உற்ற உறவுகளில் உத்தமமே...

9:42 AM



வாய் ருசி மறந்தாய்.
வந்த என்னை உன் வயிற்றில்
நோயுடன் சுமந்திருந்தாய்.

சாய்ந்திருந்தே சாப்பிட்டாய்.
சட்டென ஒரு வாந்தி.
சடுதியில் துன்பங்கள்
பல உணர்ந்தாய்.

ஆனாலும்.......
பெற்ற அப்போதில்
என்னைப்
பேரன்பாய் முத்தமிட்டாய்.

உற்ற உறவுகளில் உத்தமமே
என் தாயே.....
விலையற்ற உன் அன்பென்
சிற்றறிவுக்கெட்டவில்லை.
சிறகடிக்கும் என் பருவக் கனவோடு
உன்னோடு பலதடவை
முட்டி மோதினேன்.
ஆனாலும்
அது பற்றி நினையாய் நீ.

பெற்றபிள்ளை நலம் வாழ வாழ்த்துகிற
உற்றவளே......
சுற்றம் உனக்கிணையா?
சூழ்ந்துவரும் நண்பர் உனக்கிணையா?
வெற்றியுறு காதல் இணைபெறுமா?
அத்தனையும்

மறுதலிப்பேன்.
என் தாயே.....உயிரைப்

பிச்சையிட்டாய் எனக்கு!

எளிய மகன்
விட்டபிழை பொறுத்தருள்வாய்.

-ஆதித்தன்

நேற்றைக்கும் அப்பாலே நினைவு

8:41 PM

சுவாலை முன்னால்
ஒழுகிவந்த கவிதையோடு
கண்ணீரும் உப்புக்கரித்தே
கலந்து கிடக்கும்.
வாழ்வின் வசந்த மலர்
காய்க்கும் முன்னே
கருக்கியது காலம்.

வண்ணத்துப்பூச்சிகளை வன்புணரும்
எண்ணற்ற கோட்டான்கள்
எதிர் எதிரே குரல்கூவி
இரவுகளில் உலவிவர
கிழிக்கப்பட்ட தாவணியாய்
நாங்கள்.

விட்டில்களை விரும்பியுண்ணும்
சுவாலையாக காலம்.
விரியும் சிறகுகள் குரூரமாய்
பொசுக்கப்படுவதில்
யாருக்கு என்ன ஆனந்தம்
இருக்க முடியும்?
வெறும் நீறாய்ப் போகும்
அதன் வாழ்வில் எதுவும் மிஞ்சாது.
ஆறாத ரண ஊஞ்சல்மேல்
விதி ஆடும். விளையாடும்.

பேய்கூடும் பெருங்காற்றில்
புதர்முயல்கள் புதர்தாண்டா.
அறுந்த நிலவின்
ஆடுகிற எச்சங்கள்
மிதந்து மீள்வந்து மண்சேரும்.

சிவந்த நீரும்
சிதைந்த மானமும்
வரண்ட மண்ணைச் சேறாக்கும்.
கண்விழித்தே காண்கின்ற
கனவில்
கறையான்கள் ஏறி
கணப்பொழுதில் கருவறுக்கும்.

பச்சையிலை வேப்பமரம்,
பசுங்கிளிகள் மைனாக்கள்,
பாசி படர்ந்த கேணி,
பிசுபிசுக்கும் மண்வீதி
ஒன்றும் மிஞ்சாது
ஒரு சுவடும் எஞ்சாது.

வேனில் பருவத்தில்
அணில் குஞ்சைப்போல்
அழகான ராப்போதில்
முற்றத்துமணல் மீது
முகிழ்க்கின்ற முல்லைமணம்.
பக்கத்தில் நீயிருக்க
பாய்கின்ற எந்தன் மனம்.
சொர்க்கத்தைக் கொண்டுவந்து
சொரியவிட்ட காலம்போய்
மறைந்தது.
இனி அது உயிர்க்காதோ?
என்றெண்ணிக் காத்திருக்கும்
இன்னும் அந்த இளமுற்றம்.

இறந்துபோன குழந்தைகளும்
சிறகு உதிர்ந்துபோன
வண்ணத்துப் பூச்சிகளும்
மறந்துபோன கனவுகளாய்
மாறிப்போகும்.

இழந்துபோன சிறகுகளின் வண்ணம்
வெயில் பட்டுச்
சிதைந்துபோன ஓவியமாய்
காலக்கடலில் கரைந்து போகும்.

உத்தரத்தின் மேலிருந்து
பல்லி சொன்ன மொழிகள்
சரமகவி வரிகளாகப் போயின.
பல ஆண்டுகளாய் அப்படியே
தேய்ந்து கிழித்தலுற்ற
தாவணியின் கரைப்பூக்கள்
இன்னும் அத்திகைப்பில்
இருந்து விடுபட்டிருக்காது.
ஆனாலும்
குருவி செத்துப் போன பின்பும்
கூடழுது என்ன பயன்?

உயிரோடிருந்திருந்தால்….
பனைமரத்துக்கு அப்பாலே
கருநீலவானத்து நட்சத்திரங்கள்
விட்டு விட்டு ஒளிர்வதை
எங்கள் பிள்ளைகளுக்கு
காட்டியிருப்போம்.
சோறு குழம்போடு
சொல்கூட்டிக் கதை சொல்லி
வேறோர் உலகத்தில்
இன்னும் வாழ்ந்திருப்போம்.

- ஆதித்தன்

பதிய “வந்த” கதை

9:43 PM

ஒரே ஒருவர் மட்டுமே நடந்து போய்க்கொண்டிருந்தார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொண்டது. நான் செய்ய இருந்த காரியம் சரியா பிழையா என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

கறுப்பு மேகங்கள் வானத்தை சூழ்ந்திருந்தன.

”இனியென்ன? போட முடிவெடுத்தாச்சு! போட்டு விட வேண்டியதுதான்”

கையில் சுமந்துகொண்டு வந்ததை பார்த்தேன். கொஞ்சம் நீளமாய்த்தான் இருந்தது. எவ்வளவுதரம் சொன்னன். சின்னச் சாமானா தாங்கோ எண்டு! எண்டாலும் பரவாயில்ல! வாங்கேக்கயே சோதிச்சுப் பாத்துதான் வாங்கி இருப்பாங்கள்! விசையை அழுத்தினால் போதும்! அவ்வளவுதான்!
“டக்!!!”
சத்தம் கூட அவ்வளவா வராது. அது தான் முக்கியம்.


அவர் சிவப்பு சட்டை போட்டிருந்தார். வெள்ளவத்தை சந்தையில் வாங்கிய காய்கறிகள் பையில் நிரம்பியிருந்தன. சட்டைப்பையில் அருமையான கைத்தொலைபேசி எட்டிப்பார்த்ததை, அவர் என்னைக்கடந்து போகும் போதே பார்த்துவிட்டேன். புத்தி குறுகுறுத்தது.

பயந்து பயந்து கொண்டிருந்தால் வேலைக்காகாது. என் நடையை விரைவாக்கினேன். நாசமாப்போன செருப்பு சத்தம் போட்டுது. அந்த மனிசர் ஒருக்கா கழுத்தை திருப்பி என்னைப் பார்த்தார். அதே கழுத்து! தொண்டைக்குழியில் எச்சில் விழுங்குவது தெரிந்தது. கிட்டத்தட்ட ஓடுவதைப்போல நடக்கத் தொடங்கினார். வெள்ளவத்தையின் அந்தத் தெருவில் அப்போது ஆட்களே இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. ஒரு வெண்பூனை அறுந்த வாலின் மிச்சத்தை நக்க முயற்சித்துக்கொண்டு இருந்தது.

நான் எதையும் கவனிக்கவில்லை. பொதுவாகவே என் குறி தவறுவதில்லை.
வானத்தில் இடி முழங்கியது. மழை கொட்டபோகுதோ தெரியேல்ல! கெதியா வேலையை முடிச்சுகொண்டு போயிடோணும்.

நிமலின் தொடர்மாடிக்கு அருகே அந்த சிவப்பு சட்டைக்காரர் போய்விட்டார்.

தூறலும் காற்றும் கலந்தடிக்கத்தொடங்கின.
என்முகத்தில் எந்த சலனமும் இல்லை.
அந்த மனிதர் வாழ்நாளிலேயே கடைசி முறையாக என்னை திரும்பிப் பார்த்தார்.
மரணத்தின் கோரமான நிழல் அவர் முகத்தில் படிந்திருப்பதாக, பட்சி கத்தியது.
வாய் கோணலாக இருந்ததாக ஞாபகம்!

அப்பிடியே ஓடத்தொடங்கினார். அவருடைய பாட்டா செருப்பு தெருவில் தேய்ந்து கொண்டிருந்தது.

நானும் அவரைத்தொடர்ந்து ஓடினேன்.
கால் வலி எடுத்தது.பெருவிரலில் கல்லொன்று இடித்ததில் வலி தாங்க முடியவில்லை.



பயங்கரமாய் கொட்ட ஆரம்பித்தது மழை.
அவர் நிமலின் தொடர்மாடியைத்தாண்டி கடற்கரையை நோக்கி ஒடிக்கொண்டிருக்க....,

அதேநேரம்....,
நான்
என்னை அறியாமல்
அதன் நீண்ட பகுதியை மேல் உயர்த்தி,
சரியாக விரலை அதன்மேல் வைத்து,
விசையைத் தட்டினேன்.

எத்தினை வருசமா செய்த பயிற்சி? வீண்போகுமா?

குடை சரியாக விரிந்து கொண்டது. மழையும் விடுகிற மாதிரி தெரியவில்லை ஒருவாறு குடையின் உபயத்தில் முழுக்க நனையாமல், நிமலின் தொடர்மாடிக்கு வந்து சேர்ந்தேன்.


”போடவேண்டியது என்று முடிவெடுத்தாப் பிறகு போடாம விடக்கூடா!”
இன்றைக்கே ஒரு பதிவை போட நிமல் எல்லாம் சொல்லித் தருவான். பிறகென்ன கவலை?
-----------------------------------------------------------------------------------------

நிமலின் கதவுக்கு வெளியே என் நீளமான குடையை வைத்துவிட்டு உள்ளே போனபோது யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுவார்களோ என்றும் யோசித்தேன். அதற்குள் நிமலின் அம்மா வந்து இலவசமாய் தேனீர் தந்ததால், இலவசத்திற்கு மயங்கும் இளையதமிழனாய், குடையை மறந்துவிட்டேன்.

”இதை அப்பிடிப் போடுவமா?”
“அதை இப்பிடிப் போடுவமா?”
“இதை இப்பிடிப்போடுவமா?”
அல்லது
“அதை அப்பிடிப்போடுவமா?”
என்று பல பல தளவடிவமைப்புக்களைக்காட்டி
நிமல் என்னை கேள்விமேல் கேள்வியாக கேட்டான்.

நானும் அசராமல்

”இதை அப்பிடிப் போட வேண்டாம்!”
“அதை இப்பிடிப் போட வேண்டாம்!”
“இதை இப்பிடிப் போட வேண்டாம்!”
“அதை அப்பிடிப் போட வேண்டாம்!”
என்று என் மதியூக ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருந்தேன்.

எதை எப்பிடிப்போடுவதென்று இரண்டு பேரும் முடிவெடுப்பதற்குள் தான்
அது
அப்பிடி
நடந்தது!
நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.

ஒரு தட்டு நிறைய சொக்லேட் பிஸ்கட் வந்தது.

எதை எங்கே போடுவது என்ற விவாதத்தை மறந்து,
இரண்டு பேரும் பிஸ்கட்டை வாயில் போடத்தொடங்கினோம்.

தொடங்கியதெல்லாம் ஒருகட்டத்தில் அடங்கித்தானே ஆகவேண்டும்?
பிஸ்கட்டுகள் அனைத்துமே காணாமல் போயின.
தண்ணீர் குடித்து விட்டு வேலையை தொடர்ந்தோம்.

பாரதியின் பாடலில் இருந்து வலைப்பூவுக்கான பெயர் சுடப்பட்டது.
இன்னும் எங்கெங்கையோ இருந்தெல்லாம், எதை எதையோ எல்லாம் சுட்டோம்.

கொஞ்சம் கொஞ்சமாக வலைப்பதிவு உருவேறியது.
நிமல்தான் தமிழ்மணத்தில் அதை இணைத்தான்.
தவிர்க்கவியலாத காரணத்தால் என்னை இணைத்துக் கொள்வதாக
ஒரு மின்னஞ்சலை தமிழ் மணம் அனுப்பியது.

1/27/08 திகதி நான் முதலாவதாக என் கன்னிப்பதிவை பதிந்தேன்.
காலப்பெருங்களம் என்ற பெயருக்கு ஏற்ப, நிறைய கால இடைவெளிவிட்டு விட்டு, அவ்வப்போது பதிந்து வருகிறேன்.

இந்த “பதிய “வந்த” கதை” எழுதும் வியாதிக்குரிய வைரஸ், தசாவதாரத்தில் வரும் வைரஸைவிடக்கொடுமையானது. இதைப்பற்றி சங்க இலக்கியத்தில் 478ம் பாட்டிலும், சீவகசிந்தாமணியில் கடைசிக்கு முதல் பாட்டிலும் சொல்லப்படாவிட்டாலும் கூட, இதன் வலிமை அளப்பரியது என நான் அறிவேன்.

இது மு.மயூரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு வந்தியால் தொடரப்பட்டு கீத்தினால் துரத்தப்பட்டு, பால்குடியினால் என்னிடம் தரப்பட்டிருக்கிறது.

இந்த வைரஸின் கோரமுகத்தை காண்பதற்கு முன்பதாக, அவரவர் தாம் பதிய வந்த கதையை எழுதி, இன்னும் நாலு பேரிடம் இந்த வைரஸை ஒப்படைத்து விட்டால் தப்பித்திவிடலாம் என்று, பதிவர் சந்திப்புக்காக திருகோணமலையில் இருந்துவந்த மருத்துவர் ஐயா சொல்லாவிட்டாலும்கூட நான் அவ்வாறே செய்து விடப்போகிறேன்.

[இந்த வைரஸை வச்சிருக்கிறதுக்கும் அடுத்த ஆக்களிட்ட கடத்துறதுக்கும் சில முறைகள் இருக்கு. அதை எல்லாம் எனக்கு விரிவாக எழுதுவதற்கு நேரமும், தகுதியும் இல்லாமையால் தேவைப்படுபவர்கள், மேலே எனக்கு இதைத்தந்த புண்ணியவான்களின் வலைப்பதிவுக்கு சென்று பார்த்துக்கொள்ளுக!]

ஆதலினால்... கீழ்க்கண்ட நபர்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.
1]அஷோக்பரன்
2]நிமல்
3]இரா பிரஜீவ்
4]சாயினி

இந்தா பிடியுங்கோ பொறுப்பை! எப்பிடியோ கை கழுவியாச்சு!

யார்ரா அங்க...?
எட்ரா வண்டிய.......!!!!!

ஆதித்தன்.
03-09-2009

பிளக்கப்பட்ட இந்தியா

3:32 PM

சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? சுதந்திரம் கிடைப்பதற்கு சில நாட்கள் முன்பும், சில நாட்கள் பின்பும் மக்கள் அனுபவித்த குரூரக் கொடுமைகள் எங்கிருந்து ஆரம்பித்தன? வங்காளத்திலும் பஞ்சாபிலும் பற்றி எரிந்த தீயை விசிறி விட்டது யார்? அந்தத் தீயில் வெந்துபோனது யார்?

எழுந்துபோன பாகிஸ்தானிலும், பிளந்துபோன இந்தியாவிலும் அந்நாளில்
விளைந்துபோன மதவெறிப்பேய்க்குப் பலியாய், விழுந்துபோன மானிடர்களின் சடலங்களில் ஈ மொய்க்கும் பொழுதில்….,
கதறிய குரலடங்கி, கண்கள் உதறிய ஒளியடங்கி மதங்களின் காமவக்கிரத்தில் மிதிபட்டு கருக்கப்பட்ட பெண்களின் மூச்சு நிறுத்தப்பட்ட பொழுதில்…..,
கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றைக்கிழித்து சிசு வெளியெடுத்து எரிக்கப்பட்ட பொழுதில்….., கந்தல் கந்தலாய் குழந்தைகள் சிதைக்கப்பட்ட பொழுதில்…..,
அந்த இரண்டு தேசங்களும் சுதந்திரம் பெற்றுக்கொண்டன.

காந்தி, நேரு, ஜின்னா, படேல், மவுண்ட்பேட்டன் என்று நீளும் அரசியல்தலைவர்களின் பட்டியலில் யாருடைய குடும்பமும் இந்தக் கலவரங்களின்போது சாதாரண மனிதனைப்போல் பாதிக்கப்படவில்லை. அவர்களில் யாருக்குமே அந்தவலி தெரியவில்லை. அவர்கள் தேசத்தின் பிளவுகளைப்பற்றியே கருத்து முரண்பாடு கொண்டார்கள்.பிளந்த கோடுகள் மக்களை அறுத்துச்சென்றதைப் பற்றி அதிக அக்கறைப்படவில்லை.


ஆகஸ்ட் 15, 1947 அன்று, லாகூரிலும், அமிர்தசரஸிலும் பெட்டி பெட்டியாய்
நடமாடும் பிணங்களும் நாறும் பிணங்களும் வந்து இறங்கும்போது, ஜின்னாவும் நேருவும் தத்தம் கொடிகளை வானளாவப் பறக்கவிட்டார்கள்.

பிரிவினையோடு வழங்கப்பட்ட அந்த சுதந்திரத்தைப் பற்றியும், அது பெறப்பட முன்பும் பின்பும் நடந்த, நடத்தப்பட்ட காட்சிகளையும், முடிந்தவரை நடுநிலையாய் நின்று சொல்லுகின்றது, மருதன் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட “இந்தியப்பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு”.

என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” என்று சொன்ன காந்தியால் இந்தியப்பிளவைத்தடுக்க முடியவில்லை. அக்கால இந்தியாவின் பிரதான அரசியற் சக்தியாய் விளங்கிய காங்கிரஸின், தூண்களான
நேரு, வல்லபாய் பட்டேல் போன்றவர்களாலும் தடுக்கமுடியவில்லை. அதேபோல முகமது அலி ஜின்னாவின் அசைக்கமுடியாத ஆளுமையாலும் அவரது பிடிவாதத்தாலும் மட்டும்கூட பாகிஸ்தான் பிறக்கவில்லை.

இந்து, இஸ்லாம் சீக்கிய மதங்களின் பெயரால் வன்முறையிலிறங்கி
யார் கொன்றார்களோ அவர்களாலும்,
யார் கொல்லப்பட்டார்களோ அவர்களாலும்,
யார் வன்புணர்ந்தார்களோ அவர்களாலும்,
யார் வன்புணரப்பட்டார்களோ அவர்களாலும்
அகண்ட பாரதம் பிளக்கப்பட்டே ஆகவேண்டிய சூழ்நிலை உருவானது.
பற்றி எரியும் ஒவ்வொரு வீடும்
பதறி ஓடும் ஒவ்வொரு காலும் “ஒன்றாய் வாழ்வது இனி நடக்காது” என்பதை உரக்கச்சொல்லின.

மதத்தை இழிவுபடுத்த பெண்கள் உபயோகப்பட்டார்கள். கலவரங்களில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, இறந்தவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்லக்கூடியவாறு, உயிர்பிழைத்தவர்கள் உடற்சிதைவுகளோடு நிரந்தர மனச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இந்துப்பெண்ணின் வாயில் மாட்டுக்கறி போடப்பட்டது. முஸ்லிம் பெண்ணின் நெற்றியில் குங்கும்ம் அள்ளிப்பூசப்பட்டது. மசூதிகளின் முன்னால் பன்றித்தலைகள் வெட்டி வீசப்பட்டன. மத வேறுபாடு இல்லாமல் நிறையப்பேர் ஒரு காரியம் செய்தார்கள். எதிரிகளின் கையில் அகப்படமுன் தங்கள் வீட்டுப்பெண்களை அவர்களே கொன்றார்கள். அவர்களும் தற்கொலை செய்தார்கள்.

மருதன் இப்படிச்சொல்லுகிறார்.
எங்கோ தொலைவில் கல்கத்தாவிலோ, கராச்சியிலோ, லாகூரிலோ, வங்காளத்திலோ அல்ல; சுதந்திர இந்தியாவின் புதிய தலைநகரத்தில் வெட்டிக்கொண்டார்கள். முஸ்லிம்பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்.”
புது தில்லியில் மட்டும் பத்தாயிரம் பிணங்கள்.”
தலைப்பாகைகளும் திரிசூலங்களும், பர்தா துணித்துண்டுகளும் வளையல்களும் செருப்புகளும் வண்டி வண்டியாக கிடைத்தன.

இந்தியாவைப் பற்றி தெரிந்திராத ராட்கிளிஃப் என்ற பிரிடிஷ்காரரை
கூட்டிக்கொண்டு வந்து,கோடு கீறி எல்லைகள் பிரித்தார்கள்.
ஒரு கிராமத்துக்கு நடுவே கோடு இழுக்கப்பட்டு இருந்தது. ஒரு பகுதி பாகிஸ்தான். ஒரு பகுதி இந்தியா. எப்படிப் பிரிப்பது அந்தக் கிராமத்தை? பத்துக் குடும்பங்கள் அங்கே; இருபது குடும்பங்கள் இங்கே என்றா? எனில் இதுவரை ஒரே குடும்பமாக இருந்தவர்கள் இனி இரு தேசத்தவர்களாக மாறி விடுவார்களா? உச்சக்கட்டமாக அந்தக் கோடு ஒரு வீட்டை இரண்டாகப்பிரித்துச்சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா. பின்பக்கம் பாகிஸ்தான்.

ஆசை காட்டியும், ஆள்பலம் காட்டியும் பல சமஸ்தானங்கள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. மக்களின் விருப்பத்துடனேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று சொன்ன நேருவின் வாக்குறுதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு அவரை முன்னோடியாக்கி கேலிச்சிரிப்பு சிரித்தது.

இந்தியப்பிரிவினையில் இந்துத்துவ சக்திகளின் பங்களிப்பையும் மருதனின் புத்தகம் புலப்படுத்துகிறது. முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் என்றால்
இந்தியாவை இந்துக்களின் தேசமாக்கவேண்டும் என்ற கோரிக்கையை
இந்துமகாசபை வெளியிட்டது. இந்துமகாசபையின் தலைவரான சாவர்க்கரின்
அதிதீவிரமான இந்துத்துவக் கனவுகள், எழுத்துக்களாக வெளிவந்தன. அவருடைய கருத்துக்களில் ஒன்றிப்போனவர்களால் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது. காந்தியைக்கொன்ற நாதுராம் கோட்சே முன்பு
காந்தியின் சீடர்தான். சாவர்க்கரின் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு
ஆர்.எஸ்.எஸ் ல் இணைந்து கொண்டார். அகண்ட இந்தியாவைப் பிளந்தவர் காந்திதான் என்று, அவரை சுட்டுக்கொலை செய்தார். கோட்சே அளித்த வாக்குமூலத்தில் தான் செய்த கொலைக்கு வேறுயாருமே பொறுப்பு அல்ல
என்று சொன்னதனால்தான், இந்துமகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மேல் இருந்த தடை மீளப்பெறப்பட்டது. பிரிவினைக்கான உண்மைக் காரணங்கள் பற்றி அபிப்பிராயங்கள் மாறுபட்டுக்கொண்டிருந்தாலும், பிரிவினையின் வெளிப்படையான விளைவுகள் மறுக்கமுடியாதவை என்று மருதன் சொல்வது முற்றிலும் உண்மை.

இந்தியப்பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு” புத்தகத்தில்
வெள்ளைத்தாளில் பட்ட சிறுகறையைப்போல, வைசிய சமுதாயத்தைச்சேர்ந்த காந்தியை சனாதன பிராமணன் என்று குறிப்பிடுவது நெருடுகிறது. இன்னும் தெளிவான விளக்கமான பிரிவினைக்கால இந்தியாவின் வரைபடங்கள் தரப்பட்டிருக்கலாம். இவ்வளவு அலங்கோலங்கள் வட இந்தியாவை அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்த சூழலில், தென்னிந்தியாவின் நிகழ்வுகளையும் நேரடி மற்றும் மறைமுகப் பங்களிப்புக்கள் பற்றியும் எழுதி இருக்கலாம்.

பாதிப்புக்களும் பரிதவிப்புக்களும் கருவறுப்புக்களும் கழுத்தறுப்புக்களும்
நிர்வாணங்களும் நிஜக்கோரங்களும் நிரம்பிய அந்த நாட்களை எழுத்துக்களால் ஓரளவுக்குத்தான் வெளிப்படுத்தமுடியும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வக்கிரங்களை உள்ளடக்கிய வரலாற்றில், இவற்றுக்கும் இடம் உண்டு. அந்த நிகழ்வுகளின் பதிவுகள் எப்போதும் தம்மைச்சுற்றி உணர்ச்சி மிகுந்த எரிசுவாலைகளை வீசியவாறுதான் இருக்கும். அதன் தீப்பொறிகள் இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும், இன்றைக்கும் சுட்டுக்கொண்டும் சூடேற்றிக்கொண்டும் இருக்கிறது.

ஆதித்தன்.
21-07-2009.

ஆண்டொன்று ஓடியது / பறந்தது / நீந்தியது!!!

3:16 PM

இத்தால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....,
ஆங்கில நாட்காட்டியின்படி, இன்றோடு நான் பதிவுலகில் தடம் பதித்து ஒரு ஆண்டு கழிந்தது என்பதாகும். இந்தச்செய்தியை முக்கியமற்றதாக்கும் சதிநோக்கில் இன்றையதினம் பல செய்திகள் வெளிவந்த போதும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, இப்பதிவைப் படித்து, தாம் முன்செய்த பாவவினைகளை
கழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என் வணக்கம்.

என்ன எழுதுவது என்று தெரியாமல் நிறைய நாட்கள் பதிவைத் தொடவில்லை.
பதிவைத் தொடவில்லையாதலால், பதிவொன்று வைத்திருக்கிறேன் என்பதை மறந்து சில வாரங்கள் கழிந்தன. எப்போதாவது நடக்கும் கிரகமாற்றங்கள் பதிவுலகத்தை ஞாபகப்படுத்துவதால், மூக்கு என்று ஒன்று இருந்தால் சளி என்று ஒன்று இருக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை மீறாது, தமிழ்வற்றிப்போய் என் பதிவு காய்ந்துவிடாமல் அவ்வப்போது பதிவு போட்டுவருகிறேன்.

தமிழ்கூறும் நல்லுலகம் செய்த தவப்பயனாக, இன்னும் ஆறுமாதங்களுக்கும்
இதே நிலை நீடிக்கும். அதன்பிறகு ஏற்படப்போகும் கிரகமாற்றத்தினால் நாள்தோறும் என்பதிவுக்கு முகங்கொடுக்கும் சங்கடநிலை அனைவருக்கும் வரக்கடவது!

பதிவு இடும் தொழில்நுட்பம், தமிழை இணையத்தில் எழுதும் முறைகள், தமிழ்மணம் போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தி, என்னையும் ஒரு வலைப்பதிவராக்கி அழகுபார்க்கவேண்டி,
(திருமங்கலத்தில் அழகிரியைப்போல்) கடுமையாக உழைத்து,
என் தளத்தின் வார்ப்புருமுதற்கொண்டு அனைத்தையும் வடிவமைத்து, (இடைக்கிடையே நான் விட்ட கொட்டாவிகளையும் சகித்துக்கொண்டு,) இன்று நான் இந்த நிலைக்கு(?) வரக்காரணமாக இருக்கும் நண்பர் (தோழர்)ஸ்கந்தகுமார் நிமலப்பிரகாசன் அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து மகிழும் இந்த இனிய வேளையிலே...,
இனிமேலும் எனக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் பெறற்கரிய பெரும் பேறு, அவருக்கு மட்டுமே இருப்பதை ஞாபகப்படுத்தி வைக்கிறேன்.

காசு கொடுத்தால்தான் வலைப்பதிவு வைக்கமுடியும் என்ற நிலை இருந்தால்,
ஒரு தலைசிறந்த வலைப்பதிவரை இந்தச்சமூகம் இழந்திருக்கும். அப்பேரிழப்பை தடுத்து நிறுத்தி, என் உரைநடைத்தமிழ் தவழ, ஒரு தரை தந்த (இலவசமாக),
கூகுள் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவிக்கிறேன்.

அத்துடன், என்பதிவுகளை திரட்டி வழித்தெடுத்து பிறபதிவர்தம் கண்காணச்செய்து, அவர்கள் காறித்துப்பும் முன்பே, பட்டியலில் இருந்து அப்புறப்படுத்தி காத்து ரட்சிக்கின்ற தமிழ்மணம் திரட்டி குழுவினருக்கும்,
எப்போதாவது இருந்துவிட்டு நான் எட்டிப்பார்க்கும் ஆளாக இருந்தாலும்
என்முயற்சி இன்றியே பதிவை இணைத்துக்கொள்ளும்
இலங்கை வலைப்பதிவர் திரட்டியின் நிர்வாகிகளுக்கும், இன்னும் என்பதிவுகள் எங்கெங்கெல்லாம் திரட்டப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் நிர்வாகிகளாக இருக்கும் புண்ணியவான்களுக்கும் நன்றிகள்.


அப்படி, அவ்வப்போது நான் போடும் பதிவுகளுக்கு, (என்னைப்போல அல்லாமல்)
சுறுசுறுப்பாக கருத்துக்களை அள்ளி வழங்குவதற்காக பாரி மன்னனின் பேரப்பிள்ளைகள் பதிவுலகத்தில் பிறந்து உலா வருகிறார்கள். (கவனிக்க! என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம்!) அவர்களுக்கும் என் நன்றியறிதல் சென்றடைகிறது. என்பதிவுக்கு வரும் கருத்துக்கள் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துக்கு மாற்றாக வருவதில்லை. இந்தப்பதிவினால் பலர் உளரீதியாக பாதிப்புறப்போவது நிச்சயம் என்பதால், இன்றுமுதல், மாற்றுக்கருத்துக்களே அரங்கேறும் என்று களிப்பெய்துகிறேன். (பின்னூட்டம் என்ற சொல், FEEDBACKஎன்ற ஆங்கிலச்சொல்லின் தாக்கம் உள்ளதால் மட்டுமன்றி, என் பின்னால் நின்று எதை ஊட்டினாலும் நான் ஏற்பதில்லையாதலாலும் தவிர்க்கமுடியாதநிலையால் அச்சொல் தவிர்க்கப்படுகிறது.)

இந்த வலைத்தளத்தின் அத்தியா"வசிய"த் தேவைக்காக, சில பதார்த்தங்கள் கி.பி.2008ம் ஆண்டு திருடப்பட்டன. அவையாவன:
(தி.ப.இ. :- திருடப் ட்ட டம்)
1] தலைப்பு- காலப்பெருங்களம்.
தி.ப.இ:- எட்டயபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்
சுப்பிரமணியத்தின் வீடு.
2] தஞ்சைப்பெரியகோயில் விமானம்.
தி.ப.இ:- தஞ்சைப் பெரியகோயில் விமானம்.


இந்த ஒருவருட காலமாக, தெரிந்தோ தெரியாமலோ என் எழுத்துக்கள் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், எந்தச் சகோதர / சகோதரியாவது என்பதிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், தயவு செய்து என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற வார்த்தையை, என்னிடம் எதிர்பார்த்தால், அதனால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். "உன் எழுத்து மற்றவர்களை எந்தவகையிலாவது பாதிக்கும் போது தான், அது வெற்றி பெறுகிறது" என்பதை, ஒருநாள் என் முன் தோன்றிய ஒரு மகான் திருவாய்மலர்ந்தருளினார்.
(அப்போது நான் கண்ணாடியின் முன் நின்றேன் என்பது இங்கு தேவையில்லாத விடயம்!)

ஆதித்தன்
27-01-2009.