நூலின்றி அமையாதென் வாழ்வு - 1

PM 6:01

கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களின் கனவுகள் என்னைத் தழுவுகின்றன.எனக்கே எனக்கான அந்தத் திரைப்படங்களில் ஆழ்ந்துபோகிறேன். அவற்றுள் சிலநேரம் நானும் பங்கேற்கின்றேன். பார்வையாளனாக நான்மட்டுமே பார்வையிடுவதில் தனிமையை ஒருபோதும் உணர்ந்ததில்லை. நல்ல புத்தகங்களும் இப்படிப்பட்ட கனவுகளைப்போல நம்மை தமக்குள் இழுத்துக் கொள்கின்றன. எழுத்துக்கள் சொற்களாகி, சொற்கள் வார்த்தைகளாகி வார்த்தைகள் கருத்துக்களாகி மனத்தில் புது உலகம் ஒன்றைக்கட்டுகின்றன.

எல்லோருக்கும் இந்த புதுச்சூழலில் ஆழும் உணர்வுகள் இருப்பதில்லை என்பதை
பலகாலம் கழித்துத்தான் அறிந்தேன். நூல்களை சில தோழர்கள் காகிதங்களாகவே பார்க்கிறார்கள். ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொன்றில் லயிக்கிறது. அதனால்தான் உலகத்தில் இன்னும் சுவாரசியம் மிச்சம் இருக்கிறது.

அநேகமாக பத்தாவது வயதில் "பாரதியார் கவிதைகளை" நான் புரட்டினேன் என்று நினைக்கின்றேன். பதின்மூன்றுவருடங்களாக அதனுடனே வாழ்கின்றேன்.
அக்காலகட்டத்தில் புரியாத பாரதியின் பல வார்த்தைகள், சொல்ல முனைந்த கருத்துக்கள் இன்று புலப்படுகின்றன. "பொன்னியின் செல்வனும்" இதைப்போலவே! வாழ்வின் ஒவ்வொருகட்ட முடிவின்போதும் அந்தக்கதை
மீண்டும் மீண்டும் புதிதாகவே தோன்றுகின்றது.

சில கனவுகள் வேதனையைக்கொடுத்துவிட்டு தமது இறுதிப்பக்கத்தை மூடிக்கொள்கின்றன. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுவதற்காய் என் கைகளை
அவைகளே இயக்குவது எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை. உயிரோட்டமுள்ள நூல்கள் கைகளை மட்டுமல்ல, உலகத்தையே இயக்கக் கூடியவை.

விரக்தியின் உச்சக்கட்டத்தில் மனம் சஞ்சரிக்கும் வேளைகளில், பாசமுள்ள எழுத்துக்கள் அதை இழுத்துக்கொண்டுவந்து தஞ்சம் கொடுக்கின்றன. மன இறுக்கத்தை விடுவிக்கக்கூடிய பண்பை சில புத்தகங்கள் அளவுக்கதிகமாக வெளிப்படுத்துவதால் வாசிக்கும்போதே வாய்திறந்து சிரித்துவிடுகின்றேன்.

பாக்கியம் ராமசாமியின் "அப்புசாமி"கதாபாத்திரத்தைக் கொண்ட புனைகதைகள்
வாசித்தபின்புகூட நினைத்து நினைத்துச்சிரிக்கவைத்து, திட்டு வாங்கித்தந்திருக்கின்றன. சுஜாதாவின் கதைகள் பெரும்பாலும் வாசகனின் வாயோரத்தில் சிரிப்பை குத்தகை எடுத்துவைத்திருக்கும்.

"பாரதியார் கட்டுரைகள்"என்ற நூலை எத்தனைபேர் அறிந்திருப்பர்களோ தெரியாது. என் அம்மா சிறுவயதில் அதைவாங்கித்தராமல் விட்டிருந்தால் இன்றுவரை அப்படிப்பட்ட ஒன்றை நான் அறிந்திருக்கமாட்டேன். பாரதியின் மனவெளிப்பாடுகளாக அந்தக்கட்டுரைகள் அமைந்தைருப்பதை இன்று உணர்கிறேன். சில பக்கங்கள் வெளிப்படுத்தும் நகைச்சுவை, இப்படிப்பட்ட மனிதருக்குள் இந்தளவுக்கு நகைப்புணர்வு இருந்ததா என்று எண்ண வைக்கின்றன.

நகைப்பு மட்டுமல்லாது பயம், ஆசை, கோபம், வேதனை, வறுமை, ஒருதலைக்காதல், வஞ்சனை என்று தான் கவிதைகளில் காட்ட முடிந்த உணர்ச்சியையும் விட பலமடங்கு உணர்ச்சியுடன் மனித இயல்புகளை கதாபாத்திரங்களாக்குகிறார் பாரதி. தூர நின்று எழுச்சியுடன் கவிதை சொன்ன ஒருவரை, தோளில் கைபோட்டு கதைசொல்லும் நண்பனாகக் காட்டுகின்றன அவரது கட்டுரைகள்!

உள்ளத்து உணர்ச்சிகள் எழுத்துக்களாகும் போதுதான், வெள்ளமாய்ப்பெருகி வாசகனின் மனத்தைத் திருடிக்கொண்டு போகமுடியும் என்ற ரகசியம் புரிந்தாலும் அதற்கான கொடுப்பினை பலருக்கு வாய்ப்பதில்லை.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு உழவன். படிப்பவன் மனதில் அவை எழுத்து என்ற ஏர்கொண்டு உழுது, பண்படுத்தி பல கருத்துவிதைகளை விதைக்கின்றன.
காலபெருவெளியின் ஓட்டவேகத்தில் பற்பல அழுத்தங்களால் சில விதைகள்
சிதைந்தாலும், மீதி விதைகள் மனிதனின் ஆளுமையை நிர்ணயிப்பதிலிருந்து அவனது நடத்தையை இயக்கும் குணங்களை மேம்படுத்துவது வரை பங்கெடுக்கின்றன.

இலையிலிருந்து பனி வழிந்து துளியாகாத ஒரு காலைப்பொழுதில் தேனீர் கோப்பையும் நானும், அரவிந்தரின் யோகவாழ்வைக் காட்டுகின்ற புத்தகத்தை வாசித்தோம். எழுந்துகொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தவண்ணம், அதன் கடைசிப்பக்கத்தை என்விரல்கள் மூடியபோது, மனம் அமைதியில் மூழ்கி அலையற்றுக்கிடந்தது.

ஆதித்தன்.
14-12-2008

6 comments:

Muruganandan M.K. சொன்னது…

ரசித்த வரி .."ஒவ்வொரு புத்தகமும் ஒரு உழவன். படிப்பவன் மனதில் அவை எழுத்து என்ற ஏர்கொண்டு உழுது, பண்படுத்தி பல கருத்துவிதைகளை விதைக்கின்றன."

மேற் கூறியவை மட்டுமின்றி உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் எனது உள்ளத்திலிருந்தும் எழுந்ததாகவே உணர்கிறேன்.

ஆதித்தன் சொன்னது…

நன்றி ஐயா

Nimal சொன்னது…

ஆதிக்கு எழுதவும் சொல்லிக்கொடுக்கவேண்டுமா என்ன... :)

வாசிப்பை பற்றிய ஒரு சிறு அனுபவ பதிவாக இருந்தாலும் ஆழமான எழுத்துக்களாகவே எனக்கு தோன்றுகிறது...

Nimal சொன்னது…

//"பொன்னியின் செல்வனும்" இதைப்போலவே! வாழ்வின் ஒவ்வொருகட்ட முடிவின்போதும் அந்தக்கதை மீண்டும் மீண்டும் புதிதாகவே தோன்றுகின்றது.//

நிதர்சனமான உண்மை... ஒரு சிலவே இவ்வாறான ஒரு உணர்வை மனிதருள் உருவாக்கவல்லன...

இதைபற்றி முன்னரும் ஒருதடவை ஒரு தூங்க மறந்த பின்னிரவில் நான் கதைத்ததாய் ஞாபகம்... ;)

Nimal சொன்னது…

//இலையிலிருந்து பனி வழிந்து துளியாகாத ஒரு காலைப்பொழுதில் தேனீர் கோப்பையும் நானும், அரவிந்தரின் யோகவாழ்வைக் காட்டுகின்ற புத்தகத்தை வாசித்தோம்.//

ஒரு கல்லூரி மாணவனின் விடுமுறைக்காலம் இவ்வாறும் அமையலாம் என்பதற்கு ஒரு வித்தியாசமான உதாரணம்.

அதுவும் பெங்களூர் போன்ற 'கொண்டாட்ட நகரில்' ஆதியால் மட்டும் தான் இது முடியும்... :)

ஆதித்தன் சொன்னது…

:-D
ஊக்கத்துக்கு நன்றி மச்சான்!
பெங்களூர்க் குளிர் இருமடங்காக மாறிவிட்டதைப்போல தோன்றுகின்றது.
:-D

கருத்துரையிடுக