பாரதியாரை நேரில் கண்டவர்கள் எவராவது இருப்பார்களா என்று பலவருடம் தேடியலைந்திருக்கிறேன். எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடும் பாண்டிச்சேரியில் உள்ள பாரதி நினைவகமும் போகும் போதெல்லாம் அவரைச் சந்தித்த மனிதர்களில் ஒருவரையாவது பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் உருவாகும். பாரதியாரை தன்னுடைய பள்ளிவயதில் பார்த்துப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற முதியவரைப் பற்றி அறிந்த போது உடனே காண வேண்டும் என்ற வேட்கை உருவானது.
நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் உள்ள பழைய வீடொன்றில் உள்ளே மர நாற்காலியில் அமர்ந்தபடி. பாரதியாரை தான் பார்த்துப் பழகிய தன்னுடைய பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பேசினார் 90 வயதைக்கடந்த கல்யாண சுந்தரம். 1999 ல் நடந்த இந்தச் சந்திப்பின் இரண்டு ஆண்டுகளில் அவர் காலமானார். அந்த சந்திப்பின் வரிவடிவம்.
தூரத்துமலைகளின் நிசப்தம் நிரம்பிய விசிபுரம் எனப்படும் விக்கிர சிங்கபுரம். வயல்களின் செழுமை காணுமிடமெல்லாம் பச்சையாக விரிந்து கிடக்கிறது. மேகங்கள் சிதறிய வானம். தென்னைகள் நிரம்பிய நிலவளம். ஆற்றோட்டத்தின் வற்றாத நீர்வளம். அதிக பரபரப்பு இல்லாத மென்மையான வாழ்க்கை.
கல்யாண சுந்தரம் பற்றிக் கேள்விபட்டு அவர் வீடு தெரியாமல் தேடி அலைந்த போது கோவிலின் முன்பாக இருந்த வயதான நபர் யாரைத் தேடுகிறீர்கள் என்று சுத்தமான அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் கேட்டது வியப்பாக இருந்தது. அந்த மனிதர் சட்டை கூட அணிந்திருக்கவில்லை. நாலு முழ வேஷ்டியும் அருவிக்கரை துண்டும் போட்டு இருந்தார்.
கல்யாண சுந்தரம் என்றதும் எந்தக் கல்யாண சுந்தரம் என்று ஆங்கிலத்திலே தொடர்ந்தார். விபரம் சொன்னதும் அப்படி ஒருவர் இருக்கிறாரா என்று தெரியாது எதற்கும் கேட்கலாம் என்றபடியே தனது பையன் அமெரிக்காவில் இருப்பதால் தான் சில வருடம் அமெரிக்கா சென்று இருந்ததாகவும் தற்போது ஊரிலே தங்கிவிட்டதாக சொன்னார். கல்யாண சுந்தரம் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை அவரது உறவினர்கள் திருநெல்வேலியில் வங்கியில் வேலை செய்கிறார்கள் என்றவுடன் கண்டுபிடிப்பது சுலபமாகயிருந்தது.
தன்னைப் பார்க்க வந்திருப்பவர் யார் என்று புரியாத குழப்பத்துடன் அருகில் வரச்சொன்னார். அருகில் அமர்ந்து விவரித்த போது உற்றுப்பார்த்தபடியே உங்களை பார்த்து இருக்கிறேனா என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். ஏதோ யோசனைக்குப்பிறகு என்னை எப்படி உங்களுக்குத் தெரியும். யாரு அடையாளம் சொன்னது? என்னிடம் கேட்டார்.
பாரதியாரைப் பற்றி படிச்சிருக்கேன். பாரதியாரோட பழகின யாராவது ஒருத்தரை நேர்ல பாக்கணும் ரொம்ப நாள் ஆசை. அப்படி விசாரிச்சிகிட்டு இருக்கும் போது உங்களைப் பத்தி சொன்னாங்க. ஆனா முகவரி கிடைக்கலை. அதைத் தேடி பிடிச்சி வர்றதுக்குள்ளே ரெண்டு மாசமாகி போச்சி என்றேன்.
என்னை உற்று நோக்கியபடியே உங்களுக்குப் பாரதியாரை ரொம்பப் பிடிக்குமா ? என்று கேட்டார். மனம் பின்னோக்கி செல்லத்துவங்கியது.
என்னோட பள்ளி வயசில பாரதியாரை வாசிக்க ஆரம்பிச்சேன். அந்தக் கவிதைகளை வாசிக்க வாசிக்க உடம்புக்குள்ளே விறுவிறுனு ஏதோ செய்யுது. திடீர்னு உலகத்து மேலே கோவம் வருது. வீட்ல சொல்லிக்குடுத்த தேவாரம் திருவாசகம் எல்லாத்தையும் விட பாரதியார் மேல பெரிய ஈர்ப்பு உருவானது.பாரதியாரைப் படிக்கிறது வெவ்வேறு வயசில வெவ்வேறு அனுபவம் குடுத்திருக்கு. கல்லூரி நாட்களில் எப்பவும் என் பைக்குள்ளே பாரதியார் கவிதைகள் புத்தகமிருக்கும். பல முறை எட்டயபுரத்துக்குப் போயிருக்கேன். எங்கோ அந்த ஊரோட ஆழத்தில பாரதியாரோட எலும்புகள் முணங்கிக்கிட்டு இருக்கிற மாதிரி சப்தம் கேட்டிருக்கு. என்னோட ஆதர்சனங்களில் பாரதியாரும் ஒருத்தர் என்றபடியே அவரிடம் நீங்க பாரதியாரை எப்போ பாத்தீங்க என்று கேட்டேன்.
அவரும் தன் நினைவில் ஆழ்ந்து போனபடியே சொன்னார் . 1919 ம் வருஷம் பாரதியார் கடையத்துக்கு வந்தாரு. அப்போ நான் சின்னப் பையன். புதுசா எது வந்தாலும் வேடிக்கை பாக்கிற மாதிரிதான் பாரதியாரையும் வேடிக்கை பார்க்கப் போனோம். அவர் மனைவி செல்லம்மா வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அவர் மனைவியோட சகோதரர் அப்பாத்துரை தான் பாரதியாரை கவனிச்சுக்கிட்டு இருந்தார்.ரொம்ப மிடுக்கான ஆளு, குரல் கார்வையா இருக்கும். தெருவிலே நேரே நடந்து மிலிட்டரிக்காரர் மாதிரிப் போவாரு. சாயங்காலமாச்சுன்னா கல்யாணியம்மன் கோயிலுக்குப் போவாரு... அவருக்கு அக்ரஹராத்தில மதிப்பே இல்லை. யாரோடயும் சேரவும் மாட்டாரு... அவங்களும் இவரை ரொம்பத் தாழ்வாதான் நடத்தினாங்க. என்று விவரித்தபடியே மௌனத்தில் ஆழ்ந்து போனார்.
அதைப் பத்தி நானும் வாசித்திருக்கிறேன். பாரதியார் நல்லா பாடுவார்னு நாமக்கல் கவிஞர் தன் புத்தகத்திலே ஒரு சம்பவத்தை எழுதியிருக்கிறார். அதிகாலையில் எழுந்து பாரதியார் பாடுனதை அவர் கேட்டதாகவும் அது மிகசிறப்பாக இருந்தாகவும் வருது. நீங்க அவர் பாடி கேட்டு இருக்கீங்களா?
இல்லை என்று மறுத்தபடியே சொன்னார்.
அப்போ நான் ரொம்பச் சின்னப் பையன். அக்ரஹாரத்தில இருந்த எல்லாருக்கும் நல்லாப் பாடத் தெரியும். ஆனா.. பாரதியார் பாடி நான் கேட்டதில்லை. தனியா மலைப்பக்கம் போயி உட்கார்ந்துகிட்டு அவரா பேசிகிட்டு ஏதையாவது சொல்லிகிட்டு இருக்கிறதை பாத்து இருக்கேன். அப்போ அவரைப் பத்தி அதிகம் தெரியாதில்லையா. அதனாலே ரொம்பப் பழக முடியலை. ஆனா இப்போ ரேடியோவில பாரதியார் பாட்டு போடுறப்போ.. நிறைய தடவை என்னை மீறி அழுதிருக்கேன். இப்பேர்பட்ட மனுசனை நாம நேர்ல பாத்து இருக்கமேனு.. மனசுக்குள்ளே சந்தோஷமாவும் இருக்கு. நெல்லைல அந்தக் காலத்தில ஊர்வலம் போறவங்க கூட பாரதியார் பாட்டைப் பாடிகிட்டு போனாவங்க. கேட்டா அது நம்ம மனசில அப்படியே வந்து ஒட்டிகிடும்.
அது நிஜம் என்பது அவரது பார்வையிலே தெரிந்தது. மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் அவரைப் பத்தின ஞாபகங்களைச் சொல்லுங்க என்றேன்.
ஒரு நாள் ஊருக்கு வெளியில ஒரு கழுதைக் குட்டி படுத்துக் கிடந்தது. கழுதைக் குட்டி கிட்டே போய் பாரதியார் உட்கார்ந்துகிட்டு அதைத் தடவித் தடவி விட்டுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருந்தாரு. சின்னப்பிள்ளைகளுக்குத் தர்ற மாதிரி முத்தமெல்லாம் குடுத்தாரு. பார்க்கிறவங்க இந்த ஆளுக்குப் புத்தி கெட்டு போச்சுன்னு சொல்லிக்கிட்டுப் போனாங்க. இவரு அதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை என்றபோது குறுக்கிட்டு கேட்டேன் "உங்களுக்கு அப்போ வயது என்ன இருக்கும்?".
பள்ளிக்கூடத்தில படிச்சுக்கிட்டு இருக்கேன். பத்து, பனிரெண்டு வயசு இருக்கும். பாரதியாரோட மக சகுந்தலா நான் படிச்ச ஸ்கூல்ல சின்ன வகுப்பிலே படிச்சுக்கிட்டு இருந்தா... நான் பாரதியாரைப் பார்க்கப் போனா வீட்டில திட்டுவாங்க.. யாருக்கும் தெரியாமத்தான் போயி பார்ப்பேன். என் வயசு பையன்க நாலஞ்சு பேர் தினம் போயி அவரைப் பாத்து பேசுவோம். அவரு எங்களைக் கூட்டிக்கிட்டு ஊரைவிட்டு வெளியே வந்து மலையடிவாரத்தில் உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பாரு.அக்ரஹராத்தில இருந்த ஆட்கள் அவரைக் கண்டா முகத்தைத் திருப்பிகிடுவாங்க. அப்பாத்துரை மட்டும் தான் அத்திம்பேர்னோ, ஓய் பாரதின்னோ கூப்பிட்டுப்பேசுவார்.
பாரதியார் தினம் கடுதாசி எழுதுவார். அதை தபால்ல சேர்க்க வேண்டியது எங்க வேலை. அவருக்கு கஞ்சாப் புகைக்கிற பழக்கம் இருந்துச்சு. அதை ஏற்பாடு பண்றதுக்கு ஆறுமுகம்னு ஒருத்தன் இருந்தான். புகைகுழல் ஏற்பாடு பண்ண, வீட்டுக் கிணற்றில இருக்க தண்ணிக்கயிற்று நுனியை வெட்டி எடுத்துக்கிடுவாரு. அது சன்னமா இருக்கும். அதை மெல்லுசாப் பொசுக்கி அதை ஈரத்துணியிலே சுத்தி ஏற்பாடு செய்வாங்க. புகைக்க புகைக்க அவர் கண்ணு துடிச்சுக்கிட்டேயிருக்கும். செவசெவனு பாக்கவே பயமா இருக்கும். ஆனா குழந்தை மாதிரி பேசுவார் எப்பவாவது அவர் கவிதைகளைப் பாடுவாரு. எழுதி வச்சதப் பாடுறாரா, இல்லை இப்போதான் புனைஞ்சு பாடுறாரான்னு தெரியாது. ஆனா எதுக்க இருக்க ஆள் அவர் குரலைவிட்டு விலக முடியாம இருக்கற மாதிரிப் பாடுவாரு என்று விவரித்தார்.
அவரோட கவிதைகளை அப்பவே வாசிச்சு இருக்கீங்களா? என்றதுமஸ்வதந்திர கீதங்கள், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு போன்ற பொஸ்தகங்களை எல்லாம் நாலணாவிற்கு விற்பாரு. நாங்க வாங்கிப் படிப்போம். இப்போ அவர் புஸ்தகத்தை 60 ரூபா, நூறு ரூபான்னு விக்கிறாங்களே எதுலயும் அப்பிடிச் சுத்தமா பதிப்பிச்ச கவிதை இருக்காது என விளக்கம் சொன்னார். தினசரி பாரதியாரைப் பார்ப்பீங்களா? அவரோட யாராவது நண்பர்களா இருந்தார்களா என்று கேட்டதும் கல்யாணசுந்தரம் தன் நினைவில் அமிழ்ந்தபடியே, ஆறு மாசம் இருக்கும். தினம் பார்ப்போம். அவர் அக்ரஹாரத்தில இருந்தாலும் அதுக்குக் கட்டுப்பட்டு நடக்கலை. நல்ல மீச வச்சிருந்தார். அல்பெர்கா கோட்டு, விறைப்பா கையை வெச்சுக்கிட்டு நடப்பாரு. அவர் நடந்து போகும்போது சில பேர் அவர் முன்னாடியே, பிரஷ்டன்... பிரஷ்டன்னு சொல்லி விலகிப் போறதப் பாத்திருக்கேன். யாரும் அவருக்கு மதிப்புக் குடுக்கலை. கொஞ்சநாள் அவரை அக்ரஹாரத்துக்குள்ளவே சேத்துக்கலை. வெளியே ஒரு இடத்தில தனியா இருந்தாரு. வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு கொடுத்திட்டு வருவாங்க. சில நாள் சலவை தொழிலாளி வீட்ல கூடச் சாப்பிடுவார். அவருக்குப் பேதம் கிடையாது.
ஒரு நாள் பாரதியார் இன்னைக்குச் 'சாகாமல் இருப்பது எப்படி?' ன்னு சொற்பொழிவு செய்யப் போறாருன்னு தண்டோரா போடச் சொன்னாரு. நிறைய கூட்டம். அங்கே வந்து நின்னுகிட்டு.நீங்க எல்லாம் உயிரோட இருந்து என்ன பிரயோசனம்னு சொல்லுங்க நான் சாகாமா இருக்கிறது எப்படினு சொல்லித்தர்றேனு சொன்னாரு. கூட்டத்தில ஒரே சலசலப்பு. பாரதியார் கூட்டத்தைப் பாத்துக்கிட்டே, ' ஜெயபேரிகை கொட்டடா' பாட்டைப் பாடினாரு. கண்ணு அப்பிடி அம்பு மாதிரி கூர்மையா இருக்கு. கொட்டடா, கொட்டடான்னு அவர் சொல்ற வேகத்தைக் கேட்ட தண்டோரா போடுறவன் நம்மளைத்தான் சொல்றாரு போல இருக்குன்னு நினைச்சு நிஜமாவே தண்டோராவை அடிச்சான்.அவ்வளவு வீரமாப் பாடுவாரு. அந்த குரல் மனசிலயே இருக்கு.
அவருக்குப் பொய் பேசினா பிடிக்காது. திட்டுவாரு. கோபப்பட்டு எதாவது செய்துட்டாலும் பிறகு மன்னிப்புக் கேட்டுக்கிடுவாரு. வயது வித்தியாசம் பாக்காம மன்னிப்புக் கேட்டுடுவாரு. அவரோட மதிப்பு அன்னைக்கு எனக்குத் தெரியிலே. வீட்டுல திட்டுவாங்கன்னு பயந்துகிட்டே பழகுவோம்.
யார்கிட்டயும் நிமிர்ந்து பாத்துதான் பேசுவாரு. அவரு தெய்வத்தை வேண்டுறபோது எதிரே நிக்கற மாதிரிதான் அம்மா... சக்தினு உரக்கச் சொல்வாரு. எல்லாத்துலயும் அவருக்கு சக்தி இருக்கிறமாதிரிதான்சொல்வாரு.
அவர்கிட்டே ரொம்ப நாளா யானையோட விளையாடுற பழக்கம் இருந்துச்சு. கோவில்ல இருந்த யானைகிட்டே போயி, பாகன் கிட்டே காசு குடுத்துட்டு யானையைத் தொட்டுப் பாக்கட்டா' ன்னு கேப்பாரு. அதுக்கு என்ன, பாருங்க சாமின்னு சொல்வான். தும்பிக்கையைச் சுத்தி கையைப் போட்டுக்கிட்டு முத்தம் குடுப்பாரு. சில சமயம் பல்லுல மெல்ல அதைக் கடிப்பாரு. அதுக்கு வலிக்கவா போகுது .விளையாடிகிட்டேயிருப்பார். அதுதான் பின்னாடி அவருக்கு வினையா வந்துச்சு. யானைன்னா ஆச்சரியமா பார்ப்பாரு. சின்னப்பிள்ளை மாதிரி என்றார்.
கல்யாணசுந்தரம் பேச்சின் ஊடே யாரோயோ அழைத்து காபி கொண்டு வரச்சொன்னார். வீட்டிலிருந்த ஒரு பெண் எங்கள் பேச்சை உன்னிப்பாக கவனித்தபடியே நின்று கொண்டிருந்தார். உங்களோட குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க? என்றேன்.
நான் 'குற்றாலக் குறவஞ்சி' எழுதின திரிகூடராசப்பக் கவிராயர் வம்சாவழியில பிறந்தவன். நாடகம், கவிதை, கதையெல்லாம் எழுதியிருக்கிறேன். பாரதியார் மேல கூட கவிதைகள் பாடியிருக்கேன். இப்போ எனக்கு 92 வயசாகுது. கல்கியில அந்தக் காலத்துல 'கண்ணா மூச்சி'ங்கற என் கதை பரிசு வாங்கியிருக்கு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு அரசாங்க வேலைக்குப் போயிட்டேன். பாரதியோட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சது என் வாழ்க்கையில பெரிய பாக்கியம். யாருக்கு அது கிடைக்கும் என்றார்.
புதுமைப்பித்தனைத்தெரியுமா? என்று கேட்டேன். அவரது முகம் இறுக்கம்கலைந்து இயல்பானது.
அவரு எனக்கு சொந்தக்காரர்தான். பார்த்ததில்லையே தவிர கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகளைப் படிச்சிருக்கிறேன். புதுமைப்பித்தனை விருத்தாசலம்னு சொன்னாத்தான் இங்க பலருக்கும் தெரியும். அவுங்க அப்பா தாசில்தார். பெரிய ஆராய்ச்சியாளர். புஸ்தகமெல்லாம் எழுதியிருக்கிறாரு என்றபடியே வீட்டிலிருந்த பெண்ணிடம் விருத்தாசலம் வீடு திருநெல்வேலியில் எங்கே இருந்தது என்று விசாரிக்கத் துவங்கினார்.
காபி வந்தது. அந்த பெண் அய்யாவுக்கு பழசு எல்லாம் அப்படியே ஞாபகமிருக்கும். நீங்க கேளுங்க என்று என்னிடம் சொன்னார். இப்போ பாரதியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்றேன்.அவர்கூட கொஞ்ச காலம் பழகினதுக்கு எனக்கே இந்த மரியாதை கிடைக்குதுன்னா பாத்துக்கோங்க. எல்லாம் தெய்வ சித்தம் என்றபடியே கண்களை மூடிக்கொண்டார்.
சற்றே தயக்கத்துடன் உங்க கையை நான் தொட்டுப் பாக்கலாமா? என்று கேட்டேன். புரியாதவரைப் போல எதுக்காக என்றார். பாரதியாரைத் தொட்டு இருக்கீங்கல்லே அதான். என்றதும் அவராக என் கைகளை எடுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டார்.
நடுங்கிக் கொண்டிருக்கும் அந்த வயசாளியின் கைகளில் இருந்த வெம்மை என் உடலினுள் பரவுகிறது. கண்ணுக்குத் தெரியாத மகாகவிஞனின் கரத்தைத் தொடுவது போன்ற மன நெருக்கமும் சந்தோஷமும் உண்டானது. சில நிமிசங்களில் அவரது கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது. பேச்சற்ற மௌனத்தில் இருவரும் அமர்ந்திருந்தோம். இவரது மனதிலும் பாரதியார் மெல்லத் ததும்பிக் கொண்டிருந்தார். அந்த மௌனத்தைக் கலைக்காமல் அங்கிருந்து விடைபெற்றுத் திரும்பி வந்துவிட்டேன்.
மௌனத்தைக் காப்பாற்றுவது எளிதானதில்லை என்று எனக்குத் தெரியும்.
- எழுத்தாளர் ராமகிருஷ்ணன் [http://www.sramakrishnan.com/]