வரலாறு காட்டும் "க்" இணைந்த திருக்கோணமலை.

1:09 PM

நோக்கம்:
இலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்தின் பெயரின் எழுத்துகளில், தமிழிலக்கணத்தின் படி இருந்த "க்" எனும் மெய்யெழுத்து அகற்றப்பட்டு, வெறுமனே "திருகோணமலை" என உபயோகப்படுத்தலைத் தவறு என நிரூபித்தல் இக் கட்டுரையின் நோக்கமாகிறது.

அறிமுகம்:
இலங்கையில் தமிழர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற, மிகத் தொன்மையான இடங்களில் ஒன்று திருக்கோணமலை. சோழர்கள், பாண்டியர்கள், சிங்கள அரசுகள் போன்ற பல அரசுகளின் கீழே, மாறி மாறி இருந்து வந்த வரலாற்றுச் சிறப்பை இவ்வூர் கொண்டுள்ளது. தமிழின் இலக்கியங்களிலும் பல்வேறு இடங்களில் திருக்கோணமலை பற்றிய குறிப்புகள் பதியப்பட்டு உள்ளன. பல அறிஞர்களாலும் ஆய்வாளர்களாலும் இதனுடைய வரலாற்றுச்சிறப்பு வெளி உலகிற்கு எடுத்தியம்பப்பெற்று உள்ளது. இப்படிப்பட்ட புகழ்பொருந்திய ஊரின் பெயர் தற்காலத்தில், "திருகோணமலை" என அழைக்கப்பட்டு வருகின்றது. தமிழ் இலக்கணப் புணர்ச்சி விதிகளுக்கு ஒவ்வாத வகையில், "திருக்கோணமலை" எனும் சொல்லில் உள "க்" எழுத்து அகற்றப்பட்டு வெறுமனே, "திருகோணமலை" என உபயோகப்படுத்தப்படுகின்றது.

இதைத் தவறு என்பதை ஒத்துக்கொள்ளாமல், "திருகோணமலை" என்ற சொல்லே பொருத்தமானது என்ற கருத்தை தெரிவிப்பவர்கள், சில வரலாற்று ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள். அவற்றின்படி நெடுங்காலமாக திருக்கோணமலையின் பெயர், "க்" இல்லாத வெறும் "திருகோணமலை" என நிறுவ முயல்கின்றார்கள். தவிரவும் பலகாலமாக "க்" இல்லாமல் தான் இருந்ததாகவும் தற்போது மக்களின் புழக்கத்தில் இருப்பது "க்" இல்லாத வெறும் "திருகோணமலை"யே என்பதாகவும் வாதிடுகின்றார்கள். இவர்கள் வைக்கும் இவ்விரு வாதங்களை முறியடிக்கும் பணியை இக் கட்டுரை மேற்கொள்கின்றது.

எதிர்த்தரப்பின் முதலாம் வாதம் :
நிலாவெளிப்பிள்ளையார் கோயிலில் கிணற்றுப்படியாக உபயோகிக்கபடும் தொன்மை மிக்க சோழர்காலக் கல்வெட்டையே இவர்கள் முக்கிய சான்றாக வெளிப்படுத்துகின்றார்கள். தமிழும் சமஸ்கிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கும் அக்கல்வெட்டின் உள்ளது பின்வருமாறு:

ஸ் (வஸ்தி ஸ்ரீ)...
சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண

மலை
மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு
க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி) கண்ட
கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும்

ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம
ரமும்
கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து
க் கெல்லை
கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க
ல்லு குடக்கு
எத்தகம்பே எல்லை வடக்கெல்
லை சூலக்கல்லாகும்
சுடர் கோணமா மலை தனி
ல் நீலகண்டர் கு நிலம்
இவ்விசைத்த பெருநான்
கெல்லையிலகப்பட்ட
நிலம் இருநூற்று
ஐம்பத்திற்று வேலி
இது பந்மா யே
ஸ்வரரஷை

சோழர்காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படும் இந்தக் கல்வெட்டில் உள்ள "திருகோணமலை" என்ற "க்" எழுத்து அற்ற சொல்லை ஆதாரமாகக் காட்டியே, பழங்காலத்தில் இருந்து "க்" உபயோகத்தில் இருக்கவில்லை என்ற வாதத்தை இவர்கள் முன்வைக்கின்றார்கள்.

முதலாம் வாத மறுப்பு:
கல்வெட்டுக்களின் மறுவாசிப்பும் அதுசார்ந்த சமூக ஆய்வும் தொடங்கி நடந்துவரும் இக்காலத்தில், சோழர் காலத்தைய கல்வெட்டுக்கள் பல, எழுத்துப்பிழைகள் நிரம்பியதாகவே காணப்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளன. சாசனத்தை கல்லில் செதுக்கும் பணிக்க்கு அமர்த்தப்பட்டு இருந்த கற்றச்சர்கள் சமூகத்தாருக்கு போதிய மொழிசார் கல்வி அறிவு இருக்கவில்லை என்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. [மேலதிக வாசிப்புக்கு: சோழர் காலக்கல்வியும் தமிழும் ] சோழர்காலத்தின் கல்விப் பகிர்வில் இருந்து பாமர மக்கள் விலக்கியே வைக்கப்பட்டு இருந்தார்கள் என்பதும் மேட்டுக்குடியாக வாழ்ந்த சமுதாயத்தினருக்கே கல்வி வழங்கப்பட்டு இருந்தது என்றும் கூறப்படுகின்றது. இலக்கியச் செழுமை பொருந்திய சோழர்காலம், சமுதாய அடித்தட்டு மக்களுக்கு ஒளியளிக்கவில்லை. இலக்கியப்புனைவும் அதன் பகிர்வும் பரப்புகையும் சமுதாயத்தில் மேல் தட்டிலேயே நடை பெற்றது. சோழர்காலக் கல்வெட்டுக்களையும் சோழர்காலத்தைய தமிழ் இலக்கியங்களையும் எடுத்து ஒப்பு நோக்கிப் பார்த்தோமானால், இலக்கண வரம்புகளுக்குள் எவை எவை நிற்கின்றன என தெளிவாகப் புரியக்கூடியதாய் இருக்கும். இலக்கண விதிகளில் இருந்து வழுவாத செழுமை மிக்க கவிதைகள் உலவிய காலத்தில் தான், இலக்கணப்பிழை உடைய கல்வெட்டுச்சாசனங்களும் செதுக்கப்பட்டமை மறுக்கமுடியாத ஒன்றாகும்.

நிலாவெளிப்பிள்ளையார் கோயிலின் கிணற்றடிக் கல்வெட்டை எடுத்து நோக்கினாலே, எழுதும்போது விடக்கூடிய இலக்கணப்பிழைகளை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக:
அ) "கீழ் னொக்கிந கிணறும்"
ஆ) "ஊர்ரிருக்கையும்"

கல்வெட்டுச் செய்திகளை வைத்து அக்கால சமுதாய நிலை, அரசியல் நிலை பற்றிய செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமே தவிர, இலக்கணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது.

ஆகவே, இக்கல்வெட்டுச்சாசனத்தில் உள்ள, "க்" அற்ற வெறும் திருகோணமலை என்ற சொல்லை ஆதாரமாகக் காட்டி, அதுவே சரியான பயன்பாடு எனக் கூறும் வாதம் அடிபட்டுப் போகிறது.

எதிர்த்தரப்பின் இரண்டாம் வாதம் :
பல காலமாக, மக்களின் புழக்கத்தில் "க்" இல்லாத வெறும் திருகோணமலையே இருப்பதாகவும் அதனால், மக்களின் பழக்கத்திற்கு மதிப்பளித்து, "திருகோணமலை" என்பதையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என வாதிடுகின்றனர்.

இரண்டாம் வாத மறுப்பு:
1) மக்களின் புழக்கத்தில் "க்" இல்லாத வெறும் திருகோணமலையே உபயோகிக்கப்படுகிறது என்பதை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும்,
இலக்கணப்பிழை ஒன்றை, மக்கள் உபயோகம் என்ற ஒன்றிற்காக அநுமதித்தல் எந்தவகையிலும் பொருத்தமானது அல்ல. மொழிப்பிழைகள் எல்லாம் அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையானது, மொழி இலக்கணத்தின் இருப்பை கேள்விக்குறி ஆக்குகின்றது. இலக்கணம் எப்படியாவது போகட்டும்; நாம் இப்படித்தான் இருப்போம்; இலக்கணம் வேண்டுமென்றால் வளைந்து கொடுக்கட்டும் என்ற எண்ணக்கரு, மொழியின் மீதான அக்கறை இன்மையையும் மொழியின் தொடர்ச்சியான இருப்பின் மீதான அலட்சியத்தையுமே காட்டி நிற்கின்றது.

2) மக்கள் உபயோகம் என்றால் என்ன? அது எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? யாரோ ஒருவர் இந்த "க்" எழுத்து இல்லாம வெறும் திருகோணமலை என்றெழுத, அது பிழை என்பதை உணராத மக்கள் கூட்டத்தில் அது பரவத்தொடங்கி, இன்று இந்த அளவுக்கு வந்து நிற்கின்றது. பெரும்பாலானோர் செய்வதால் ஒரு பிழை எப்போதும் சரி ஆகிவிடாது.

3) தவிரவும், இவர்கள் சொல்வதைப்போல நெடுங்காலமாக "க்" இல்லாத வெறும் "திருகோணமலை" புழக்கத்தில் இருந்ததும் இல்லை. அதைப்பற்றிய ஆதாரங்கள் கீழே தரப்படும். அவ்வாதாரங்கள் பழங்காலத்தில் இருந்தே "திருக்கோணமலை" என்றே மெய்யெழுத்துடன் கூடி இருந்தமை தெள்ளத்தெளிவாகப் புலனாகின்றது.

ஆக, மேற்கூறிய கருத்துக்களால், அவர்களுடைய இரண்டாம் வாதமும் அடிபட்டுப்போகின்றது.
------------------------------------------------------------------------------------------

மெய்யெழுத்துடன் கூடிய, தமிழ் இலக்கணப் புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்ட சொல்லான "திருக்கோணமலை"யே, வரலாற்றில் உபயோகிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கீழே தரப்படுகின்றன.

முதலாம் ஆதாரம்:
கி.பி. 12ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனுக்குக்கு கீழ் சோழப்பேரரசின் முதலமைச்சராக இருந்த அருண்மொழித்தேவர் எனப்படும் சேக்கிழார், "க்" என்ற மெய்யெழுத்துச் சேர்த்தே "திருக்கோணமலை" என்று எழுதியுள்ளார் என்பதே மிக உறுதியான ஆதாரமாக உள்ளது.

பெரிய புராணம் என்று சொல்லப்படும் திருத்தொண்டர் புராணத்தை எழுதிய சோழ அரசின் முதலமைச்சர், அந்நூலில்....,
"வம்பறா வரிவண்டுச் சருக்கத்தில்" உள்ள
"திருஞான சம்பந்த சுவாமிகள் புராணத்தில்"
"890 ஆவது பாடலில்"
"க்" எழுத்துடன் கூடிய "திருக்கோணமலை" என்ற சொல்லைப் பதிவு செய்துள்ளார். அந்தப்பாடல் பின்வருமாறு:

அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில்
மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செம் கண்
மழவிடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடி
சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில்
திருக்கேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம்
உன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும்
உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார்.

ஆக கி.பி. 12ம் நூற்றாண்டில் "க்" எழுத்துடன் கூடிய "திருக்கோணமலை" என்னும் சொல்லே உபயோகத்தில் இருந்தமை இங்கே நிரூபணமாகின்றது.

இரண்டாம் ஆதாரம்:
கி.பி.15ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் தனது திருப்புகழில் "விலைக்கு மேனியர்" என்னும் பாடலில் "க்"மெய்யெழுத்தோடு இணைத்து "திருக்கொணாமலை" என்ற சொல்லைப் பதிவு செய்துள்ளார்.
அந்தப்பாடல் பின்வருமாறு:

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி

மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக்

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே

கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே

நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே.

இத்திருப்புகழினில் அருணகிரிநாதர் "திருக்கொணாமலை" என்ற சொல்லைப் பதிவு செய்திருக்கின்றார். இச்சொல்லை எடுத்து ஆராய்வோமாயின், இங்கே "கோண" என்று வந்திருக்க வேண்டிய இடத்தில் "கொணா" என்று வந்திருக்கின்றது. இது அருணகிரிநாதர் சந்தத்திற்கேற்ப ஏற்படுத்திய ஒலிமாற்றம் என்பதைனைவரும் ஏற்றுக்கொண்டு உள்ளனர். நாம் இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால், இச்சொல்லிலும் கூட "க்" என்ற மெய்யெழுத்து "திரு"விற்கு அடுத்ததாக வருகின்றமை ஆகும். ஆகவே கி.பி. 15ம் நூற்றாண்டிலும் "க்" என்ற மெய்யெழுத்து சேர்த்தே உபயோகிக்கப்பட்டு வந்துள்ளமை நிரூபணம் ஆகின்றது.

"க்" அற்ற் வெறும் "திருகோணமலை"யை ஆதரிக்கும் ஆய்வாளர் சற்குணம் சத்தியதேவன், இவ் ஆதாரத்தை எதிர்க்கும் முறை இங்கே ஆழ நோக்கத்தக்கது.
"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே" என்ற வரிகளில் வரும் திருக்கொணாமலை எனும் சொல்லானது, ஊரைக் குறிக்காமல், ஊரில் உள்ள கோயிலையே குறிப்பிடுகின்றதால் இவ்வாதாரம் பொருத்தமற்றது என்று அவர் குறிப்பிடுகின்றார். கோபுர வர்ணனை மற்றும் நால்வேதத்திலும் சிறந்த அந்தணர்கள் பற்றிய குறிப்பு இவ்வரிகளில் வருவதால் இது ஊரைக்குரிக்காது, வெறுமனே கோயிலையே குறிக்கின்றது என்ற ஐயப்பாடு தோன்றுவது இயல்பே. ஆயினும் ஆழ ஆராய்ந்து பார்த்தால், இவ்வரிகளில் திருக்கொணாமலை என்ற சொல்லை அடுத்து வரும், "தலத்து" என்ற சொல் இந்த ஐயப்பாட்டை நீக்குகின்றது. இடம் என்பதைப் பொருளாகக் கொண்ட, ஸ்தலம் என்ற சமஸ்கிருதச்சொல்லின் தமிழாக்க வடிவமே தலம் ஆகும்.
ஆகவே, இவ்விடயத்தை உணர்ந்து மீள அவ்வரிகளை நோக்கி பொருள் கொண்டோமேயானால் அது பின்வருமாறு அமையும்:

"அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை என்னும் இடத்தில் விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே"

ஆகவே அருணகிரிநாதர் இவ்வரிகளில் குறிப்பிட்ட திருக்கொணாமலையானது கி.பி.15ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த ஊரின் பெயரே என்பதுவும், அக்காலத்திலேயே "க்" என்ற மெய்யெழுத்துச் சேர்த்தே உபயோகிக்கபட்டது எனவும் நிரூபணமாகின்றது.

மூன்றாம் ஆதாரம்:
கி.பி. 16ம் நூற்றாண்டில் இருந்து கி.பி.19ம் நூற்றாண்டு வரையான காலத்துக்குள், கவிராஜவரோதயர் எனும் புலவரால் எழுதப்பட்டதாக பேராசிரியர். சி. பத்மநாதன் சொல்கின்ற, "கோணேசர் கல்வெட்டு" என்னும் நூலில் வரும் 11வது செய்யுளில் "திருக்கோணை நகர்" என்னும் சொல் பதிவு செய்யப்பட்டிருப்பதை கீழே காணலாம்.

தானம் வரிப்பத்தென்னும் அரன் தொழும்பார்க்குள் இகலார்
தர்க்கம் வந்தால்
மானமங்கமடையாமல் நடுத்தீர்ப்பதார் எனவே
மதுரையூர் சென்று
ஆனமதிக் குலராமன் தனியுண்ணாப் பூபாலன்
தனைக்கொணர்ந்து
தேனமர்பூந் தொடைமார்பன் திருக்கோணை நகரரசு
செய்ய வைத்தான்
(11ம் செய்யுள், கோணேசர் கல்வெட்டு)

திருக்கோணைநகர் என்ற சொல்லில் "நகரை"த் தவிர்த்து நோக்கின், மீதி உள்ள "திருக்கோணை" என்ற பகுதி நம்முடைய ஆய்வுக்கு ஏற்றதாக விளங்குகின்றது. கி.பி.16 - கி.பி.19ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் கூட "க்" என்ற மெய்யெழுத்து சேர்த்து உபயோகிக்கும் பிழையற்ற பழக்கம் இருந்தமைக்கான சான்றாக இது அமைகின்றது.

முடிவு

மேற்கூறிய ஆதாரங்களின் மூலம் வரலாற்றில் "க்" எனும் மெய்யெழுத்துடன் கூடிய திருக்கோணமலை என்னும் சொல் வரலாற்றில் பல்வேறுபட்ட காலங்களிலும் புழக்கத்தில் இருந்தது என்பது உறுதியாக நிரூபணம் ஆகி உள்ளது. புணர்ச்சி இலக்கணப் பிழையுடன் தற்போது உபயோகிக்கப்படும் சொல் தவறானது மட்டுமல்லாமல், நாளைய சந்ததிக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும். மெய்யெழுத்து அற்ற வெறும் "திருகோணமலை"யை ஆதரிக்கும் செயலானது, தமிழர்களுடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரான திருக்கோணமலையின் பெயரிலேயே, தமிழ் இலக்கணத்தைச் சிதைக்கும் பணியே ஆகும். தற்காலத்தில், வலுவிழந்த அரசியல் நிலை உடைய, நமது இனத்தின் பதிவுகளில் நடை பெறுகின்ற இது போன்ற தவறான செய்கைகள், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்புகளுக்கே வழிகோலும்.

ஆதித்தன்
20-01-2012
கொழும்பு

துணை நூல்கள்:
1) பெரிய புராணம்
2) அருணகிரிநாதரின் திருப்புகழ்
3) சரவணபவன்.க,"வரலாற்றுத் திருகோணமலை",திருகோணமலை வெளியீட்டார்கள்,2003
4) கவிராஜவரோதயர் எழுதிய "கோணேசர் கல்வெட்டு"

5 comments:

Suvarna..... சொன்னது…

FANTASTIC VIMAL....

பெயரில்லா சொன்னது…

அனேகரது வாசிப்புக்குத் தேவையானது.....
நுண்ணிய ஆய்வு.
-ஆநி

கானா பிரபா சொன்னது…

தேவையான பகிர்வு

Mathan சொன்னது…

நன்றி

சுதன் சொன்னது…

காலத்தால் அழிக்கப்பட்டவை
எமது வருங்கால சந்ததிக்கு தெரியாமல் போகப்போகிறது அதை காப்பற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமை
அதில் இதுவும் ஒன்று
மிகவும் அருமை

கருத்துரையிடுக