ஏதடா உண்மையில் வாணிபூசை?

AM 9:20


இலங்கையில் உள்ள தமிழ் மாணவர்கள் படிக்கும் பாடசாலைகளின் நவராத்திரிநாட்களில் நடைபெறும் கலைவிழாக்களில்
ஒரு பாட்டு, கட்டாயமாக வீணைச்சத்ததோடும் மிருதங்கத் தட்டலோடும்
தன்னை இடஒதுக்கீடு செய்து கொள்ளும்.

"அடுத்த நிகழ்வாக பாரதியாரின் "வெள்ளைத்தாமரப்பூவிலிருப்பாள்" என்ற பாடலை இன்ன இன்ன மாணவர்(வி)கள் பாடவிருக்கிறார்கள். அதற்கான ஆயத்தங்கள் அரங்கத்தில் நடைபெறுவதால் சபையோரை சற்றுநேரம் பொறுத்திருக்குமாறு வேண்டுகிறோம்" என்ற [பொறுமையை கொல்கின்ற] அறிவிப்பின் பின்னர், அந்தப்பாடலின் அர்த்தம் புரியாமல்
குழந்தைகள் (அல்லது குமரிகள்) வந்து பாடிவிட்டு செல்வார்கள்.(பொருள் புரியாம பாடினா சிவலோகம் போக ஏலாது என்று மாணிக்கவாசகரே சிவபுராணக்கடைசியில் சொல்லிப்போட்டார் என்பதை கவனத்திற் கொள்க.)

சொல்லவந்தது என்னவென்றால்..., இந்த உலகத்தில் பிறந்த இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பட்ட அநுபவம் என்ன சொல்லுதென்டா...,
அந்த அற்புதமான கவிதையின் முதல் இரண்டு பந்திகளுமே
எல்லா இடங்களிலும் திருப்பித்திருப்பி பாடப்படுகின்றன.
எழுச்சியும் சமுதாயத்துக்குத் தேவையான கல்வியைப் பற்றிய ஆழ்ந்த கருத்தும்
விழிப்புண்ர்வு ஏற்றும் திறமும் கொண்ட
அந்தப்பாடலின் மிகுதி எட்டுப் பந்திகளையும் ஏன் தீண்டத்தகாததாய் ஆக்கினார்கள் என்ற கேள்விக்குப் பதிலை அந்தந்தப் பாடசாலைகளின் இசை ஆசிரியர்கள் தான் சொல்லவேண்டும்.


போனபிறவியில் செய்த புண்ணியத்தின் மிச்சப் பயனாக பாரதியாரின்
வெள்ளைத்தாமரைக் கவிதையின் கடைசிப் பந்தியையும் நான் சில இடங்களில் கேட்க நேர்ந்தது. பாட்டில் அல்ல!பேச்சில்!
"நிதி மிகுந்தவர் பொற்குவைதாரீர்" என்று தொடங்கும் அந்தப்பந்தி
எதற்கு உபயோகப்பட்டதென்றால் "நன்கொடைகேட்டல்" என்கின்ற படு புண்ணிய கைங்கரியத்திற்கன்றி வேறல்ல.

ஆக, சுப்பிரமணியத்தாரின் கவிதையின் முதலிரண்டு பந்தி பாட்டாகவும் கடைசிப்பந்தி பேச்சாகவும் வாழவைத்த தமிழ்ப்பெருங்குடியே! கருத்துக் களஞ்சியமாய் விளங்கும் மிச்ச ஏழு பந்திகளையும் அதேபோல் அர்த்தம் புரியாமல் பாடித்தொலைப்பதற்கென்ன? என்ற பெருங்கேள்வி தொண்டை வரை வந்தும், விழுங்குகிற இட்டிலி,சாம்பார் உந்தித்தள்ள வயிற்றுக்கே போய்விடுகிறது.

கலைவாணி விரும்பிக் கேட்கும் பூசை எதுவென்று பாரதியார்
சொல்லுவதை கேட்கையிலே, உணர்ச்சிப்பெருக்கு ஏறுவதையும்
நமக்குத் தெரிந்ததைக்கூட அடுத்தவருக்கு சொல்லித்தராமல் மறைத்தவண்ணம் இருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாது.
இந்தப் பதிவுகூட அந்த உணர்ச்சியின் வெளிப்பாடுதான்!

எளிதாக விளங்ககூடிய இக்கவிதைக்கு உரை என்பது தேவையில்லாததுதான்.
ஆனாலும், ஏற்கனவே அழகாக இருக்கும் நம் தமிழ்க்கன்னியர்கள் தேவையில்லை என்று சீப்பை,கண்ணாடியை முகப்பூச்சை தள்ளிவைக்காத அருங்குணத்தை வணங்கி தமிழ்கூறும் நல்லுலகிலே என் முதலாவது உரைப்படலத்தை ஆரம்பிக்கின்றேன்.
[உரையிற்குறையிருப்பின் என்னைச்சார்ந்தது! கவியில் நிறையிருப்பின் பாரதியைச்சார்ந்தது.]

.


வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்

வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்!

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத்திருப்பாள்!

உள்ளாதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்!

கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

கருணைவாசகத்துட் பொருளாவாள்!

வெள்ளைத்தாமரை பூவில் இருக்கின்ற கலைமகள் (அங்கு மட்டுமே இருப்பதில்லை) வீணைமீட்டுகின்ற ஒலியிலும் இருக்கின்றாள். கொள்ளை இன்பம் தந்து நெஞ்சோடு குலவிக் களிக்கின்ற கவிதைகளைப் படைக்கும் கவிஞர்களின் சிந்தையிலே இருந்து கற்பனை வளத்தையும் கருத்துச்செறிவையும் அளிக்கின்றாள்.
வேதத்தில் உள்ளபொருளைத் தேடி அறிந்து, பின் உணர்ந்து ஓதப்படும்
வேதத்தில் உள்ளாள். (ஐயர்மார் கவனிக்கவும். விக்கிரகத்துக்கு முன்னால் நின்று கடுகதிவேகத்தில் மந்திரங்களை உதறித்தள்ளுகின்ற செயலில் கலைமகள் இருக்கமாட்டாளாம்.) மனதில் கள்ளமில்லாத முற்றும் துறந்த துறவிகள் சொல்லுகின்ற கருணை நிறை வார்த்தைகளில் சரஸ்வதி இருக்கின்றாள்.

மாதர் தீங்குரற் பாட்டிலிருப்பாள்!
மக்கள்பேசும் மழலையில் உள்ளாள்!

கீதம்பாடும் குயிலின் குரலை

கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்!
கோதகன்ற தொழிலுடைத்தாகி

குலவு சித்திரம் கோபுரம் கோயில்

ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்!

இன்பமே வடிவாகிடப்பெற்றாள்!

பெண்களது இனிமையான குரலிலிருந்து வரும் பாட்டில் இருப்பள் கலைவாணி.
வெள்ளைமனத்துப் பிஞ்சுகளான குழந்தைகளின் மழலைப்பேச்சில் உறைகின்றாள். கீதங்கள்பாடித்திரிகின்ற குயிலின் குரலையும் கிளியின் நாக்கையும் அவள் தனது வசிப்பிடமாக்கிக் கொண்டாள்.

ஒருதரம் பார்த்தபின்பு, மறக்க இயலாமல் சிந்தையில் ஞாபகம்வந்து எம்மோடு கூடிகுலவிக் கொண்டிருக்கும்...
ஒருதவறுமில்லாத சிறந்த் வேலைப்பாடுகள் உடைய சித்திரங்கள், சிற்பங்கள் நிறைந்த கோயில்கள் இவற்றிலெல்லாம் பொங்கிச்சொரிந்திருக்கும் அழகின் இடையே வாழுகின்ற கலைத்தாய் ஆனந்தமே உருவானவள்.


வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்!

வெஞ்சமர்க்குயிராகிய கொல்லர்,

வித்தை ஓர்ந்திடு சிற்பியர்,தச்சர்

மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்,

வீரமன்னர் பின்வேதியர் யாரும்

தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்

தரணி மீதறிவாகிய தெய்வம்!


அடுத்தவரை வஞ்சிக்காத தொழிலைப் புரிந்து அதன்மூலம்
தம் வயிற்றுக்கு உணவுதேடி வாழுகின்ற நல்ல மனிதர்களுக்கு மட்டுமே
அன்னை குலதெய்வமாக நின்று பரம்பரையையே காப்பாள்.
[என்ன? வேற தெய்வத்தை தேடலாம் எண்டுதானே யோசிக்கிறீங்கள்?]

போர்நடக்கின்றதென்றால் ஆயுதங்கள் செய்கின்ற கொல்லர்களுக்கு நிறைய வருமானம் வரும். அதனால் அவர்களுக்கு போர் என்றால் உயிருக்கு உயிர்.
[அமெரிக்க ஆயுத வியாபாரிகளையா சொல்லுறார்?]

அப்படிப்பட்ட கொல்லர்களும்,
தத்தம் கலைகளில் கரைகண்ட சிற்பிகளும், தச்சர்களும்,
(பதுக்கிவைக்காமல்) நிறைவாக நல்ல பொருட்களை விற்கும் வியாபாரிக்ள், வீரமுள்ள அரசர்கள், மற்றும் அந்தணர்கள் எல்லோருமே
"தாயே! எங்களுக்கு நீயே தஞ்சம்"என்றுகூறி வணங்கி நிற்கின்ற தெய்வம்
யார் என்றால், அது இந்த உலகத்தில் "அறிவு"என்னும் தெய்வத்தைத் தான்.


தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்!
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்!

உய்வமென்ற கருத்துடையோர்கள்

உயிரினுக்குயிராகிய தெய்வம்!

செய்வமென்றொரு செய்கையெடுப்போர்

செம்மை நாடிப்பணிந்திடுந் தெய்வம்!

கைவருந்தி உழைப்பவர் தெய்வம்!

கவிஞர் தெய்வம்! கடவுளர்தெய்வம்!


அப்படிப்பட்ட அந்தத்தெய்வம் எல்லவற்றையும் அறியும்.
தீமையை நாங்கள் உணர்வதற்காக எங்களுக்குக் காட்டி, பின் அத்தீமையிலிருந்து ஒருபாதிப்பும் இல்லாமல் காப்பற்றுகின்ற தெய்வம்.

முக்தியை விரும்பி உயர்ஞானத்தை வேண்டி நிற்கின்றவர்கள் உயிருக்கு உயிராய் விரும்புகிற தெய்வம். ஒரு செயலை செய்வது என்று முடிவு செய்தவர்கள், அச்செயல் நன்றாக செம்மையாக நடக்க வேண்டும் என்று பணிகின்ற தெய்வம்.

அந்தத் தெய்வம் கை வருந்தி உடலால் வியர்வை சிந்தி உழைக்கின்ற பாட்டளிகளின் தெய்வம்.
கவிஞர்களின் தெய்வம்.
அது தெய்வங்களுக்கே மேலான தெய்வம்.


செந்தமிழ்மணிநாட்டிடை உள்ளீர்!

சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!

வந்தனம் இவட்கே செய்வதென்றால்

வாழி அஃதிங்கெளிதன்று கண்டீர்!

மந்திரத்தை முணுமுணுத்தேட்டை

வரிசையாக அடுக்கி, அதன்மேல்

சந்தனத்தை, மலரை இடுவோர்

சாத்திரம் இவள் பூசனையன்றாம்!



செந்தமிழை இரத்தினம் போல உயர்வாகக் கருதும் நாட்டிலே உள்ளவர்களே!
[அப்பிடி யாரவது இருக்கிறீங்களா?]
நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தத் தெய்வத்தை வழிபடுவோம்!வாருங்கள்!
ஆனால் ஒரு விசயம்!
இவளை வணங்குவது என்றால், "வாழ்க வாழ்க"என்று சொல்லிவிட்டுப் போவதைப்போல எளிதான செயல் இல்லை. கண்டுகொள்ளுங்கள்!
[இங்கே தான் பாரதியார் திருப்புமுனையே வைக்கிறார்]
மந்திரங்களை முணுமுணுத்துக்கொண்டு, புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்து அதற்கு மேலே சந்த்னத்தையும் மலர்களையும் இடச்சொல்லுகின்ற நெறிகள் கலைமகளின் பூசைக்குப் பொருந்தாது.


வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி,

நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்

நகர்கள் எங்கும் பலபல பள்ளி,

தேடு கல்வியிலாதொரு ஊரைத்

தீயினுக்கிரையாக மடுத்தல்

கேடுதீர்க்கும் அமுதம் என் அன்னை

கேண்மை கொள்ளவழியிவை கண்டீர்!


எல்லாத்தீமைகளையும் தீர்க்கக் கூடியவளான என்னுடைய தாய் கலைவாணியின் நட்பைப் பெறுவதற்கு சில வழிகள் இருக்கின்றன. அவை:
1]ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு கலையாவது விளங்கி ஒளிவீச வேண்டும்.
2]ஒவ்வொரு வீதியிலும் ஒன்று அல்லது இரண்டு பாடசாலைகள் அமைக்கவேண்டும்.
3]நம்முடைய தேசத்திலே எத்தனை நகரங்கள் இருக்கின்றனவோ, எத்தனை கிராமங்கள் இருக்கின்றனவோ....., அங்கெல்லாம் பற்பல பாடசாலைகளையும் கல்லூரிகளையும் கட்டவேண்டும். 4]கல்வி என்றஒன்று இல்லாத ஊர் இருக்கின்றதா என்று தேடவேண்டும்.
அப்படி இருந்தால் அதை தீ இட்டு அழித்தே விட வேண்டும். அது இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
இப்படிப் பட்ட இலட்சிய வழிகளைப் பின்பற்றினால் என் அன்னையின் அருளை எளிதாகப் பெறலாம்.

ஊணர்தேசம் யவனர்தந்தேசம்
உதயஞாயிற்றொளிபெறு நாடு

சேணகன்றதோர் சிற்றடிச்சீனம்

செல்வப்பாரசிகப்பழந்தேசம்

தோணலத்த துருக்கம் மிசிரம்

சூழ்கடற்கப்புறத்தினில் இன்னும்

காணும் பற்பல நாட்டிடை எல்லாம்

கல்வித்தேவியின் ஒளிமிகுந்தொங்க



[ஹூணர் என்னும் இனத்தவர் அசோகர் காலத்தில் கணவாய்களினூடாக வட இந்தியாவினுள் புகுந்து சில பகுதிகளை ஆட்சி செய்த இனத்தவர்கள் என்று அறிகிறேன்.]
ஹூணர் தேசம், கிரேக்க,உரோம தேசங்கள்,
உதிக்கும் சூரியனின் முதல் ஒளியை பெறும் நாடு (ஜப்பானை சொல்கின்றாரோ?),
அகலமான சீனா, செல்வம் நிறைந்த பழமையான பாரசிக நாடு,
துருக்கி, மிசிரம் எனப்படும் நாடு, இவை தவிர இன்னும் சூழ்ந்த கடலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் எத்தனை எத்தனையோ நாடுகளில் எல்லாம்
கல்வித்தெய்வமான சரஸ்வதியின் அருள் ஒளி மிகுந்து ஓங்கி நிற்கிறது. அவ்வாறான நிலையில்........ . . . . . , [அடுத்த பாடலில் தொடர்கிறது கருத்து!]


ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்லபாரத நாட்டிடை வந்தீர்

ஊனம் இன்று பெரிதிழைக்கின்றீர்!

ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!

மானமற்று விலங்குகளொப்ப

மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ?

போனதற்கு வருந்துதல் வேண்டா!

புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!


(இப்படியெல்லாம் பற்பல நாடுகள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து
பெருமை பெற்று விளங்கிவரும் இந்த நாளில்....,)
"அறிவு"என்ற சொல்லுக்கே அர்த்தமாக விளங்ககூடிய பாரத நாட்டிலே
வந்து உதித்த மகாஜனங்களே! [இங்கு வந்து என்னத்தைக் கிழித்தீர்கள் என்றால்]

நாட்டின் அறிவுச் சொத்துக்கே ஊனத்தை ஏற்படுத்துகின்றீர்கள்.
கல்வி நாட்டில் ஓங்கி நிற்பதற்காக செய்யவேண்டிய உழைப்பை மறந்தீர்கள். இந்த மண்ணில் மானமில்லாமல் மிருகங்களைப் போல, வாழுவதெல்லாம் ஒரு வாழ்வா?
சரி விடுங்கள்! நடந்து போனதுக்கு வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்?
கவலைப்பட வேண்டாம்! முதலில் இந்தத் தாழ்வை நீக்க முயற்சி செய்வோம்! வாருங்கள்!

அடுத்து வருவது தான் எனக்கு மிகவும் பிடித்த பாரதியார் பாட்டு!

இன்னறுங்கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியங்கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.


1] நம்முடைய சூழல் மாசடைவதைத் தடுத்து, எல்லா இடங்களிலும்
இனிமையான பழங்களைத் தருகின்ற மரங்களை நாட்டி சோலைகளையும் காடுகளையும் அமைத்தல்.

2]இனிய நீரை தருகின்ற குளிர்ந்த நீர்நிலைகளை உருவாக்குதல்.

3]பசி என்று ஒரு உயிர் வருந்தாதவண்ணம் எல்லா இடமும் அன்னதான சாலைகளை ஆயிரக்கணக்கில் கட்டி, உயிர்களின் பசியாற்றுதல்.

4]எல்லா இடமும் பத்தாயிரம் கோயில்கள் கட்டி வைத்தல்.

5]இன்னும் பின்னால் என்னென்ன தருமங்கள் இருக்கின்றனவோ
அவை எல்லாவற்றையும் சிறப்புறச்செய்தல்.

மேலே சொன்ன எல்லாமே சிறந்த தருமங்கள்தான். உயிர்களின் துன்பத்தை
கண்ணீரை துடைப்பவை தான். புண்ணியத்தை வாரி வாரிக் கொடுப்பவைதான்.
ஆனாலும், இவை எல்லாம் செய்வதை விட, முதலில்
ஒரு ஏழைக்கு கல்விவைக் கொடுங்கள்! அதுவே மாபெரும் தர்மம்.
எல்லாப்புண்ணியங்களையும் விட கோடிமடங்கு புண்ணியத்தை கொடுக்கும்.


நிதி மிகுத்தவர் பொற்குவைதாரீர்!
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!

அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்!

ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!

மதுரத்தேமொழிமாதர்களெல்லாம்

வாணிபூசைக்குரியன பேசீர்!

எதுவும் நல்கியிங் கெவ்வகையானும்

இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!



பணம் நிறைந்து கொழிக்கின்றவரே! பொன்குவியலைத்தாருங்கள்!
நடுத்தரவர்க்க மக்களே! உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதைகொடுங்கள்!
அதையும் செய்ய முடியாமல் இருப்பவர்களே!
உங்கள் வாய்ப்பேச்சினால் கல்வியின் தேவையைபற்றி எல்லாரிடமும் பேசி மனமாற்றத்தை கொண்டுவாருங்கள்.

உடல்பலம் பெற்றவர்களே. உங்கள் உடல் உழைப்பைக்கொடுங்கள்!

இனிமையான மொழிகளை உதிர்க்கும் பெண்களே!
(வளவளவென்று ஊரான் வீட்டுக் கதைகளைப் பேசிக்கொண்டு இருக்காமல்)
நாம் செய்யப்போகும் இந்த உண்மையான "வாணி பூசை"க்கு தேவையானவற்றையே பேசுங்கள்!

எதைக் கொடுத்தென்றாலும்......, எப்படியாவது......, இந்த மாபெருஞ்செயலைச் செய்து முடிப்போம்! வாருங்கள்!

ஆதித்தன்.
09-12-2008

11 comments:

Nimal சொன்னது…

இது கலக்கல்...!!!

(ஐயர்மார் கவனிக்கவும். விக்கிரகத்துக்கு முன்னால் நின்று கடுகதிவேகத்தில் மந்திரங்களை உதறித்தள்ளுகின்ற செயலில் கலைமகள் இருக்கமாட்டாளாம்.)

[அமெரிக்க ஆயுத வியாபாரிகளையா சொல்லுறார்?]

எழுத்தில நக்கல் நர்த்னமாடுது... இப்பிடியே இன்னமும் எழுதுங்கோ...!!

ஆதித்தன் சொன்னது…

நன்றி தோழரே!! :-D

tharshayene சொன்னது…

உண்மை .... உண்மை...., மெய்யொழிய வேறொன்றும் இல்லை...

கிழட்டுப்பூசாரி சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே,
மிக எளிமையாகவும், நகைச்சுவையாகவும் வாணி வழிபாடு பற்றி எடுத்துரைத்திருக்கின்றீர்கள்.



(ஐயர்மார் கவனிக்கவும். விக்கிரகத்துக்கு முன்னால் நின்று கடுகதிவேகத்தில் மந்திரங்களை உதறித்தள்ளுகின்ற செயலில் கலைமகள் இருக்கமாட்டாளாம்.)


நன்றாக இருக்கின்றது. காரணம் இன்று பிராமணர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மனிதர்களும் எமது வாழ்க்கை பாதையிலிருந்து விலகி எங்கோ சென்றுகொண்டிருக்கின்றோம். இதன் காரணமாக இன்று எமது கலாசாரம், பண்பாடு என்பவற்றை மறந்து விட்டோம் என எண்ணத்தோன்றுகின்றது.

பெயரில்லா சொன்னது…

இனிமையான மொழிகளை உதிர்க்கும் பெண்களே!
(வளவளவென்று ஊரான் வீட்டுக் கதைகளைப் பேசிக்கொண்டு இருக்காமல்)
நாம் செய்யப்போகும் இந்த உண்மையான "வாணி பூசை"க்கு தேவையானவற்றையே பேசுங்கள்!

எதைக் கொடுத்தென்றாலும்......, எப்படியாவது......, இந்த மாபெருஞ்செயலைச் செய்து முடிப்போம்! வாருங்கள்

ஆதித்தன் சொன்னது…

நன்றி ஐயா!

இரா பிரஜீவ் சொன்னது…

"குழந்தைகள் (அல்லது குமரிகள்)" அனுபவம் நல்ல அனுபவம்.

"இந்த உலகத்தில் பிறந்த இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பட்ட அநுபவம் என்ன சொல்லுதென்டா...,"
என்னது உங்களுக்கு 23 வயசா? ஏன் 18 எண்டலாமே? பொருள் தெரியாம மட்டும் இல்ல கண்ணா பொய் சொன்னலும் சிவலோகம் கிடையாது!

"ஐயர்மார் கவனிக்கவும். விக்கிரகத்துக்கு முன்னால் நின்று கடுகதிவேகத்தில் மந்திரங்களை உதறித்தள்ளுகின்ற செயலில் கலைமகள் இருக்கமாட்டாளாம்"
அவங்களுக்கு கலைமகள் தேவையில்லை இலட்சுமி இருந்தா காணும் என நினைக்கிறங்களோ என்னவோ

"பெண்களது இனிமையான குரலிலிருந்து வரும் பாட்டில் இருப்பள் கலைவாணி."
பாட்டில இருந்து என்னப்பா பிரியோசனம், மனசில இல்லையா இருக்க வேணும்.

அண்ணைக்கு வீட்டில நிறைய நேரம் போகாமல் இருக்குதோ? சமூக அக்கறை இப்படி பிச்சுக்கொண்டு வருகுது!!!
வாழ்க வளமுடன்.

ஆதித்தன் சொன்னது…

அன்பு நண்பன் பிரஜீவ்!
ஹி ஹி ஹி
நமக்கு சமூக அக்கறை இப்பிடி அடிக்கடி பிச்சிக்கும்.

//என்னது உங்களுக்கு 23 வயசா? ஏன் 18 எண்டலாமே?//
23வயசா இருக்கேக்க எழுதின கட்டுரையப்பா இது. திகதியப்பாருங்கோ!

ஊர்சுத்தி... சொன்னது…

நல்ல விளக்கம் ஆதி. அதனூடே பகடியும் அழகு.

ஊர்சுத்தி... சொன்னது…

நல்ல விளக்கம் ஆதி. அதனூடே பகடியும் அழகு.

ஆதித்தன் சொன்னது…

நன்றி பிஜி ;)

கருத்துரையிடுக