அறியாப்பொருள் உன் பொருளன்றோ?
அறிய நினைத்தும் முடியாமல்
சரியோ பிழையோ அறியாத
சகதிக் குழம்பாய் இருப்பிங்கு.
முறியாவினையோ முன்வினைகள்?
மூலம் எதுவோ அறியேனே?
வெறியோடலையும் வெறுநாயென்
றெண்ணி என்னை வெறுக்காதே.
கனவிற் கிளர்ந்த சுகமோ இக்
காலக்கூத்தும் காட்சிகளும்?
உணவிற் கமைந்த சுவை போல
உண்டுமுடிக்க மறைந்திடுமோ?
தினவும் வலியும் வெறியோடு
திரியும் மூர்க்கக் கடையேனின்
குணமும் மனமும் ஒருநாளில்
கோவே உன்னைக் குறியாதோ?
பொருளுக்கலையும் உறவுகளும்
பொருளுக்கலையும் உள்மனமும்
பொருளுக்கலையும்படி சொல்லும்
பொருளுக்கலையும் போதனையும்
பொருளுக்கலைந்தே அழிவாகும்!
புன்மைச்சகதிப் பிரவாகம்
பொருளுக்கலைய வைக்காதுன்
பதமேபொருளாய்த் தருவாயே.
சொல்லும் நெஞ்சைக் கூறாக்கி,
கொத்திக் கொத்திக் கூழாக்கி,
அல்லும்பகலும் அது ஈனும்
ஆறாவலியாய்த் தீயூற்றி,
வெல்லும் சொல்லில் வாள்வீச்சை
வைத்துக்கீறி வாயூறிக்
கொல்வார் அவரைப்பழிதீர்க்கக்
காலந்தேடி அலைவேன்நான்.
வலியும் பழியும் உணர்வேறி
வாழ்வும் பிறருக்குதவாத
நிலையும் நிறமும் நீ மாற்றி
நீங்காக் கருணை நீரூற்றி
பழிகள்விட்டு மன்னிக்கும்
பண்பைத்தந்துன் அழகான
ஒளியின்மடியில் இனிதாக
நானும் உறங்க இசைப்பாயே.
:- ஆதித்தன்
09-06-2010
வேண்டிப் பிதற்றல்.
10:27 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 comments:
மரபுக் கவிதைகள் வாசித்து நாளாகிவிட்டன. நிறைய எழுதுங்கோ..
//பொருளுக்கலையும் உறவுகளும்
பொருளுக்கலையும் உள்மனமும்
பொருளுக்கலையும்படி சொல்லும்
பொருளுக்கலையும் போதனையும்
பொருளுக்கலைந்தே அழிவாகும்!
புன்மைச்சகதிப் பிரவாகம்
பொருளுக்கலைய வைக்காதுன்
பதமேபொருளாய்த் தருவாயே.//
மிகப் பிடித்த வரிகள் இவை. விருத்தத்தின் நிலை குலையாமல் இயல்பாகவே அறு சீருக்குள்ளே அடக்கியிருக்கும் பாங்கு அருமை.
படிக்கிற தருணத்தில் நுட்பமான வரிகளும், பொருள் செறிந்த கவியும் பிரம்மிப்பைத் தருகின்றது. இந்த நடைக்கு வாழ்த்துக்கள். அடிக்கடி எழுதுங்கோ ..,
மதுவதனன்...
அன்றைய கூட்டத்தின் பின், இனி முகப்புத்தகத்தில் எழுதும் கவிதைகள் அனைத்தையும் வலைப்பதிவிலும் எழுதுவதாய் முடிவு செய்துள்ளேன்.
அன்புக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.
நன்றி தர்ஷாயினி.
மரபும் சந்தமும் மனதை கவர
மயக்கும் ஆன்மிகம் சற்றே நெருட
தொடரும் கவிதைப் பயணத்தில்
வருகவே சமூக வழித்தடத்தில்
மரபும் சந்தமும் மனதை கவர
மயக்கும் ஆன்மிகம் சற்றே நெருட
தொடரும் கவிதைப் பயணத்தில்
வருகவே சமூக வழித்தடத்தில்
நன்றி அகத்திய லிங்கம் ஐயா.
மணிவாசகர் எல்லாம் இப்போது இல்லாமல்ப் போனார்கள் !
இன்னும் இன்னும் வழமை எழுத வேண்டும் குழந்தாய்...!
நான் தொடர்ந்தும் வாசகனாயிருப்பேன்...
வாழ்த்துக்களுடன் ,
ஆநி -
கருத்துரையிடுக