ஈராக் யுத்தம் முடிந்த பிறகு மீண்டும் உலகமயமாதலுக்கான யுத்தம் தீவிரமாகிவிட்டது. மரபணு மாற்றப்பட்ட உணவை ஏற்றுமதி செய்யவேண்டி புஷ் 'பழைய ஐரோப்பாவை 'த் தாக்கத் தொடங்கிவிட்டார். ஆப்பிரிக்கா பட்டினிகிடக்கிறதாம். பல ஆப்பிரிக்க நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை உதவியாகக் கூடப் பெற மறுத்துவிட்டன. தமது தானிய உற்பத்தியை இந்த உணவு பாதித்து, விளைச்சலைக் குறைக்கும் என்று இந்த நாடுகள் அஞ்சுகின்றன. இதனால் ஆப்பிரிக்க உணவு தானியங்கள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது போகும். மறுபடியும் அமெரிக்கா ஐ நா வின் அணுகுமுறையை எதிர்க்கிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கார்டெக்னா விதிமுறைகள் என்று தானியப் பாதுகாப்பிற்காகக் கையொப்பம் இட்டுள்ளன. இந்த அணுகுமுறை மரபணு மாற்றப்பட்ட உணவு எப்படி கட்டுப்படுத்தப் படவேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.
புஷ்ஷின் வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் ஸோலிக் உலக வர்த்தக அமைப்புடன் ஒரு புகார் பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவுவகைகள் தெளிவாக உறையில் குறிப்பிட வேண்டும் என்று கொள்கை வைத்துள்ளன. இது கூடாது என்கிறது அமெரிக்கா. அனாவசியமான அச்சத்தை வளரும் நாடுகளிடையே ஐரோப்பா பரப்புகிறது என்பது ஸோலிக்கின் புகார். தான் உண்ணும் உணவில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் உரிமையை நுகர்வோருக்கு மறுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கோரிக்கை.
ஜி-எட்டு என்ற முன்னேறிய நாடுகள் அமைப்பு ஃபிரான்ஸ் , ஏவியனில் சூன் முதல் தேதி நடந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்புக் காட்டினர். சூன் 23-25-ல் சாக்ரமெண்டோவில் அமெரிக்க ஆதரவில் நடைபெறும் உயிர்த்தொழில் நுட்பம் பற்றிய மாபெரும் கண்காட்சியில் அமெரிக்கக் கம்பெனிகளின் நலனுக்காக பெரும் குரல் எழுப்பப்படும். இது கேன்கான் மெக்சிகோவில் நடக்கவிருக்கும் உலக வர்த்தக அமைப்புக்குத் தயார் செய்யும் கூட்டம் ஆகும். வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை லத்தீன் அமெரிக்காவிற்கும் நீட்டிக்க வேண்டிம் மியாமியில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கும் இது ஒத்திகை. சாக்ரமெண்டோவிற்கு 180 நாடுகளிலிருந்து வர்த்தக அமைச்சர்களும், விவசாய அமைச்சர்களும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். வெளியே , கம்பெனி மேலாண்மைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகள் தம்மையும் கூட்டத்திற்கு அழைத்து கருத்துக் கேட்கவேண்டும் என்று கோருகிறார்கள்.
2002--ல் ரோமில் நடந்த ஐ நா கூட்டத்தில் 2015-க்குள் உலக ஏழைகள் எண்ணிக்கை பாதியாய்க் குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அமெரிக்கா மீது விமர்சனம் வைக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கு உதவித் தொகையை இருமடங்காக்க வேண்டும் என்று கோஃபி அன்னன் கேட்டுக் கொண்டார். அமெரிக்கா தன் மொத்த தேசிய உற்பத்தியில் 0.13 சதவீதம் தான் இதற்கு ஒதுக்கியுள்ளது. ஐரோப்பா இதைவிட இரு மடங்கு ஒதுக்கியுள்ளது. இதில்லாமல் புஷ் நிர்வாகம் உதவி பெறும் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, தனியார் மயமாக்கி, மரபணு மாற்றப்பட்ட உணவை அமெரிக்கக் கம்பெனிகளிடமிருந்தும், பெரு விவசாயிகளிடமிருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்று கோருகிறது.
'நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் நாங்கள் சொல்வதே சரி ' என்று அமெரிக்க விவசாய அமைச்சர் ஆன் வெனிமான் கூறுகிறார். கடந்த பத்து வருடங்களாக உணவின் மேல் முத்திரையில்லாமல், சரியாய்ப் பரிசோதனை செய்யாமல் மரபணு மாற்றப்பட்ட உணவை சந்தையில் திணித்தது பற்றி இப்படிச் சொல்கிறார். இவர் கலிஃப்பொர்னியா விவசாய ஏஜென்சியில் வேலை பார்த்தவர். அப்போது வருடத்திற்கு 350 மரபணு திட்டங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்க இருந்த பணியாளர் எண்ணிக்கை ஒன்றே ஒன்று தான். இப்போது இவர் தான் புஷ்ஷிற்கு உயிர்த்தொழில் நுட்ப வல்லுனர்.
சாக்ரமெண்டோ மாநாட்டிற்கு இவர் தான் பொறுப்பாளர். இவர் கால்ஜீன்(CALGENE) கம்பெனியின் முன்னாள் இயக்குநர். இந்தக் கம்பெனி மான்செண்டோவில் விழுங்கப்பட்டு இப்போது ஃபார்மசியா கம்பெனியின் ஓர் அங்கம். இது தான் முதன் முதல் மரபணு மாற்றப்பட்ட தக்காளியை - உணவைத் தயார் செய்தது. தக்காளியின் மெதுப்பகுதியைத் திடப்படுத்தி இதனால் கடையில் வெகுகாலம் வைத்திருக்க உதவுமாறு செய்தது. இதற்கு எதிராக ஜெரமி ரிஃப்கின் என்பவர் போராடினார். பொது மக்களின் கருத்து இதற்கு எதிராகத் திரண்டது. கேம்ப் பெல் என்ற சூப் கம்பெனி இந்த ரகத் தக்காளியை உபயோகிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த தக்காளி விளைச்சல் கிடப்பில் போடப்பட்டது.
சோலிக்கும் சரி, இந்தக் கம்பெனிகளும் சரி, நுகர்வோர் தொழில்நுட்பத்தை வெறுப்பது தவறு என்கிறார்கள். இந்தக் கம்பெனிகளுக்காக வாதாடுபவர்கள் 'environmental technophobia ' சுற்றுச்சூழல்-தொழில்நுட்ப வெறுப்பு என்று இதற்குப் பெயர் சூட்டியுள்ளனர். மன்சாண்டோ போன்ற கம்பெனிகள் ஐரோப்பா உணவின் மீது சரியாக அடையாளப் படுத்தும் லேபில் ஒட்டுமாறு கேட்டுக் கொள்வதால் வருடத்திற்கு 300 மில்லியன் டாலர்கள் இழப்பதாய்ப் புகார் செய்கின்றன. மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் லேபில் ஒட்டுவதை ஏன் இந்தக் கம்பெனிகள் எதிர்க்க வேண்டும் என்று , தர்க்கரீதியாய்க் கேட்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். நுகர்வோர் உணவு பற்றி அறிந்து கொண்டு வாங்கவேண்டும் என்பதில் தவறென்ன இருக்க முடியும் ?
லேபில்களை எதிர்ப்பது போலவே வெனிமான் 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை 'யையும் எதிர்க்கிறார். நாடுகள் முன்னெச்சரிக்கையாக , கிருமிநாசினிகளையும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளையும் கட்டுப் படுத்தும் சுதந்திரம் கோருகின்றன. புஷ்ஷின் சுற்றுச் சூழல் அமைச்சராய் இருந்த கிரிஸ்டின் விட்மானும் இதை ஆதரித்தார். ஆனால் இப்போது புஷ் இதை எதிர்க்கிறார். கலிஃபோர்னியாவின் 'விதி 65 ' 1986-ல் சட்டமாக்கப் பட்டது. ஒரு ரசாயனப் பொருள் பாதுகாப்பானது என்று நிரூபிப்பதை கம்பெனிகளின் பொறுப்பு என்று இது சொல்கிறது.
கட்டுப் பாடற்ற உயிரியல் தொழில் நுட்பம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் : அட்லாண்டிக் சால்மன் மீன் ஐந்து மடங்காய் வளர்வதற்காக அவற்றிற்கு ஹார்மோன் அளிக்கப் படுகிறது. ஏற்கனவே உறையாமல் இருக்கும்படி, ஜீன்களை மீன்களில் உடலில் செலுத்தியாயிற்று. மீனவர்கள் இதனை கடுமையாய் எதிர்க்கின்றனர். பெரிதாக வளரும் சால்மன்கள் மீனவர்களின் மற்ற மீன்பிடிப்பை விழுங்கிவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். சும்மா விளையாட்டுக்காக மீன்கள் மினுக்குமாறும், வண்ணம் மாறும்படியும் மரபணு மாற்றப்படுவதும் நடக்கிறது.
உணவுப் பாதுகாப்பில் அமெரிக்கா நல்லபடியாய் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. 3கோடி 60 லட்சம் அமெரிக்கர்கள் சரியான உணவு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்.
'உணவுக்கே முதலிடம் ' என்ற அமைப்பினைச் சார்ந்த அனுராத மித்தல் , சாக்ரமெண்டோ மாநாட்டை மிகக் கடுமையாய் விமர்சிக்கிறார். 1970-80-ல் நடந்த பசுமைப் புரட்சி உணவு உற்பத்தியை அதிகரித்திருக்கலாம், ஆனால் வறுமையைக் குறைக்கவில்லை. சீனா தவிர மற்ற நாடுகளில் வறுமை குறையவில்லை. சீனாவில் நடந்த நிலச் சீர்திருத்தங்கள் வறுமை குறைய ஒரு காரணம். இந்தியாவில் தம் சிறுநீரகத்தை விற்கும் வறி விவசாயிகள் இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டுகிறார். பலர் கிரருமிநாசினியை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். பெரும் கம்பெனிகள் விவசாயப் புரட்சி செய்யும் என்றும் அவர் நம்பவில்லை. பஞ்சாப் ம்னானிலம் ஐரோப்பாவின் நாய் பூனைகளுக்கு உணவு பயிருடுகிறது. ஹரியானாவில் , உள்ளூர் பசி போக்க விவசாயம் செய்யாமல், ஏற்றுமதி செய்ய டூலிப் பூக்கள் பயிர் செய்யப்படுகின்றன.
சாக்ரமெண்டோவிற்கு எதிர்ப்பு தென் மண்டல் நாடுகளிலிருந்து வரும். உரயிரியல் தொழில்நுட்பம் இந்த நாடுகளைக் காப்பாற்றும் என்று பிரசாரம் செய்யப் படுகிறது.கட்டுப்பாடுகளைத் தளர்த்த இந்த நாடுகள் ஒப்புக் கொண்டாலும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை ஏற்றுக் கொண்டால் தான் எயிட்ஸ் உதவி என்று , நிபந்தனை இடுவதை எதிர்க்கும். உலக வர்த்தக அமைப்பின் மேலாண்மைக்கும் எதிர்ப்புக் கிளம்பும். முக்கியமாக லத்தீன் அமெரிக்காவில் எதிர்ப்பு தீவிரப்படும். இங்கே கடந்த பத்தாண்டுகளில் வேலையற்றோர் எண்ணிக்கை இரு மடங்காகிவிட்டது. பிரேசிலில் நிலமற்ற விவசாயிகள் தரிசு நிலங்களை ஆக்கிரமித்து சுயதாவையைப் பூர்த்தி செய்யப் பயிர் செய்யத் தொடங்கிவிட்டார்கள். பிரேசிலின் புதிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டிசில்வா இதற்கு மறைமுக ஆதரவு. இது மேலும் பரவக்கூடும்.
உலகின் எல்லா வர்த்தகம், வளர்ச்சி பற்றி அமெரிக்கா தன் கொள்கையைத் திணிப்பதற்கு ஒரு முன்னோடி எதிர்ப்புத்தான் , மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றிய கொள்கைக்குக் கிளம்பும் எதிர்ப்பு. தன்னுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அமெரிக்கா, 80 கோடி மக்கள் வாழும், 11 டிரில்லியன் (11000 பில்லியன்) உற்பத்தித் திறன் கொண்ட, 34 லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது நிபந்தனைகளைத் திணிக்க முடியுமா ? சாக்ரமெண்டோவிலும், கேன்கேன், மியாமியிலும் இது தான் பிரசினையாகும். சாம்ராஜ்யங்களை எப்படிச் சமாளிப்பது- தயாராவோம்.
(டாம் ஹேடன் கலிஃப்பொர்னியா மானிலத்தின் முன்னாள சட்ட சபை உறுப்பினர் (செனட்டர்) ஜபாடிஸ்டா ரீடர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்)
நன்றி- திண்ணை
3 comments:
காலப்பெருங்களம்-த்தை வலைப்பூ உலகிற்கு வரவேற்கிறோம்.
தாங்கள் பயிலும் உயிரித்தொழில் நுட்பத்தின் அறிவியல்-அறவியல் குறித்து மேலும் அதிக பதிவுகளை எதிர்நோக்குகிறோம்.
ஐயா, இது பழைய கட்டுரை. வெளிவந்து 2/3 ஆண்டுகளோ இல்லை
மேலோ ஆகியிருக்கும்.முதலில் எங்கு வெளியிடப்பட்டது என்பதையும்
இடுங்கள்.குழப்பம் வராது.
கட்டுரையின் அடியில் கவனிக்கவும்.
இதனை முதலில் வெளியிட்ட திண்ணை தளத்திற்கு நன்றி செலுத்தப்பட்டிருக்கிறது.
கருத்துரையிடுக