இத்தால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....,
ஆங்கில நாட்காட்டியின்படி, இன்றோடு நான் பதிவுலகில் தடம் பதித்து ஒரு ஆண்டு கழிந்தது என்பதாகும். இந்தச்செய்தியை முக்கியமற்றதாக்கும் சதிநோக்கில் இன்றையதினம் பல செய்திகள் வெளிவந்த போதும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, இப்பதிவைப் படித்து, தாம் முன்செய்த பாவவினைகளை
கழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என் வணக்கம்.
என்ன எழுதுவது என்று தெரியாமல் நிறைய நாட்கள் பதிவைத் தொடவில்லை.
பதிவைத் தொடவில்லையாதலால், பதிவொன்று வைத்திருக்கிறேன் என்பதை மறந்து சில வாரங்கள் கழிந்தன. எப்போதாவது நடக்கும் கிரகமாற்றங்கள் பதிவுலகத்தை ஞாபகப்படுத்துவதால், மூக்கு என்று ஒன்று இருந்தால் சளி என்று ஒன்று இருக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை மீறாது, தமிழ்வற்றிப்போய் என் பதிவு காய்ந்துவிடாமல் அவ்வப்போது பதிவு போட்டுவருகிறேன்.
தமிழ்கூறும் நல்லுலகம் செய்த தவப்பயனாக, இன்னும் ஆறுமாதங்களுக்கும்
இதே நிலை நீடிக்கும். அதன்பிறகு ஏற்படப்போகும் கிரகமாற்றத்தினால் நாள்தோறும் என்பதிவுக்கு முகங்கொடுக்கும் சங்கடநிலை அனைவருக்கும் வரக்கடவது!
பதிவு இடும் தொழில்நுட்பம், தமிழை இணையத்தில் எழுதும் முறைகள், தமிழ்மணம் போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தி, என்னையும் ஒரு வலைப்பதிவராக்கி அழகுபார்க்கவேண்டி,
(திருமங்கலத்தில் அழகிரியைப்போல்) கடுமையாக உழைத்து,
என் தளத்தின் வார்ப்புருமுதற்கொண்டு அனைத்தையும் வடிவமைத்து, (இடைக்கிடையே நான் விட்ட கொட்டாவிகளையும் சகித்துக்கொண்டு,) இன்று நான் இந்த நிலைக்கு(?) வரக்காரணமாக இருக்கும் நண்பர் (தோழர்)ஸ்கந்தகுமார் நிமலப்பிரகாசன் அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து மகிழும் இந்த இனிய வேளையிலே...,
இனிமேலும் எனக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் பெறற்கரிய பெரும் பேறு, அவருக்கு மட்டுமே இருப்பதை ஞாபகப்படுத்தி வைக்கிறேன்.
காசு கொடுத்தால்தான் வலைப்பதிவு வைக்கமுடியும் என்ற நிலை இருந்தால்,
ஒரு தலைசிறந்த வலைப்பதிவரை இந்தச்சமூகம் இழந்திருக்கும். அப்பேரிழப்பை தடுத்து நிறுத்தி, என் உரைநடைத்தமிழ் தவழ, ஒரு தரை தந்த (இலவசமாக),
கூகுள் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவிக்கிறேன்.
அத்துடன், என்பதிவுகளை திரட்டி வழித்தெடுத்து பிறபதிவர்தம் கண்காணச்செய்து, அவர்கள் காறித்துப்பும் முன்பே, பட்டியலில் இருந்து அப்புறப்படுத்தி காத்து ரட்சிக்கின்ற தமிழ்மணம் திரட்டி குழுவினருக்கும்,
எப்போதாவது இருந்துவிட்டு நான் எட்டிப்பார்க்கும் ஆளாக இருந்தாலும்
என்முயற்சி இன்றியே பதிவை இணைத்துக்கொள்ளும்
இலங்கை வலைப்பதிவர் திரட்டியின் நிர்வாகிகளுக்கும், இன்னும் என்பதிவுகள் எங்கெங்கெல்லாம் திரட்டப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் நிர்வாகிகளாக இருக்கும் புண்ணியவான்களுக்கும் நன்றிகள்.
அப்படி, அவ்வப்போது நான் போடும் பதிவுகளுக்கு, (என்னைப்போல அல்லாமல்)
சுறுசுறுப்பாக கருத்துக்களை அள்ளி வழங்குவதற்காக பாரி மன்னனின் பேரப்பிள்ளைகள் பதிவுலகத்தில் பிறந்து உலா வருகிறார்கள். (கவனிக்க! என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம்!) அவர்களுக்கும் என் நன்றியறிதல் சென்றடைகிறது. என்பதிவுக்கு வரும் கருத்துக்கள் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துக்கு மாற்றாக வருவதில்லை. இந்தப்பதிவினால் பலர் உளரீதியாக பாதிப்புறப்போவது நிச்சயம் என்பதால், இன்றுமுதல், மாற்றுக்கருத்துக்களே அரங்கேறும் என்று களிப்பெய்துகிறேன். (பின்னூட்டம் என்ற சொல், FEEDBACKஎன்ற ஆங்கிலச்சொல்லின் தாக்கம் உள்ளதால் மட்டுமன்றி, என் பின்னால் நின்று எதை ஊட்டினாலும் நான் ஏற்பதில்லையாதலாலும் தவிர்க்கமுடியாதநிலையால் அச்சொல் தவிர்க்கப்படுகிறது.)
இந்த வலைத்தளத்தின் அத்தியா"வசிய"த் தேவைக்காக, சில பதார்த்தங்கள் கி.பி.2008ம் ஆண்டு திருடப்பட்டன. அவையாவன:
(தி.ப.இ. :- திருடப் பட்ட இடம்)
1] தலைப்பு- காலப்பெருங்களம்.
தி.ப.இ:- எட்டயபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்
சுப்பிரமணியத்தின் வீடு.
2] தஞ்சைப்பெரியகோயில் விமானம்.
தி.ப.இ:- தஞ்சைப் பெரியகோயில் விமானம்.
இந்த ஒருவருட காலமாக, தெரிந்தோ தெரியாமலோ என் எழுத்துக்கள் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், எந்தச் சகோதர / சகோதரியாவது என்பதிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், தயவு செய்து என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற வார்த்தையை, என்னிடம் எதிர்பார்த்தால், அதனால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். "உன் எழுத்து மற்றவர்களை எந்தவகையிலாவது பாதிக்கும் போது தான், அது வெற்றி பெறுகிறது" என்பதை, ஒருநாள் என் முன் தோன்றிய ஒரு மகான் திருவாய்மலர்ந்தருளினார்.
(அப்போது நான் கண்ணாடியின் முன் நின்றேன் என்பது இங்கு தேவையில்லாத விடயம்!)
ஆதித்தன்
27-01-2009.
அனுபவம் |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
15 comments:
ரசித்தேன் படித்தேன் அருமை...
vote now for tamil bloggers
ஆகா... அருமை... அற்புதம்... அசத்தல்... அழகு...
வாழ்த்துக்கள்...!
(இந்த பதிவில் எனது பெயர் குறிப்பிடப்பட்டதற்கும் இந்த கருத்துக்களுக்கும் எந்த விதமான நேரடி, மறைமுக, பக்கவாட்டான தொடர்பும் இல்லை...)
//இனிமேலும் எனக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் பெறற்கரிய பெரும் பேறு, அவருக்கு மட்டுமே இருப்பதை ஞாபகப்படுத்தி வைக்கிறேன்.//
நன்றி நன்றி...
உங்கள் தமிழ்ச்சேவையில் (பி.பி.சி. தமிழ்ச்சேவை போல) என்னாலும் பங்களிக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சி...!!!
(பின்னூட்டம் என்பதை கருத்துரை என்றும் சொல்லலாம்)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்களே!
தமிழ்கூறும் நல்லுலகம் செய்த தவப்பயனாக, இன்னும் ஆறுமாதங்களுக்கும்
இதே நிலை நீடிக்கும். அதன்பிறகு ஏற்படப்போகும் கிரகமாற்றத்தினால் நாள்தோறும் என்பதிவுக்கு முகங்கொடுக்கும் சங்கடநிலை அனைவருக்கும் வரக்கடவது!//
நக்கல் பதிவில ததும்பி வழியுது..வாழ்த்துகள் நண்பரே! ம்...பாரி மைந்தர்கள் யார் என்று சொல்ல முடியவில்லையே?? தொடர்ந்தும் எழுதுங்கோ???
நன்றி கமல்! கருத்துரை இடும் அனைவருமே வள்ளல்கள்தான்! ஹி ஹி ஹி!
புதிதாய் எதோ எழுதி கிளித்திருப்பான் எண்டு வந்தா... அடங்க... கொய்யால....
ச்சா... என்ன தமிழ் இது...
வர வர இந்திய வாசம் அதிகமா அடிக்குது என்ன செய்ய...
தயவு செய்து ஏதாவது எழுதணும் எண்டு மற்றவங்க (என்னையும் சேர்த்துத்தான்) மாதிரியில்லாம வித்தியாசமா எழுதடாங் கொய்யால (?)
[அப்பாடா! மாற்றுக்கருத்து வரத்தொடங்கி விட்டது.]
நண்பா! என்ன செய்ய?
நாரோடு சேர்ந்த பூவும் நாறத்தானே செய்யும்?
ஹி ஹி ஹி!
ஆதித்தனைக் காணவில்லை என்று தேடினேன்!அப்பாடி.......இனி தமிழ் மெல்ல வாழும்!
சுறுசுறுப்பாக கருத்துக்களை அள்ளி வழங்குவதற்காக பாரி மன்னனின் பேரப்பிள்ளைகள் பதிவுலகத்தில் பிறந்து உலா வருகிறார்கள். (கவனிக்க! என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம்!) அவர்களுக்கும் என் நன்றியறிதல் சென்றடைகிறது. என்பதிவுக்கு வரும் கருத்துக்கள் பெரும்பாலு///
உங்கள் ரசிகராக என்னையும் சேர்த்துக்கொள்ளுங்களேன்...
நன்றி செலுத்தல் அசத்தல்..
தேவா...
மதி அக்கா, தேவா,
வருகைக்கும் கருத்துக்கு நன்றி!
தொடருங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்.
நன்று நண்பா!
பதிவிற்குப் பதிவு உன் எழுத்தின் மெருகு அதிகரிக்கிறது.
வாழ்த்துக்கள்...!
அருமையான எழுத்து வளம்....தற்போது எங்கே இருக்கிறாய் அப்பனே ? கொழும்பிலா ?
ஆநி-
கருத்துரையிடுக