழுத்துக்களால் ஓரளவுக்குத்தான் வெளிப்படுத்தமுடியும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வக்கிரங்களை உள்ளடக்கிய வரலாற்றில், இவற்றுக்கும் இடம் உண்டு. அந்த நிகழ்வுகளின் பதிவுகள் எப்போதும் தம்மைச்சுற்றி உணர்ச்சி மிகுந்த எரிசுவாலைகளை வீசியவாறுதான் இருக்கும். அதன் தீப்பொறிகள் இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும், இன்றைக்கும் சுட்டுக்கொண்டும் சூடேற்றிக்கொண்டும் இருக்கிறது.

ஆதித்தன்.
21-07-2009.