சாவோடிவை போகும்! - திருக்குமரன் கவிதைகள்

3:14 PM

கண்ணுருட்டிக் கண்ணுருட்டிக்
களவாய் எனை எடுத்து
உன்னிலெனை இறுக்கி
ஒட்ட வைத்துயிர் குடித்து
ஏனென்றே விளங்காமல்
எனையெறிந்து நீ போக
நான் நின்று நடுத்தெருவில்
அழுவனென்றா நினைத்தாய்?

போ.....

மண்ணளவும் கவலையில்லை!
மரித்தது போல் ஆனாலும்
எண்ணி இதைப்பற்றிக் கவலையுறேன்.
வாழ்வோட்டம்
என்னை இரும்பாக மாற்றும்தான்!
ஆனாலும்......,
கடல் பார்க்க, மரம் பார்க்க
நாம் போன இடம் பார்க்க,
சொன்ன கதை எல்லாம்
சுத்திவரும்.
போகட்டும்!

மனக்கொதிப்பு, உடற்கொதிப்பு
எல்லாமே உன்னிடத்தில்
தினம் தினம் நான் சமர்ப்பித்து
திருப்தி அடைந்த சுகம்
இனியில்லை என்றாலும்,
எனக்கென்ன இது பெரிய
பனிப்போரா?
"மறக்காமல் தினம் உருகிச்சாவதற்கு"
விதி வந்துந்தி எமை
வேறாக்கி....,
இன்னொரு கை

உன்மீது தொடுவதற்கு உரிமை கொண்டால்...?

நான் 'பெரிசாய்'
நொந்தொடிந்து போகேன்!?
நெகிழேன்!?
இருந்தாலும்......

சின்னக்கண்கலக்கம்,
தொண்டை அடைத்தபடி
சொற்கள் வரமறுக்கும்.
நெற்றிச் சுருக்கு விழும்,
நெஞ்சடைக்கும், வாய் குளறும்.
பற்றுதல் அற்றுப்போம்!
பார்வைத்திரை நடுங்கும்.

'சற்றுக் காலத்தில் என்
சாவோடிவை போகும்'
சிற்றின்பப்பிரிவில்லை
என அறிவேன். என்றாலும்
மற்ற மனிசரைப்போல்
கவலையுறேன்.
நீ போடி.


நன்றி:
கவிஞர் திருக்குமரன்.
"திருக்குமரன் கவிதைகள்".

6 comments:

தமிழ் மதுரம் சொன்னது…

ஆதித்தா! சந்தக் கவிதை அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள் கவிஞருக்கு! உங்கள் ஏக்கம் பாடலை. இக் கவிதை நினைவு படுத்துகிறது. கனவிற்குள் கருவாக,...கற்பனையின் ஊற்றாக..............

ஆதித்தன் சொன்னது…

:-)

Muruganandan M.K. சொன்னது…

"சின்னக்கண்கலக்கம்,
தொண்டை அடைத்தபடி
சொற்கள் வரமறுக்கும்.
நெற்றிச் சுருக்கு விழும்,
நெஞ்சடைக்கும், வாய் குளறும்.
பற்றுதல் அற்றுப்போம்!
பார்வைத்திரை நடுங்கும்."
பிரிவின் துயர் நெஞ்சை அழுத்துகிறது

Chandravathanaa சொன்னது…

அருமையான கவிதை.
கருத்தோடு அழகாக சந்தமும் அமைந்து
மிக நன்றாக இருக்கிறது.

ஆதித்தன் சொன்னது…

அன்பின் மருத்துவர் மற்றும் சந்திரவதனா,

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Chandravathanaa சொன்னது…

வணக்கம் ஆதித்தன்,

இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருப்பதால் உங்கள் அனுமதியின்றி எனது தளத்தில் பதிந்துள்ளேன்.
ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி

manaosai.com

கருத்துரையிடுக