நானும் நிமலபிரகாசனும் திடீரென்று நிச்சயித்த பயணம் அது! பெங்களூர்த்தரிப்பிடத்தில் எட்டுமணி போல வந்துசேர்ந்தோம். வண்டிக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது.நிமல் சென்னையில் ஒரு மடிக்கணணி வாங்கியிருந்தான். ஒரு காவல் அதிகாரி மடிக்கணணியை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
அவர் திருமுகம், விஜயகாந்த் மாதிரி இருந்ததா இல்லை அர்ஜுன் மாதிரி இருந்ததா என்பது இருட்டில் சரியாக தெரியவில்லை.
தமிழ்நாட்டு சொகுசுப்பேரூந்து வழமை போல் தாமதமாக வந்து, இனமானம் காத்தது. பேரூந்தில் இரவு வல்லவனுக்கு வல்லவன் படம் போட்டார்கள். தொடங்கிக் கொஞ்சநேரத்திலேயே ரஜினிகாந்த் நிமலுக்கு தூக்கமாத்திரைகொடுத்துவிட்டார். ராதிகா ரஜினிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கையில்தான் எனக்கு கொட்டாவியே வந்தது.
கண்விழித்த போது மலைக்கோட்டைதெரிந்தது. திருச்சிக்குள் நுளைந்து தஞ்சையை நோக்கி விரைந்தது பேரூந்து.கசிந்துவரும் காவிரிக்கே இந்தப் பசுமை என்றால், காவேரி நிரம்பிவந்த காலங்களில் தஞ்சை எப்படி இருந்திருக்கும்?
சங்ககாலத்தில் கட்டப்பட்டதைப் போன்ற ஒருவிடுதியில் பைகளைவைத்து குளித்துவிட்டு, தஞ்சைபெரிய கோயிலுக்கு நடந்தோம். நாம் எங்கே இருக்கிறோம் கோயில் எங்கே இருக்கிறதென்று கூடதெரியாது.வழிவிசாரித்து போய் சேர்வதில் என்னவோ ஒரு சுவாரசியசொர்க்கமே இருந்தது.
என்னவென்று சொல்ல? அந்தக்கோபுரத்தைக் கண்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சிவெள்ளம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது. நிச்சயமாக முழுவதுமான பக்தியின்பாற் பட்டதல்ல! பத்துவருடங்களுக்குபின் 2002ல் சமாதானம் வந்தபோது ஊருக்குப்போனபோது உள்ளெழுந்த அதே உணர்ச்சி!
வாளை உருவலாம் என்றுதான் பார்த்தோம்! அதற்கு வழியில்லாததால் புகைப்படக்கருவியை உருவிக்கொண்டு கோயிற்பிரவேசம் செய்தோம்.
2010ம் ஆண்டோடு தஞ்சைப்பெரிய கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிவடையப்போகின்றன. தமிழர்களின் கட்டிடக்கலையின் எழுச்சியை இன்றும் நிரூபித்திக்கொண்டிருக்கும் கருங்கல்காவியம். உலகில் எங்கிருந்து எண்ணினாலும் தமிழனாய்ப் பிறந்த பெருமையுணர்ச்சி உந்திவரத் தலைநிமிரச்செய்யும் தீப்பிளம்பு!
நந்திமண்டபத்தை மட்டும் பிற்கால நாயக்கமன்னர்கள் கட்டினார்கள் என்றும்,
நந்தியோடு சேர்த்து முழுமண்டபமும் நாயக்கர் காலத்தது என்றும் இருவேறுபட்ட கருத்துக்கள் உலாவுகின்றன. நந்தியை வணங்கிவிட்டு
கோயிலுக்குள் அடிவைத்தோம். எங்குபார்த்தாலும் சிற்பநுணுக்கங்கள்!
கால்வைக்கும் படியில்கூட கலைவழிகிறது. "பெருவுடையார்" என்று சொல்லப்படும் மகாலிங்கத்தின் அழகும் பிரம்மாண்டமும் மனத்தை ஈர்க்கின்றன.
தமிழ்நாட்டு அறநிலைத்துறையிடமில்லாமல், இந்தியத் தொல்லியல்துறையின்
பொறுப்பின் இருப்பதால், கோயில் கோயிலாக இருக்கிறது.
தன் இலட்சியங்களை அருள்மொழிவர்மன் எப்போதும் பெரிதாகவே வைத்துக்கொண்டான். கம்பன் சொல்லுகின்ற "சிறியன சிந்தியாதான்" என்ற
சொற்றொடர் அருள்மொழிக்கே நன்றாய்ப்பொருந்துகிறது. தன் உயர்ந்த இலட்சியங்களால்தான் அவன் வரலாற்றில் இன்றைக்கும் ராஜராஜசோழனாக ஒளிவீசி, எங்கள் நெஞ்சுக்குள் வாழ்கின்றான். அவனுடைய உயர்ந்த இலட்சியங்களில் ஒளிர்ந்த இலட்சியமாக தஞ்சைப்பெருங்கோயில் மிளிர்கிறது.
தமிழர் சிற்பக்கலையின் முழுப்பெரும்வெளிப்பாடான இக்கோயில், ராஜராஜேசுவரம், பெருவுடையார்கோயில், தட்சிணமேரு என்று பலபெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. தமிழர்தம் பெருமையைப்போல
உயர்ந்தோங்கி நிற்கின்ற விமானம், சிற்பசௌந்தர்யங்களைக் காட்டி உள்ளம் கவர்கள்வனாகிறது. விமானத்தைக்கட்டியபின் லிங்கத்தை உள்ளே கொண்டுபோக முடியாதாகையால், லிங்கத்தை உள்ளேவைத்து பின்பே விமானத்தைக்கட்டினார்கள். லிங்கப்பிரதிட்டையின்போது ஏதோ சிக்கல் ஏற்பட்டதாகவும், ராஜராஜசோழரின் குருவான கருவூர்ச்சித்தர் நேரில்வந்து இடையூறுநீக்கி பிரதிட்டை பண்ணினார் என்றும் அறியமுடிகிறது. கோயிலில்
கருவூர்த்தேவரும் ராஜராஜரும் அருகருகே நிற்கும் ஓவியம், ஆயிரமாண்டு கடப்பினும் தமிழோவியக்கலையின் சிறப்பைக் காட்டி நிற்கிறது.
ராஜராஜ சோழனுக்குப் பிறகு, இந்தக்கோயில் பல இடிபாடுகளையும், பல புனரமைப்புக்களையும் கண்டது. கோயிலில் குடிகொண்ட தேவிக்கு தனிச்சன்னதி அமைத்தபெருமை சுந்தரபாண்டியனைச்சாரும். தேவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
நாயக்கமன்னர்கள் சிற்ப அழகு பொலிந்துததும்பும் வண்ணம் வடமேற்கிலே, முருகப்பெருமானுக்கு கற்சன்னதி அமைத்திருக்கிறார்கள். அதன் சிற்பநுணுக்கங்கங்ககளின் அழகு சொல்லிமாளாது. அந்தக் குமரனை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
மராத்தியமன்னர்கள் பிள்ளையாருக்கு சன்னதி எடுப்பித்திருக்கிறார்கள்.
தொல்லியல்துறை கோயிலின் பண்டையநிலைபற்றியும், இன்றையநிலைபற்றியும் கருத்துவிளக்கப்படங்களோடு கண்காட்சி வைத்திருக்கிறார்கள். அவர்களும் சில ஆங்கிலேயர்களும் கோயிலுக்கு செய்த பணிகளை நினைத்தால் கையெடுத்துக்கும்பிடவேணும் போலிருக்கிறது.
கண்காட்சிப்பொறுப்பாளரிடம் சோழரின் அடுத்த சிற்பக்களஞ்சியங்களான
"கங்கை கொண்ட சோழபுரம்", "தாராசுரம்" போகும் வழியை கேட்டறிந்தோம். (வேறொரு பதிவில் அவைபற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.)
பலதோழர்கள் உயர்ந்த விமானத்தை கோபுரம் என்கிறார்கள். கோபுரம் என்பது கோயிலின் நுழைவாயில். விமானம் என்பது மூலவருக்கு மேல் அமைந்திருக்கும்.விமானத்தின் உச்சியில் உள்ள உருண்டையானபாகம் தனிக்கல்லால் ஆனது.கிறேன்களும் தொழில்நுட்பவசதிகளும் அற்ற அக்காலத்தில், பல கிலோமீற்றர் தூரத்துக்கு "சாரம்" எனப்படும் மரச்சாய்தளத்தை அமைத்து, நிலத்துக்கும் விமானத்துக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தி, யானைகளின் மூலம் கல்லை அவ்வளவு உயரத்துக்கு கொணர்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!
அளவிறந்த பெருமையுடனும், பூரிப்புடனும் ஒருவழியாக நானும் நிமலும் வெளியேறினோம். பெருவுடையாரின் எல்லையற்ற கருணையால் எங்கள் செருப்புகள் எங்களுக்கே கிடைத்தன. ஒரு ஆச்சி இட்டிலி விற்றுக்கொண்டிருந்தார். வாங்கி தெருவோரத்தில் அமர்ந்து, பெருங்கோயிலைப் பார்த்தவண்ணம் விழுங்கல்படலத்தை ஆரம்பித்தோம். ஆகா! இப்பிடி ஒரு இட்டிலியை இந்தப்பிறப்பில் சாப்பிட்டதில்லை. இரண்டு இட்டிலிக்கு நாலுவகை சட்டினி. இட்டிலியின் அருஞ்சுவையை இன்னதென்று சொல்லுதற்கு ஆயிரம் நாக்கு தேவை. அடுத்தமுறை தஞ்சைக்குப்போனால் ஆச்சியிடம் இட்டிலி ஒருபிடி பிடிக்கவேணும். யாருக்குத்தெரியும்? அந்தநேரம், எங்களுக்கு இட்டிலி போட்ட புண்ணியத்தால் ஆச்சி, சொர்க்கத்தில் ராஜராஜசோழனுக்கு இட்டிலி விற்றுக்கொண்டிருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுகின்றன.
ஆதித்தன்
31-12-2008
பெருங்கோயிற் பயணம்
6:04 PMவாழ்ந்த அதிகாலை
11:20 AM
பள்ளிக்காலத்து அதிகாலைகள் மறக்கமுடியாதவை. எட்டுமணிக்கு பாடசாலைதொடங்குமென்றால் ஐந்தரை,ஆறு மணிக்கெல்லாம் டியுசன் தொடங்கிவிடும். காலை ஐந்து மணியளவில் பம்பலப்பிட்டி வழியாக நடந்து வெள்ளவத்தைக்கு வருவேன். ஆமிக்காரர்களைத்தவிர யாருடைய நடமாட்டமும் இருக்காது. பம்பலப்பிட்டி வரும்வரை வீதியோரத்து பவளமல்லிகை மரங்கள் வாசம் வீசிக்கொண்டிருக்கும். சிவந்தகாம்போடு பல பவளமல்லிகள் தெருவில் உதிர்ந்திருக்கும். யாருமில்லாத வீதிகளில் நான் உரத்தகுரலில் பாடிக்கொண்டு போவேன். தெருவிளக்குகள் மஞ்சளாக பல்லிளிக்கும்.
சென்னையில் பெரும்பாலும் ஐந்தரைக்கே ஒளிபரவிவிடுகிறது. கொழும்பில்
ஆறுமணிவரை இருட்டுக்கு பஞ்சமே இல்லை. அநேகமாக பத்தாம் வகுப்பிலிருந்து காலைப்பயணம் தொடங்கியது. அப்போதெல்லாம் டிலுக்சனும்
வருவான்.அநேகமாக ஆனந்தன்சேரின் தமிழ்தேடிய பயணமாக இருந்தது.
பௌர்ணமிக்கு அடுத்தநாள் என்றால் நிலவொளியும் இருட்டும் நிரம்பி வழியும்.
நிலவு நிரம்பிய அந்த வேளையில் நடக்கும்போது, சத்தியமாய் பருத்தித்துறையில் நடப்பதாகவே ஒரு உணர்வு வந்து, மனம் நிறைக்கும்.
வெள்ளவத்தைக்கு போகவேணும் என்றால் காலிவீதியில் பேரூந்து பிடித்தும் போகலாம். பெரும்பாலும் நான் அதைத் தாண்டி இறங்கி பம்பலப்பிட்டியின் கடலோரமாகவே செல்வதுண்டு. கொழும்பின் கடற்கரை அந்திவேளையில் களியாட்டத்தோடே இருக்கிறது. அதிகாலையில் அதன் முகமே வேறு. அமைதியான ஒரு யோகியைப்போல கடல் இயங்கிக்கொண்டு இருக்கிறது. நீலமும் கறுப்பும் பின்னிப்பிணைந்த அந்த வானமும் கடலும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லும். கடற்காற்று வந்து சட்டையின் பொத்தான்களின் இடைவெளியூடாக உடல்தழுவும்.
கடலை ஒட்டிய தெருவில் சில "கன"வான்கள் நடைபயில்வார்கள். இயலுமானவரை நான் கடலோரத்தில் மெதுவாகவேநடப்பேன். வகுப்புக்கு போவதற்குக்கூட மனசிருக்காது. இப்படியே வாழ்க்கை முழுக்க நடந்து போய்க்கொண்டிருக்க மாட்டோமா என்றிருக்கும். எல்லாப் பயணங்களுக்காகவும், காலம் ஒரு முற்றுப் புள்ளியை வைத்திருக்கிறது.
வெள்ளவத்தைக்கடற்பகுதிக்கு வந்து சேரும் நேரத்தில், சிலவேளை வகுப்பு ஆரம்பித்து கால்மணிநேரம் கடந்திருக்கும்.அப்போதெல்லாம் வகுப்புக்கு இருக்கும் தெருவுக்குள் திரும்பாமல், தொடர்ந்து நடந்து கொண்டேபோவேன்.
ராமகிருஷ்ணமிஷன் வரமுதல் சற்றுமுன்னே அநேகமாக பிரஜீவை சந்திப்பேன்.
அதே இடத்தில் மாலைவேளைகளிலும் சந்தித்திருக்கிறோம் என்றாலும் நீலநிறமான காலை எழுதும் கவிதைக்கு தனிச்சுவை இருக்கிறது.
கரையில் கிடக்கும் பாறைகளில், அந்த நேரத்தில் அமர்ந்திருப்பது ஒரு தவம்.
நாங்கள் அமர்ந்திருக்கிறோம் ஆனந்தமாய் வெறுமனே கடலைப்பார்த்தபடி !
அதிகமாக பேச்சுவராது. அவன் தோளில் கை போட்டபடியிருந்த என்னிடம்
"மச்சான்! அங்க பார்!" என்றான்.கருப்புநண்டுகள் அலைகளைத்தாண்டி பாறைகளில் ஏறமுயற்சி்த்தன. பலதடவைகள் விழுந்தும் முயற்சியை விடவில்லை. பாறையில் மோதித்தெறிக்கும் அலை துண்டாய்ச்சிதறி துளிகளாகி மாயாஜாலம் காட்டியது.
பின்னாலிருக்கும் தண்டவாளத்தில் தடதடவென்று ரயில்பறக்கும் ஓசை அதிர்ந்தது. காற்றில் பின்தள்ளப்பட்ட தன் ஓலைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நின்ற தென்னைகள் சலசலகின்றன. அலைகளின் வீரியம்குறைந்து நுரை வந்து கால்கழுவியது. என் காலடிக்கு அடைக்கலம் தந்தமண், அலைகளால் பறிக்கப்பட்டு, எனக்கான குழி உருவாக்கப்பட்டது. அடுத்த அலையில் குழி காணாமல்போனது. எந்த எண்ணங்களும் எழும்பாமல், எந்த இலக்கும் இல்லாமல் நான் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பிரஜீவ் சிட்னியிலும், டிலுக்சன் மெல்பேர்னிலும், நான் பெங்களூரிலுமாக சிதறிப்போனாலும், பழசுகளை நினைக்கும் போது, இப்பொழுதும் நுரைவந்து கால்கழுவுகிறது. தென்னைகள் சலசலக்கின்றன. இன்றைக்கும் நண்டுகள் பாறையில் ஏறமுயன்று கொண்டிருக்கலாம். இழந்தவைகள் ஈடுசெய்யமுடியாதவை என்ற போதும், சாகும்வரை நெஞ்சோடு வாழும்.
ஆதித்தன்,
25-12-2008.
நூலின்றி அமையாதென் வாழ்வு - 2
5:40 PM
"ஜனவரி மாதம் நான்காம் திகதி நான் அங்கு வருவதாயிருந்தேன். ஆனால் நான் வர முடியவில்லை. ஏனென்றால் அந்த விஷயத்தில் எனக்கு ஒரு செயலும் இல்லை. ஆண்டவன் என்னை எங்கே போகச் சொல்லுகிறானோ, அங்கே நான் போக வேண்டியதாய் இருக்கிறது. இப்போது நான் சொந்த வேலையாகப் போகவில்லை. அவனுக்காகவே போனேன். என் மனத்தின் நிலமை முற்றிலும் மாறிவிட்டது. அதனை இந்தக் கடிதத்தில் விவரிக்க நான் விரும்பவில்லை. நீ இங்கே வந்தால் நான் சொல்ல நினைப்பதைச் சொல்லுகிறேன். இப்போதைக்கு நான் சொல்லக்கூடியது என்னவென்றால் எனக்கு இனிமேல் சொந்தச் சுதந்திரம் இல்லை என்பதாகும். ஆண்டவன் போகச்சொல்லுகிற இடத்துக்கு நான் பொம்மை போல போவேன். அவர் செய்யச்சொல்வதை பொம்மை போல செய்வேன்."
அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வருவதற்கு சிலகாலங்களுக்கு முன்பு, பரோடாவில் இருந்து மேற்சொன்ன கடிதத்தை தன் மனைவிக்கு எழுதினார்.
மகாயோகி அரவிந்தரின் வாழ்வை விகடன் பிரசுரம் வாயிலாக,
எழுத்தாளர் பா.சு.ரமணன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அரவிந்தரின் வாழ்வு பலபருவங்களை உடையதாயிருக்கிறது. இந்தியக்கலாசாரத்தின் சுவடுகூட தன் பிள்ளைகள்மேல் படக்கூடாதென்று தந்தையால் இங்கிலாந்துக்கு அநுப்பப்பட்டார் அரவிந்தர். காலம் அவரை ஆழமான தேச பக்தராக்கியது.
இந்தியா திரும்பிய அரவிந்தர் தேசவிடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மிதவாதம் விடுதலைக்கு உதவாதென்று தீவிரவாதத்தையே அவர் ஆதரித்தார். ஒற்றர்களால் தொடரப்பட்டார்.
கைது செய்யப்பட்டார். அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
சிறைச்சாலையில் அரவிந்தர் அநுபவித்த கொடுமைகள் பல.
வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் வசதிகளே அற்ற அந்தக் கொடிய சிறைச்சாலையில்தான் முன்பு தான் பயின்ற யோகக்கலையை பயிற்சி செய்து பார்க்கத்தொடங்கினார். அவரின் மலம் அவர் அருகிலேயே கிடக்கும். தினம் இரண்டு வேளைகள் தான் அது அகற்றப்படும். குளிக்கவும் குடிக்கவும் ஒரேஒரு குவளைதான். கோடையில் வெம்மை தகிக்கும். மழைக்காலத்தில் சிறை அறைக்குள்ளேயே நீர் நிரம்பும். அவ்வளவையும் சகித்துக்கொண்டு தன் யோகப்பயிற்சிகளையும் தொடர்ந்தார் அரவிந்தர்.
வேதாந்த சாத்திரங்களில் ஆழ்கின்ற வாய்ப்பும் நேரமும் அவருக்கு அங்கே கிட்டியது. சிறைவாழ்வு அவரைப் புடம்போட்டது. அவர் செய்ய வேண்டிய பணி வேறென்று உள்ளது என்று அங்கேதான் இறைவனால் தாம் உணர்த்தப்பட்டதாக
அவர் குறிப்பிட்டார்.
இன்று மார்கழி பிறந்திருக்கிறது. காலைநேரத்தை கைக்குள் வைத்திருக்கும் மூடுபனியாக அரவிந்தரை என் கைக்குள்ளேயே வைத்திருக்கிறேன். சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்தர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்கின்ற அபாயத்தால் அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரி நோக்கி கிளம்பினார். வங்கத்திலிருந்து பாண்டிச்சேரி வழியாக கொழும்பு செல்லும் கப்பலில் ஏறி சித்திரை நான்காம் திகதி, தம் இலக்கை வந்தடைந்தார். பாரதியார், மற்றும் பலர் அவருடைய வருகையினால் மகிழ்ந்தனர்.
அரவிந்தரின் கடுமையான யோகப்பயிற்சியின் மூலமாக சில சக்திகள் அவருக்கு வாய்த்திருந்தன.பாண்டிச்சேரியில் இருந்த ஆரம்பகாலங்களில் அவர் தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆவிகளை அழைத்து உரையாடியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. ஆனால் இவையெல்லாம் சிறிதும் பயனற்ற முயற்சிகள் என்று அறவே தவிர்த்து விட்டார்.
அந்த ஆரம்ப காலங்களில் உணவுக்கும் பணத்துக்கும் அரவிந்தர் மிகுந்த சிரமப்பட்டிருக்கின்றார். சில நாட்கள் வெறும் சோற்றோடு மிளகாய்ப்பொடி இட்டு பிசைந்து மற்றவர்களுக்கும் கொடுத்து தானும் உண்டிருக்கிறார். அவர் உண்ணும் அளவு மிகச்சொற்பமே! பெரும்பாலான நேரங்களில் யோக சாதனைகளிலேயே மூழ்கியிருந்தார். அளவற்ற யோகப்பயிற்சியின் விளைவாக அவரது முகத்தில் தனிப்பிரகாசம் சுடர் விட்டது என்று அவரோடு கூட இருந்தவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.
இந்தநூலில் அவருடைய யோகசாதனைகளைப்பற்றி விரிவாக ஒன்றுமே எழுதப்படாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. பசியோடு இருந்தவனுக்கு கொடுக்கப்பட்ட சிறிதளவு உணவு, அவனுடைய பசியை தூண்டிவிடுவது போல், மீண்டும் பாண்டிச்சேரி போய் அவரின் யோகசாதனை பற்றிய விபரங்கள் அறிய வேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது.
பிரெஞ்சுப்பிரஜையான அன்னை மிரா அரவிந்தரிடம் சிஷ்யையாகி, அவரின் யோக வழிகாட்டலில் பூரணநிலையை அடைந்தார். பாண்டிச்சேரிக்கு அருகின் "அரோவில்"என்ற ஒரு நகரத்தையே கட்டுவித்தார்.
அரவிந்தரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாபாரதத்தில் வரும் பீஷ்மரை மனம் ஞாபகப்படுத்துகிறது. அவரது பிரகாசமான முகம், மௌனமான கம்பீரம் எல்லாம் நெஞ்சிலிருந்து அகலமுடியாதவை. அவர் தம்மை முழுமையாக இறையருளிடம் ஒப்படைத்து விட்டு வாழ்ந்த மகாஞானி.
இரண்டு வருடங்களுக்கு முன் இதே மார்கழியில் நான் பாண்டிச்சேரிக்குப் போனேன். அப்போது அவ்வளவாக அவரைப்பற்றி எனக்கு தெரியாது. தெரியாது என்று சொல்ல்வதை கொஞ்சம் நேர்மையாகச் சொன்னால், அவரைப்பற்றிய அக்கறை என்னிடம் இருக்கவில்லை. போனநேரம் தவறாகப் போய்விட்டது. அரவிந்தர் ஆசிரமம் பூட்டப்படும் நேரம்! எல்லோரையும் அன்பாக விரட்டிக்கொண்டிருந்தார்கள். மலர் நிறைந்த அவரது சமாதியில் என் நெற்றி வைத்து வணங்கினேன். சிறிது குளிர்ந்தது.அவ்வளவுதான். எத்தனையோ வெள்ளைக்காரர்கள்/காரிகள் அங்கே அசைவற்று தியானத்திலிருந்தார்கள்.
அருகிலிருந்து தியானம் செய்ய முயன்றேன். மனம் தன் எண்ணச்சிதறல்களையே தொடர்ந்தும் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.
வந்துவிட்டேன்.
இறைவனுடைய கருணைமழை எங்கும் எப்போதும் பெய்துகொண்டு தானிருக்கிறது. அவரவர் பாத்திரத்தின் அளவிற்கேற்ப, நீர் நிரம்புகிறது. அன்றைய தினத்தை விட இன்றைக்கு என் பாத்திரம் கொஞ்சம் பெரிதாக மாறியிருக்கலாம். யார் அறிவார் அந்த ரகசியத்தை?
ஆதித்தன்.
16-12-2008
பூக்களை கல்சுமக்கச் சொல்லாதீர்கள்!
10:01 AM
சலனமற்று வெறுமையாய்க் கடக்கிறது காலம். எல்லா மனிதர்களுடைய பாதங்களும் அடுத்த அடியை விரைந்து வைக்கவே முற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதங்களை நசித்து வலிதந்தாவது தம்முடைய இலக்கை
அடைதல் வேண்டுமென்ற சுயநலமனம் அந்தப்பாதங்களை விரைவுபடுத்துகிறது.
அரக்கப்பரக்க ஓடும் நம் நகரங்களின் பாதங்கள் சில பிஞ்சுகளை மிதித்து நசுக்கியவாறு தன் பயணங்களைத் தொடர்கின்றன. இன்னமும் பால்மணம் மாறாத சிரிப்புடன் மழலைக் குரலுடன் ஆறுவயதுக் குழந்தை பெங்களூர் மத்தியபேரூந்து தரிப்பிடத்தில் கஞ்சா விற்கிறது. அவன் மழலைக்குரலும் வஞ்சனையற்ற சிரிப்பும் பலநாட்களுக்கு கண்முன்னின்று அகலவில்லை.
உலகம் எதனையும் கண்டு கொள்ள்வதில்லை.
இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் கணம் தவறாமல்
அரங்கேறியவாறே இருக்கின்றன. நகரங்களின் இருண்ட முகங்களில் வாழும் சகோதரர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் கைக்குழந்தைகளாக இருக்கும் போதே, தொழில் அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. கைக்குழந்தையோடு பிச்சை கேட்கின்ற சகோதரிகளின் கண்களை பலதடவை உற்றுநோக்கியிருக்கின்றேன். திருட்டுத்தனத்தை அவர்கள் கண்களில் காட்டுவதில்லை. யார் குழந்தையோ? பாவம்!
சிறிது வளர்ந்ததும் ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற வேலைகள் அவர்களுக்கு சொல்லித்தரப்படுகின்றன. பிச்சை எடுக்கவும், "பின்பணப்பை"யை திருடவும்
அகப்பட்டால் அழுதுபுரளவும் இன்னும் பல சமூகவிரோத செயல்கள் செய்யவும்
பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகள் அவர்களுக்கு பாடம் எடுக்கின்றன.
பல சிறுவர்கள் கடைகளிலும் உணவகங்களிலும் வேலைசெய்கிறார்கள்.
நான் இரவு உணவுண்ணும் ஒரு கன்னட உணவகத்தில் சாம்பார் என்று சொல்லி
ஒரு சிறுவன் இனிப்புக்கஞ்சி ஊற்றுகிறான். தலைபரட்டையடித்து கலைந்து கிடக்கிறது. பலநாட்களாக துவைக்காத சட்டை. கனிவு மாறாத அந்தக் குழந்தையின் கையில் சூடுவைத்த தழும்புகள்! நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும் மறைத்துக்கொண்டான். போய்விட்டான்.
தனியார்களுக்குத்தான் நெஞ்சம் அழுகிப்போய் விட்டதென்று கூறமுடியாது.
அரச நிறுவனங்களும் போட்டிக்கு நிற்கின்றன. மேலே நான் இட்ட புகைப்படம்
பெங்களூரின் மெஜஸ்டிக் பேரூந்து நிலையத்தில் உள்ள, "நந்தினி" பால் சார் உணவுப்பொருள் கடையில் எடுக்கப்பட்டது. நந்தினி நிறுவனம் கர்நாடக அரசின்
கீழ், லாபத்தில் இயங்கும் பிரபல்யமான நிறுவனம்.
அரைசம்பளம் கொடுக்கலாம், நன்றாக வேலை வாங்கலாம், எதிர்த்துப் பேசமாட்டார்கள், பேசினால் கொடுக்கும் தண்டனைகள் பற்றி வெளியில் தெரியவராது... இப்படி பல காரணங்கள்! அந்தக் குழந்தைகளின் வண்ணக்கனவுகளில் தீயேற்றி வறுத்தெடுக்கும் இந்த மேல்த்தட்டு வர்க்கம்
தம் கனவுகளுக்கு சிறகு கட்டிப் பறக்கவிடுகிறது.
பெங்களூர் முழுவதும் இப்படி பல காட்சிகளைப்பார்க்கலாம். குழந்தைகளை வேலைக்கு வைத்திருக்கும் உணவகங்களில் உண்ணமாட்டேன் என்று சபதமிடுபவராக நீங்கள் இருந்தால் பட்டினிதான் கிடக்க வேண்டும்.
ஈரம் வரண்டுபோன மனத்துச்சமூகம் இன்னும் எவ்வளவு பாரத்தை தூக்கி
அந்தப் பிஞ்சுகளின் மேல் வைக்கப்போகிறது என்று தெரியவில்லை.
ஒருநாள் அந்தப்பையனை பிடித்து, என் அரைகுறைக் கன்னடத்தில் ஊர்,பேர் கேட்டேன்.
"பார்த்திபன், சேலம்"
"தமிழா?"
"ஆமா! யேன்?"
ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை என்ற கேள்வியை, என் உதடுகள் ஏனோ அடக்கிக் கொண்டன. அவன் மீண்டும் போய்விட்டான். இனம் புரியாத குற்ற உணர்வு இன்றுவரை நெஞ்சம் விட்டு விலகவில்லை. அவனுடைய அந்த நிலைக்குக் காரணம் நான் அல்ல, என்று விலகிப்போக முடியாது. நான் மட்டுமல்ல! நீங்களும் தான்!
ஆதித்தன்.
16-12-2008
நூலின்றி அமையாதென் வாழ்வு - 1
6:01 PMகடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களின் கனவுகள் என்னைத் தழுவுகின்றன.எனக்கே எனக்கான அந்தத் திரைப்படங்களில் ஆழ்ந்துபோகிறேன். அவற்றுள் சிலநேரம் நானும் பங்கேற்கின்றேன். பார்வையாளனாக நான்மட்டுமே பார்வையிடுவதில் தனிமையை ஒருபோதும் உணர்ந்ததில்லை. நல்ல புத்தகங்களும் இப்படிப்பட்ட கனவுகளைப்போல நம்மை தமக்குள் இழுத்துக் கொள்கின்றன. எழுத்துக்கள் சொற்களாகி, சொற்கள் வார்த்தைகளாகி வார்த்தைகள் கருத்துக்களாகி மனத்தில் புது உலகம் ஒன்றைக்கட்டுகின்றன.
எல்லோருக்கும் இந்த புதுச்சூழலில் ஆழும் உணர்வுகள் இருப்பதில்லை என்பதை
பலகாலம் கழித்துத்தான் அறிந்தேன். நூல்களை சில தோழர்கள் காகிதங்களாகவே பார்க்கிறார்கள். ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொன்றில் லயிக்கிறது. அதனால்தான் உலகத்தில் இன்னும் சுவாரசியம் மிச்சம் இருக்கிறது.
அநேகமாக பத்தாவது வயதில் "பாரதியார் கவிதைகளை" நான் புரட்டினேன் என்று நினைக்கின்றேன். பதின்மூன்றுவருடங்களாக அதனுடனே வாழ்கின்றேன்.
அக்காலகட்டத்தில் புரியாத பாரதியின் பல வார்த்தைகள், சொல்ல முனைந்த கருத்துக்கள் இன்று புலப்படுகின்றன. "பொன்னியின் செல்வனும்" இதைப்போலவே! வாழ்வின் ஒவ்வொருகட்ட முடிவின்போதும் அந்தக்கதை
மீண்டும் மீண்டும் புதிதாகவே தோன்றுகின்றது.
சில கனவுகள் வேதனையைக்கொடுத்துவிட்டு தமது இறுதிப்பக்கத்தை மூடிக்கொள்கின்றன. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுவதற்காய் என் கைகளை
அவைகளே இயக்குவது எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை. உயிரோட்டமுள்ள நூல்கள் கைகளை மட்டுமல்ல, உலகத்தையே இயக்கக் கூடியவை.
விரக்தியின் உச்சக்கட்டத்தில் மனம் சஞ்சரிக்கும் வேளைகளில், பாசமுள்ள எழுத்துக்கள் அதை இழுத்துக்கொண்டுவந்து தஞ்சம் கொடுக்கின்றன. மன இறுக்கத்தை விடுவிக்கக்கூடிய பண்பை சில புத்தகங்கள் அளவுக்கதிகமாக வெளிப்படுத்துவதால் வாசிக்கும்போதே வாய்திறந்து சிரித்துவிடுகின்றேன்.
பாக்கியம் ராமசாமியின் "அப்புசாமி"கதாபாத்திரத்தைக் கொண்ட புனைகதைகள்
வாசித்தபின்புகூட நினைத்து நினைத்துச்சிரிக்கவைத்து, திட்டு வாங்கித்தந்திருக்கின்றன. சுஜாதாவின் கதைகள் பெரும்பாலும் வாசகனின் வாயோரத்தில் சிரிப்பை குத்தகை எடுத்துவைத்திருக்கும்.
"பாரதியார் கட்டுரைகள்"என்ற நூலை எத்தனைபேர் அறிந்திருப்பர்களோ தெரியாது. என் அம்மா சிறுவயதில் அதைவாங்கித்தராமல் விட்டிருந்தால் இன்றுவரை அப்படிப்பட்ட ஒன்றை நான் அறிந்திருக்கமாட்டேன். பாரதியின் மனவெளிப்பாடுகளாக அந்தக்கட்டுரைகள் அமைந்தைருப்பதை இன்று உணர்கிறேன். சில பக்கங்கள் வெளிப்படுத்தும் நகைச்சுவை, இப்படிப்பட்ட மனிதருக்குள் இந்தளவுக்கு நகைப்புணர்வு இருந்ததா என்று எண்ண வைக்கின்றன.
நகைப்பு மட்டுமல்லாது பயம், ஆசை, கோபம், வேதனை, வறுமை, ஒருதலைக்காதல், வஞ்சனை என்று தான் கவிதைகளில் காட்ட முடிந்த உணர்ச்சியையும் விட பலமடங்கு உணர்ச்சியுடன் மனித இயல்புகளை கதாபாத்திரங்களாக்குகிறார் பாரதி. தூர நின்று எழுச்சியுடன் கவிதை சொன்ன ஒருவரை, தோளில் கைபோட்டு கதைசொல்லும் நண்பனாகக் காட்டுகின்றன அவரது கட்டுரைகள்!
உள்ளத்து உணர்ச்சிகள் எழுத்துக்களாகும் போதுதான், வெள்ளமாய்ப்பெருகி வாசகனின் மனத்தைத் திருடிக்கொண்டு போகமுடியும் என்ற ரகசியம் புரிந்தாலும் அதற்கான கொடுப்பினை பலருக்கு வாய்ப்பதில்லை.
ஒவ்வொரு புத்தகமும் ஒரு உழவன். படிப்பவன் மனதில் அவை எழுத்து என்ற ஏர்கொண்டு உழுது, பண்படுத்தி பல கருத்துவிதைகளை விதைக்கின்றன.
காலபெருவெளியின் ஓட்டவேகத்தில் பற்பல அழுத்தங்களால் சில விதைகள்
சிதைந்தாலும், மீதி விதைகள் மனிதனின் ஆளுமையை நிர்ணயிப்பதிலிருந்து அவனது நடத்தையை இயக்கும் குணங்களை மேம்படுத்துவது வரை பங்கெடுக்கின்றன.
இலையிலிருந்து பனி வழிந்து துளியாகாத ஒரு காலைப்பொழுதில் தேனீர் கோப்பையும் நானும், அரவிந்தரின் யோகவாழ்வைக் காட்டுகின்ற புத்தகத்தை வாசித்தோம். எழுந்துகொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தவண்ணம், அதன் கடைசிப்பக்கத்தை என்விரல்கள் மூடியபோது, மனம் அமைதியில் மூழ்கி அலையற்றுக்கிடந்தது.
ஆதித்தன்.
14-12-2008
ஏதடா உண்மையில் வாணிபூசை?
9:20 AM
இலங்கையில் உள்ள தமிழ் மாணவர்கள் படிக்கும் பாடசாலைகளின் நவராத்திரிநாட்களில் நடைபெறும் கலைவிழாக்களில்
ஒரு பாட்டு, கட்டாயமாக வீணைச்சத்ததோடும் மிருதங்கத் தட்டலோடும்
தன்னை இடஒதுக்கீடு செய்து கொள்ளும்.
"அடுத்த நிகழ்வாக பாரதியாரின் "வெள்ளைத்தாமரப்பூவிலிருப்பாள்" என்ற பாடலை இன்ன இன்ன மாணவர்(வி)கள் பாடவிருக்கிறார்கள். அதற்கான ஆயத்தங்கள் அரங்கத்தில் நடைபெறுவதால் சபையோரை சற்றுநேரம் பொறுத்திருக்குமாறு வேண்டுகிறோம்" என்ற [பொறுமையை கொல்கின்ற] அறிவிப்பின் பின்னர், அந்தப்பாடலின் அர்த்தம் புரியாமல்
குழந்தைகள் (அல்லது குமரிகள்) வந்து பாடிவிட்டு செல்வார்கள்.(பொருள் புரியாம பாடினா சிவலோகம் போக ஏலாது என்று மாணிக்கவாசகரே சிவபுராணக்கடைசியில் சொல்லிப்போட்டார் என்பதை கவனத்திற் கொள்க.)
சொல்லவந்தது என்னவென்றால்..., இந்த உலகத்தில் பிறந்த இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பட்ட அநுபவம் என்ன சொல்லுதென்டா...,
அந்த அற்புதமான கவிதையின் முதல் இரண்டு பந்திகளுமே
எல்லா இடங்களிலும் திருப்பித்திருப்பி பாடப்படுகின்றன.
எழுச்சியும் சமுதாயத்துக்குத் தேவையான கல்வியைப் பற்றிய ஆழ்ந்த கருத்தும்
விழிப்புண்ர்வு ஏற்றும் திறமும் கொண்ட
அந்தப்பாடலின் மிகுதி எட்டுப் பந்திகளையும் ஏன் தீண்டத்தகாததாய் ஆக்கினார்கள் என்ற கேள்விக்குப் பதிலை அந்தந்தப் பாடசாலைகளின் இசை ஆசிரியர்கள் தான் சொல்லவேண்டும்.
போனபிறவியில் செய்த புண்ணியத்தின் மிச்சப் பயனாக பாரதியாரின்
வெள்ளைத்தாமரைக் கவிதையின் கடைசிப் பந்தியையும் நான் சில இடங்களில் கேட்க நேர்ந்தது. பாட்டில் அல்ல!பேச்சில்!
"நிதி மிகுந்தவர் பொற்குவைதாரீர்" என்று தொடங்கும் அந்தப்பந்தி
எதற்கு உபயோகப்பட்டதென்றால் "நன்கொடைகேட்டல்" என்கின்ற படு புண்ணிய கைங்கரியத்திற்கன்றி வேறல்ல.
ஆக, சுப்பிரமணியத்தாரின் கவிதையின் முதலிரண்டு பந்தி பாட்டாகவும் கடைசிப்பந்தி பேச்சாகவும் வாழவைத்த தமிழ்ப்பெருங்குடியே! கருத்துக் களஞ்சியமாய் விளங்கும் மிச்ச ஏழு பந்திகளையும் அதேபோல் அர்த்தம் புரியாமல் பாடித்தொலைப்பதற்கென்ன? என்ற பெருங்கேள்வி தொண்டை வரை வந்தும், விழுங்குகிற இட்டிலி,சாம்பார் உந்தித்தள்ள வயிற்றுக்கே போய்விடுகிறது.
கலைவாணி விரும்பிக் கேட்கும் பூசை எதுவென்று பாரதியார்
சொல்லுவதை கேட்கையிலே, உணர்ச்சிப்பெருக்கு ஏறுவதையும்
நமக்குத் தெரிந்ததைக்கூட அடுத்தவருக்கு சொல்லித்தராமல் மறைத்தவண்ணம் இருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாது.
இந்தப் பதிவுகூட அந்த உணர்ச்சியின் வெளிப்பாடுதான்!
எளிதாக விளங்ககூடிய இக்கவிதைக்கு உரை என்பது தேவையில்லாததுதான்.
ஆனாலும், ஏற்கனவே அழகாக இருக்கும் நம் தமிழ்க்கன்னியர்கள் தேவையில்லை என்று சீப்பை,கண்ணாடியை முகப்பூச்சை தள்ளிவைக்காத அருங்குணத்தை வணங்கி தமிழ்கூறும் நல்லுலகிலே என் முதலாவது உரைப்படலத்தை ஆரம்பிக்கின்றேன்.
[உரையிற்குறையிருப்பின் என்னைச்சார்ந்தது! கவியில் நிறையிருப்பின் பாரதியைச்சார்ந்தது.]
.
வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்!
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திருப்பாள்!
உள்ளாதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்!
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணைவாசகத்துட் பொருளாவாள்!
வெள்ளைத்தாமரை பூவில் இருக்கின்ற கலைமகள் (அங்கு மட்டுமே இருப்பதில்லை) வீணைமீட்டுகின்ற ஒலியிலும் இருக்கின்றாள். கொள்ளை இன்பம் தந்து நெஞ்சோடு குலவிக் களிக்கின்ற கவிதைகளைப் படைக்கும் கவிஞர்களின் சிந்தையிலே இருந்து கற்பனை வளத்தையும் கருத்துச்செறிவையும் அளிக்கின்றாள்.
வேதத்தில் உள்ளபொருளைத் தேடி அறிந்து, பின் உணர்ந்து ஓதப்படும்
வேதத்தில் உள்ளாள். (ஐயர்மார் கவனிக்கவும். விக்கிரகத்துக்கு முன்னால் நின்று கடுகதிவேகத்தில் மந்திரங்களை உதறித்தள்ளுகின்ற செயலில் கலைமகள் இருக்கமாட்டாளாம்.) மனதில் கள்ளமில்லாத முற்றும் துறந்த துறவிகள் சொல்லுகின்ற கருணை நிறை வார்த்தைகளில் சரஸ்வதி இருக்கின்றாள்.
மாதர் தீங்குரற் பாட்டிலிருப்பாள்!
மக்கள்பேசும் மழலையில் உள்ளாள்!
கீதம்பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்!
கோதகன்ற தொழிலுடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்!
இன்பமே வடிவாகிடப்பெற்றாள்!
பெண்களது இனிமையான குரலிலிருந்து வரும் பாட்டில் இருப்பள் கலைவாணி.
வெள்ளைமனத்துப் பிஞ்சுகளான குழந்தைகளின் மழலைப்பேச்சில் உறைகின்றாள். கீதங்கள்பாடித்திரிகின்ற குயிலின் குரலையும் கிளியின் நாக்கையும் அவள் தனது வசிப்பிடமாக்கிக் கொண்டாள்.
ஒருதரம் பார்த்தபின்பு, மறக்க இயலாமல் சிந்தையில் ஞாபகம்வந்து எம்மோடு கூடிகுலவிக் கொண்டிருக்கும்...
ஒருதவறுமில்லாத சிறந்த் வேலைப்பாடுகள் உடைய சித்திரங்கள், சிற்பங்கள் நிறைந்த கோயில்கள் இவற்றிலெல்லாம் பொங்கிச்சொரிந்திருக்கும் அழகின் இடையே வாழுகின்ற கலைத்தாய் ஆனந்தமே உருவானவள்.
வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்!
வெஞ்சமர்க்குயிராகிய கொல்லர்,
வித்தை ஓர்ந்திடு சிற்பியர்,தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்,
வீரமன்னர் பின்வேதியர் யாரும்
தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறிவாகிய தெய்வம்!
அடுத்தவரை வஞ்சிக்காத தொழிலைப் புரிந்து அதன்மூலம்
தம் வயிற்றுக்கு உணவுதேடி வாழுகின்ற நல்ல மனிதர்களுக்கு மட்டுமே
அன்னை குலதெய்வமாக நின்று பரம்பரையையே காப்பாள்.
[என்ன? வேற தெய்வத்தை தேடலாம் எண்டுதானே யோசிக்கிறீங்கள்?]
போர்நடக்கின்றதென்றால் ஆயுதங்கள் செய்கின்ற கொல்லர்களுக்கு நிறைய வருமானம் வரும். அதனால் அவர்களுக்கு போர் என்றால் உயிருக்கு உயிர்.
[அமெரிக்க ஆயுத வியாபாரிகளையா சொல்லுறார்?]
அப்படிப்பட்ட கொல்லர்களும்,
தத்தம் கலைகளில் கரைகண்ட சிற்பிகளும், தச்சர்களும்,
(பதுக்கிவைக்காமல்) நிறைவாக நல்ல பொருட்களை விற்கும் வியாபாரிக்ள், வீரமுள்ள அரசர்கள், மற்றும் அந்தணர்கள் எல்லோருமே
"தாயே! எங்களுக்கு நீயே தஞ்சம்"என்றுகூறி வணங்கி நிற்கின்ற தெய்வம்
யார் என்றால், அது இந்த உலகத்தில் "அறிவு"என்னும் தெய்வத்தைத் தான்.
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்!
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்!
உய்வமென்ற கருத்துடையோர்கள்
உயிரினுக்குயிராகிய தெய்வம்!
செய்வமென்றொரு செய்கையெடுப்போர்
செம்மை நாடிப்பணிந்திடுந் தெய்வம்!
கைவருந்தி உழைப்பவர் தெய்வம்!
கவிஞர் தெய்வம்! கடவுளர்தெய்வம்!
அப்படிப்பட்ட அந்தத்தெய்வம் எல்லவற்றையும் அறியும்.
தீமையை நாங்கள் உணர்வதற்காக எங்களுக்குக் காட்டி, பின் அத்தீமையிலிருந்து ஒருபாதிப்பும் இல்லாமல் காப்பற்றுகின்ற தெய்வம்.
முக்தியை விரும்பி உயர்ஞானத்தை வேண்டி நிற்கின்றவர்கள் உயிருக்கு உயிராய் விரும்புகிற தெய்வம். ஒரு செயலை செய்வது என்று முடிவு செய்தவர்கள், அச்செயல் நன்றாக செம்மையாக நடக்க வேண்டும் என்று பணிகின்ற தெய்வம்.
அந்தத் தெய்வம் கை வருந்தி உடலால் வியர்வை சிந்தி உழைக்கின்ற பாட்டளிகளின் தெய்வம்.
கவிஞர்களின் தெய்வம்.
அது தெய்வங்களுக்கே மேலான தெய்வம்.
செந்தமிழ்மணிநாட்டிடை உள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்தனம் இவட்கே செய்வதென்றால்
வாழி அஃதிங்கெளிதன்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுத்தேட்டை
வரிசையாக அடுக்கி, அதன்மேல்
சந்தனத்தை, மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனையன்றாம்!
செந்தமிழை இரத்தினம் போல உயர்வாகக் கருதும் நாட்டிலே உள்ளவர்களே!
[அப்பிடி யாரவது இருக்கிறீங்களா?]
நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தத் தெய்வத்தை வழிபடுவோம்!வாருங்கள்!
ஆனால் ஒரு விசயம்!
இவளை வணங்குவது என்றால், "வாழ்க வாழ்க"என்று சொல்லிவிட்டுப் போவதைப்போல எளிதான செயல் இல்லை. கண்டுகொள்ளுங்கள்!
[இங்கே தான் பாரதியார் திருப்புமுனையே வைக்கிறார்]
மந்திரங்களை முணுமுணுத்துக்கொண்டு, புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்து அதற்கு மேலே சந்த்னத்தையும் மலர்களையும் இடச்சொல்லுகின்ற நெறிகள் கலைமகளின் பூசைக்குப் பொருந்தாது.
வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியிலாதொரு ஊரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடுதீர்க்கும் அமுதம் என் அன்னை
கேண்மை கொள்ளவழியிவை கண்டீர்!
எல்லாத்தீமைகளையும் தீர்க்கக் கூடியவளான என்னுடைய தாய் கலைவாணியின் நட்பைப் பெறுவதற்கு சில வழிகள் இருக்கின்றன. அவை:
1]ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு கலையாவது விளங்கி ஒளிவீச வேண்டும்.
2]ஒவ்வொரு வீதியிலும் ஒன்று அல்லது இரண்டு பாடசாலைகள் அமைக்கவேண்டும்.
3]நம்முடைய தேசத்திலே எத்தனை நகரங்கள் இருக்கின்றனவோ, எத்தனை கிராமங்கள் இருக்கின்றனவோ....., அங்கெல்லாம் பற்பல பாடசாலைகளையும் கல்லூரிகளையும் கட்டவேண்டும். 4]கல்வி என்றஒன்று இல்லாத ஊர் இருக்கின்றதா என்று தேடவேண்டும்.
அப்படி இருந்தால் அதை தீ இட்டு அழித்தே விட வேண்டும். அது இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
இப்படிப் பட்ட இலட்சிய வழிகளைப் பின்பற்றினால் என் அன்னையின் அருளை எளிதாகப் பெறலாம்.
ஊணர்தேசம் யவனர்தந்தேசம்
உதயஞாயிற்றொளிபெறு நாடு
சேணகன்றதோர் சிற்றடிச்சீனம்
செல்வப்பாரசிகப்பழந்தேசம்
தோணலத்த துருக்கம் மிசிரம்
சூழ்கடற்கப்புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை எல்லாம்
கல்வித்தேவியின் ஒளிமிகுந்தொங்க
[ஹூணர் என்னும் இனத்தவர் அசோகர் காலத்தில் கணவாய்களினூடாக வட இந்தியாவினுள் புகுந்து சில பகுதிகளை ஆட்சி செய்த இனத்தவர்கள் என்று அறிகிறேன்.]
ஹூணர் தேசம், கிரேக்க,உரோம தேசங்கள்,
உதிக்கும் சூரியனின் முதல் ஒளியை பெறும் நாடு (ஜப்பானை சொல்கின்றாரோ?),
அகலமான சீனா, செல்வம் நிறைந்த பழமையான பாரசிக நாடு,
துருக்கி, மிசிரம் எனப்படும் நாடு, இவை தவிர இன்னும் சூழ்ந்த கடலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் எத்தனை எத்தனையோ நாடுகளில் எல்லாம்
கல்வித்தெய்வமான சரஸ்வதியின் அருள் ஒளி மிகுந்து ஓங்கி நிற்கிறது. அவ்வாறான நிலையில்........ . . . . . , [அடுத்த பாடலில் தொடர்கிறது கருத்து!]
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்லபாரத நாட்டிடை வந்தீர்
ஊனம் இன்று பெரிதிழைக்கின்றீர்!
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!
மானமற்று விலங்குகளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ?
போனதற்கு வருந்துதல் வேண்டா!
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!
(இப்படியெல்லாம் பற்பல நாடுகள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து
பெருமை பெற்று விளங்கிவரும் இந்த நாளில்....,)
"அறிவு"என்ற சொல்லுக்கே அர்த்தமாக விளங்ககூடிய பாரத நாட்டிலே
வந்து உதித்த மகாஜனங்களே! [இங்கு வந்து என்னத்தைக் கிழித்தீர்கள் என்றால்]
நாட்டின் அறிவுச் சொத்துக்கே ஊனத்தை ஏற்படுத்துகின்றீர்கள்.
கல்வி நாட்டில் ஓங்கி நிற்பதற்காக செய்யவேண்டிய உழைப்பை மறந்தீர்கள். இந்த மண்ணில் மானமில்லாமல் மிருகங்களைப் போல, வாழுவதெல்லாம் ஒரு வாழ்வா?
சரி விடுங்கள்! நடந்து போனதுக்கு வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்?
கவலைப்பட வேண்டாம்! முதலில் இந்தத் தாழ்வை நீக்க முயற்சி செய்வோம்! வாருங்கள்!
அடுத்து வருவது தான் எனக்கு மிகவும் பிடித்த பாரதியார் பாட்டு!
இன்னறுங்கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
1] நம்முடைய சூழல் மாசடைவதைத் தடுத்து, எல்லா இடங்களிலும்
இனிமையான பழங்களைத் தருகின்ற மரங்களை நாட்டி சோலைகளையும் காடுகளையும் அமைத்தல்.
2]இனிய நீரை தருகின்ற குளிர்ந்த நீர்நிலைகளை உருவாக்குதல்.
3]பசி என்று ஒரு உயிர் வருந்தாதவண்ணம் எல்லா இடமும் அன்னதான சாலைகளை ஆயிரக்கணக்கில் கட்டி, உயிர்களின் பசியாற்றுதல்.
4]எல்லா இடமும் பத்தாயிரம் கோயில்கள் கட்டி வைத்தல்.
5]இன்னும் பின்னால் என்னென்ன தருமங்கள் இருக்கின்றனவோ
அவை எல்லாவற்றையும் சிறப்புறச்செய்தல்.
மேலே சொன்ன எல்லாமே சிறந்த தருமங்கள்தான். உயிர்களின் துன்பத்தை
கண்ணீரை துடைப்பவை தான். புண்ணியத்தை வாரி வாரிக் கொடுப்பவைதான்.
ஆனாலும், இவை எல்லாம் செய்வதை விட, முதலில்
ஒரு ஏழைக்கு கல்விவைக் கொடுங்கள்! அதுவே மாபெரும் தர்மம்.
எல்லாப்புண்ணியங்களையும் விட கோடிமடங்கு புண்ணியத்தை கொடுக்கும்.
நிதி மிகுத்தவர் பொற்குவைதாரீர்!
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத்தேமொழிமாதர்களெல்லாம்
வாணிபூசைக்குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகையானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!
பணம் நிறைந்து கொழிக்கின்றவரே! பொன்குவியலைத்தாருங்கள்!
நடுத்தரவர்க்க மக்களே! உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதைகொடுங்கள்!
அதையும் செய்ய முடியாமல் இருப்பவர்களே!
உங்கள் வாய்ப்பேச்சினால் கல்வியின் தேவையைபற்றி எல்லாரிடமும் பேசி மனமாற்றத்தை கொண்டுவாருங்கள்.
உடல்பலம் பெற்றவர்களே. உங்கள் உடல் உழைப்பைக்கொடுங்கள்!
இனிமையான மொழிகளை உதிர்க்கும் பெண்களே!
(வளவளவென்று ஊரான் வீட்டுக் கதைகளைப் பேசிக்கொண்டு இருக்காமல்)
நாம் செய்யப்போகும் இந்த உண்மையான "வாணி பூசை"க்கு தேவையானவற்றையே பேசுங்கள்!
எதைக் கொடுத்தென்றாலும்......, எப்படியாவது......, இந்த மாபெருஞ்செயலைச் செய்து முடிப்போம்! வாருங்கள்!
ஆதித்தன்.
09-12-2008