நானும் நிமலபிரகாசனும் திடீரென்று நிச்சயித்த பயணம் அது! பெங்களூர்த்தரிப்பிடத்தில் எட்டுமணி போல வந்துசேர்ந்தோம். வண்டிக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது.நிமல் சென்னையில் ஒரு மடிக்கணணி வாங்கியிருந்தான். ஒரு காவல் அதிகாரி மடிக்கணணியை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
அவர் திருமுகம், விஜயகாந்த் மாதிரி இருந்ததா இல்லை அர்ஜுன் மாதிரி இருந்ததா என்பது இருட்டில் சரியாக தெரியவில்லை.
தமிழ்நாட்டு சொகுசுப்பேரூந்து வழமை போல் தாமதமாக வந்து, இனமானம் காத்தது. பேரூந்தில் இரவு வல்லவனுக்கு வல்லவன் படம் போட்டார்கள். தொடங்கிக் கொஞ்சநேரத்திலேயே ரஜினிகாந்த் நிமலுக்கு தூக்கமாத்திரைகொடுத்துவிட்டார். ராதிகா ரஜினிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கையில்தான் எனக்கு கொட்டாவியே வந்தது.
கண்விழித்த போது மலைக்கோட்டைதெரிந்தது. திருச்சிக்குள் நுளைந்து தஞ்சையை நோக்கி விரைந்தது பேரூந்து.கசிந்துவரும் காவிரிக்கே இந்தப் பசுமை என்றால், காவேரி நிரம்பிவந்த காலங்களில் தஞ்சை எப்படி இருந்திருக்கும்?
சங்ககாலத்தில் கட்டப்பட்டதைப் போன்ற ஒருவிடுதியில் பைகளைவைத்து குளித்துவிட்டு, தஞ்சைபெரிய கோயிலுக்கு நடந்தோம். நாம் எங்கே இருக்கிறோம் கோயில் எங்கே இருக்கிறதென்று கூடதெரியாது.வழிவிசாரித்து போய் சேர்வதில் என்னவோ ஒரு சுவாரசியசொர்க்கமே இருந்தது.
என்னவென்று சொல்ல? அந்தக்கோபுரத்தைக் கண்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சிவெள்ளம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது. நிச்சயமாக முழுவதுமான பக்தியின்பாற் பட்டதல்ல! பத்துவருடங்களுக்குபின் 2002ல் சமாதானம் வந்தபோது ஊருக்குப்போனபோது உள்ளெழுந்த அதே உணர்ச்சி!
வாளை உருவலாம் என்றுதான் பார்த்தோம்! அதற்கு வழியில்லாததால் புகைப்படக்கருவியை உருவிக்கொண்டு கோயிற்பிரவேசம் செய்தோம்.
2010ம் ஆண்டோடு தஞ்சைப்பெரிய கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிவடையப்போகின்றன. தமிழர்களின் கட்டிடக்கலையின் எழுச்சியை இன்றும் நிரூபித்திக்கொண்டிருக்கும் கருங்கல்காவியம். உலகில் எங்கிருந்து எண்ணினாலும் தமிழனாய்ப் பிறந்த பெருமையுணர்ச்சி உந்திவரத் தலைநிமிரச்செய்யும் தீப்பிளம்பு!
நந்திமண்டபத்தை மட்டும் பிற்கால நாயக்கமன்னர்கள் கட்டினார்கள் என்றும்,
நந்தியோடு சேர்த்து முழுமண்டபமும் நாயக்கர் காலத்தது என்றும் இருவேறுபட்ட கருத்துக்கள் உலாவுகின்றன. நந்தியை வணங்கிவிட்டு
கோயிலுக்குள் அடிவைத்தோம். எங்குபார்த்தாலும் சிற்பநுணுக்கங்கள்!
கால்வைக்கும் படியில்கூட கலைவழிகிறது. "பெருவுடையார்" என்று சொல்லப்படும் மகாலிங்கத்தின் அழகும் பிரம்மாண்டமும் மனத்தை ஈர்க்கின்றன.
தமிழ்நாட்டு அறநிலைத்துறையிடமில்லாமல், இந்தியத் தொல்லியல்துறையின்
பொறுப்பின் இருப்பதால், கோயில் கோயிலாக இருக்கிறது.
தன் இலட்சியங்களை அருள்மொழிவர்மன் எப்போதும் பெரிதாகவே வைத்துக்கொண்டான். கம்பன் சொல்லுகின்ற "சிறியன சிந்தியாதான்" என்ற
சொற்றொடர் அருள்மொழிக்கே நன்றாய்ப்பொருந்துகிறது. தன் உயர்ந்த இலட்சியங்களால்தான் அவன் வரலாற்றில் இன்றைக்கும் ராஜராஜசோழனாக ஒளிவீசி, எங்கள் நெஞ்சுக்குள் வாழ்கின்றான். அவனுடைய உயர்ந்த இலட்சியங்களில் ஒளிர்ந்த இலட்சியமாக தஞ்சைப்பெருங்கோயில் மிளிர்கிறது.
தமிழர் சிற்பக்கலையின் முழுப்பெரும்வெளிப்பாடான இக்கோயில், ராஜராஜேசுவரம், பெருவுடையார்கோயில், தட்சிணமேரு என்று பலபெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. தமிழர்தம் பெருமையைப்போல
உயர்ந்தோங்கி நிற்கின்ற விமானம், சிற்பசௌந்தர்யங்களைக் காட்டி உள்ளம் கவர்கள்வனாகிறது. விமானத்தைக்கட்டியபின் லிங்கத்தை உள்ளே கொண்டுபோக முடியாதாகையால், லிங்கத்தை உள்ளேவைத்து பின்பே விமானத்தைக்கட்டினார்கள். லிங்கப்பிரதிட்டையின்போது ஏதோ சிக்கல் ஏற்பட்டதாகவும், ராஜராஜசோழரின் குருவான கருவூர்ச்சித்தர் நேரில்வந்து இடையூறுநீக்கி பிரதிட்டை பண்ணினார் என்றும் அறியமுடிகிறது. கோயிலில்
கருவூர்த்தேவரும் ராஜராஜரும் அருகருகே நிற்கும் ஓவியம், ஆயிரமாண்டு கடப்பினும் தமிழோவியக்கலையின் சிறப்பைக் காட்டி நிற்கிறது.
ராஜராஜ சோழனுக்குப் பிறகு, இந்தக்கோயில் பல இடிபாடுகளையும், பல புனரமைப்புக்களையும் கண்டது. கோயிலில் குடிகொண்ட தேவிக்கு தனிச்சன்னதி அமைத்தபெருமை சுந்தரபாண்டியனைச்சாரும். தேவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
நாயக்கமன்னர்கள் சிற்ப அழகு பொலிந்துததும்பும் வண்ணம் வடமேற்கிலே, முருகப்பெருமானுக்கு கற்சன்னதி அமைத்திருக்கிறார்கள். அதன் சிற்பநுணுக்கங்கங்ககளின் அழகு சொல்லிமாளாது. அந்தக் குமரனை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
மராத்தியமன்னர்கள் பிள்ளையாருக்கு சன்னதி எடுப்பித்திருக்கிறார்கள்.
தொல்லியல்துறை கோயிலின் பண்டையநிலைபற்றியும், இன்றையநிலைபற்றியும் கருத்துவிளக்கப்படங்களோடு கண்காட்சி வைத்திருக்கிறார்கள். அவர்களும் சில ஆங்கிலேயர்களும் கோயிலுக்கு செய்த பணிகளை நினைத்தால் கையெடுத்துக்கும்பிடவேணும் போலிருக்கிறது.
கண்காட்சிப்பொறுப்பாளரிடம் சோழரின் அடுத்த சிற்பக்களஞ்சியங்களான
"கங்கை கொண்ட சோழபுரம்", "தாராசுரம்" போகும் வழியை கேட்டறிந்தோம். (வேறொரு பதிவில் அவைபற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.)
பலதோழர்கள் உயர்ந்த விமானத்தை கோபுரம் என்கிறார்கள். கோபுரம் என்பது கோயிலின் நுழைவாயில். விமானம் என்பது மூலவருக்கு மேல் அமைந்திருக்கும்.விமானத்தின் உச்சியில் உள்ள உருண்டையானபாகம் தனிக்கல்லால் ஆனது.கிறேன்களும் தொழில்நுட்பவசதிகளும் அற்ற அக்காலத்தில், பல கிலோமீற்றர் தூரத்துக்கு "சாரம்" எனப்படும் மரச்சாய்தளத்தை அமைத்து, நிலத்துக்கும் விமானத்துக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தி, யானைகளின் மூலம் கல்லை அவ்வளவு உயரத்துக்கு கொணர்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!
அளவிறந்த பெருமையுடனும், பூரிப்புடனும் ஒருவழியாக நானும் நிமலும் வெளியேறினோம். பெருவுடையாரின் எல்லையற்ற கருணையால் எங்கள் செருப்புகள் எங்களுக்கே கிடைத்தன. ஒரு ஆச்சி இட்டிலி விற்றுக்கொண்டிருந்தார். வாங்கி தெருவோரத்தில் அமர்ந்து, பெருங்கோயிலைப் பார்த்தவண்ணம் விழுங்கல்படலத்தை ஆரம்பித்தோம். ஆகா! இப்பிடி ஒரு இட்டிலியை இந்தப்பிறப்பில் சாப்பிட்டதில்லை. இரண்டு இட்டிலிக்கு நாலுவகை சட்டினி. இட்டிலியின் அருஞ்சுவையை இன்னதென்று சொல்லுதற்கு ஆயிரம் நாக்கு தேவை. அடுத்தமுறை தஞ்சைக்குப்போனால் ஆச்சியிடம் இட்டிலி ஒருபிடி பிடிக்கவேணும். யாருக்குத்தெரியும்? அந்தநேரம், எங்களுக்கு இட்டிலி போட்ட புண்ணியத்தால் ஆச்சி, சொர்க்கத்தில் ராஜராஜசோழனுக்கு இட்டிலி விற்றுக்கொண்டிருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுகின்றன.
ஆதித்தன்
31-12-2008
பெருங்கோயிற் பயணம்
6:04 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
15 comments:
//நானும் நிமலபிரகாசனும் திடீரென்று நிச்சயித்த பயணம் அது! //
நிச்சையமாக... இதைப்பற்றி நான் ஒரு பதிவு ஆறுதலா எழுதோணும்... :)
//அந்தக்கோபுரத்தைக் கண்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சிவெள்ளம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது. நிச்சயமாக முழுவதுமான பக்தியின்பாற் பட்டதல்ல! //
உண்மைதான்... இன்றுவரை அந்த உணர்வு இருக்கிறது...!
//அதற்கு வழியில்லாததால் புகைப்படக்கருவியை உருவிக்கொண்டு கோயிற்பிரவேசம் செய்தோம்.//
புகைப்படக்கருவியால் நாம் சுட்டுத்தள்ளிய படங்களின் எண்ணிக்கை ... :)
//கண்காட்சிப்பொறுப்பாளரிடம் சோழரின் அடுத்த சிற்பக்களஞ்சியங்களான
"கங்கை கொண்ட சோழபுரம்", "தாராசுரம்" போகும் வழியை கேட்டறிந்தோம். //
தெரியாத ஊரில் தேடிச்சென்ற பயணம் அது, அதைப்பற்றியும் விரிவாக எழுதலாம், எழுதவும்.
//ஆகா! இப்பிடி ஒரு இட்டிலியை இந்தப்பிறப்பில் சாப்பிட்டதில்லை. இரண்டு இட்டிலிக்கு நாலுவகை சட்டினி. இட்டிலியின் அருஞ்சுவையை இன்னதென்று சொல்லுதற்கு ஆயிரம் நாக்கு தேவை.//
உண்மைதான்... நாங்கள் அன்று அதன் பின்னரும் நீண்ட நேரம் அந்த இட்டிலி பற்றியே பேசிக்கொண்டிருந்ததாக நினைவு... :)
வண்டிக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது.நிமல் சென்னையில் ஒரு மடிக்கணணி வாங்கியிருந்தான். ஒரு காவல் அதிகாரி மடிக்கணணியை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
அவர் திருமுகம், விஜயகாந்த் மாதிரி இருந்ததா இல்லை அர்ஜுன் மாதிரி இருந்ததா என்பது இருட்டில் சரியாக தெரியவில்லை.//
ஆதித்தன் இந்து நாகரீகக் கட்டிடக் கலை வரலாறு அப்படியே பொங்கி வழியுது.... நல்ல அனுபவப் பகிர்வு,... உரை நடையும் நன்று... ஆச்சி தான் பாவம்???
நிமல்!
//தெரியாத ஊரில் தேடிச்சென்ற பயணம் //
கவிதை நல்லா வருது போல!
யாப்பிலக்கணப்படி மேற்சொன்ன உங்கள்வரி, "மோனை"க்கு உதாரணம்.
//நாங்கள் அன்று அதன் பின்னரும் நீண்ட நேரம் அந்த இட்டிலி பற்றியே பேசிக்கொண்டிருந்ததாக நினைவு... :)//
உண்மைதான்! அந்த ருசியின் சாதனை
என் நாக்குச்சாதனைப்புத்தகத்தில் இன்னும் முறியடிக்கப் படாமலே இருக்கிறது! :-D
அன்பின் கமல்,
மிக்க நன்றி!
//இந்து நாகரீகக் கட்டிடக் கலை வரலாறு அப்படியே பொங்கி வழியுது.//
சோழர், பாண்டியர், நாயக்கர், மராத்தியர் எனப்பலரால் புனரமைக்கப்பட்டதாக நான் சொன்னதால், நீங்கள் இதை இந்துக்கட்டிடக்கலை நாகரிகமென்றெண்ணிவிட்டீர்கள் போலிருக்கிறது. உண்மையில் மேற்சொன்ன மன்னர்கள் பண,பொருள் உதவியும் ஊக்கத்தையுமே அளித்தார்கள்.மற்றப்படி இது முழிக்கமுழுக்க தமிழர்கட்டிடக்கலையின் பாற்பட்டே கட்டப்பட்டது. வடிவமைத்துக் கட்டிய தச்சர்களும் சிற்பிகளும் தமிழர்களே!
நல்ல பதிவு ஆதித்தன். உங்களுக்கு எழுத்தும், வருணிக்கும் விதமும், நகைச்சுவையும் மேலாகக் கைவருகிறது. நன்று... தொடர்க, நண்பரே.. அப்படியே நம் குருநாதர் பகவான் ரமணரைப் பற்றியும் எழுதுங்கள்...
அன்புடன்
ரமணன்
அன்புள்ள ரமணன்,
மிக்க நன்றி.
நிச்சயமாக மகா ஞானி ரமணரைப்பற்றி எழுதவிருக்கிறேன். உலகத்தில் நான் பொறாமைப்படும் ஒரே ஆள் அவர்தான்.
உங்களுடன் தொடர்பு ஏற்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!
உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருப்பின் அதை தருவீர்களா?
உங்கள் "மகாயோகி அரவிந்தர்" நூலில் அது தரப்படவில்லை.
”பல கிலோமீற்றர் தூரத்துக்கு "சாரம்" எனப்படும் மரச்சாய்தளத்தை அமைத்து, நிலத்துக்கும் விமானத்துக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தி, யானைகளின் மூலம் கல்லை அவ்வளவு உயரத்துக்கு கொணர்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!” ,
மரச்சரம் அல்ல மண்ணால் ஆனா சரவினை அமைத்துதான் கல்லினை மேலே ஏற்றினார்கள்.
அன்பின் இலங்கேஸ்வரன்,
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.
பொன்னியின் செல்வனின் இலட்சியக் கலைப்படைப்பை நான் தரிசித்தபோது எனது வயது ஐந்து...ஏதும் நினைவில் இல்லை...
பின் பாலகுமாரனின் 'உடையார்' சரித்திர நாவலிலும் வரலாறு இணையத்தளத்திலும் சில அனுபவங்கள்...
விரைவில் நேரில் தரிசித்து எனது நெடுனாள் ஆசையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆதியும் நிமலும் என்னுடன் இணைந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்...
இட்டலிக்காகவாவது...
அன்பின் விதுஷணன்,
இறைவிருப்பு அவ்வாறாயின் நிச்சயம் சந்திப்போம்.
உங்களுக்கே உரிய பாணியில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! வாசிக்க மிகவும் சுவாரசியமாகவும் கருத்து செறிவுடனும் உள்ளது! இந்த கோயிலையும் திறன்மிகு தமிழ் கலைகளையும் காண மீண்டும் இங்கு செல்ல ஆசையாக இருக்கிறது!
அன்புக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி லாவி.
இது நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடம்.
கருத்துரையிடுக