என் வானிலே.....

பிற்பகல் 1:03

எங்கும் பரந்து நிரம்பிக்கிடக்கிறது வானம். ஏதுமற்ற ஒன்று எப்படி எல்லாமாக முடியும் என்பதற்கான விடை கண் முன்னே விரிந்து கிடக்கிறது! உச்சிக்கொம்பிலிருந்து வான்பார்க்கும் குருவியைப்போல பல நாட்கள் அதையே பார்த்துக் களித்திருக்கிறேன். என் இரவு பகல் வேளைகளும் சிலவேளை வான்பார்த்தலில் கழிந்திருக்கின்றன.

பெரும்பாலும் பகலில் காகங்கள் ஆட்சிசெய்யும் வானம் கொழும்பினுடையது.
பருத்தித்துறை இரவுகளை மாம்பழம்தேடும் வௌவால்களோடு, சில உலோகப்பறவைகளும் சுற்றின. ஊரில் பின்னேரத்தில் உலாப்போகும் கோழிகுஞ்சுகளை கைப்பற்ற பருந்துகளும் வான்மீது உலாத்தும். "பருந்து மூன்று தரம் சுத்திப்போட்டு அப்பிடியே கீழபாய்ஞ்சு கோழிக்குஞ்சை லபக் என்று பிடிச்சுக்கொண்டு போயிடும்." என்று பாட்டிமார் பேரக்குழந்தைகளுக்கு சொன்ன கதை ஞாபகம்.

வடிவம் அற்ற ஒரு வடிவமாய் உலாவரும் முகில்களில் இருக்கும் அழகு பெண்களில் கூட இல்லாதது. வெண்ணை திரண்டதைப்போல வானமெங்கும் சில நேரம் நிரம்பி நிற்கும்.சில நேரம் ஒன்றுமே இருக்காது. எந்தவொரு காட்சியும் ஒன்றை ஒன்று ஒப்பிடமுடியாத அளவு, ஈர்த்தெடுக்கும்.

பௌர்ணமிஇரவுகளில் ஊரில் வாழ்ந்த காலங்கள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. பிள்ளையார் கோயிலில் சாமப்பூசை மணிஅடித்து ஓய்ந்தபிறகுதான், அண்டைவீட்டு பெண்கள் சிலர் வம்பளக்க வருவார்கள். அம்மம்மாவின் மடியில் இருந்துகொண்டு, ஊட்டுவதை தின்று கொண்டு அப்போதும் வான் பார்ப்பேன். மாமரக்கிளைகளூடாக நிலவொளி விட்டுவிட்டுப் பாயும். சிலநேரம் புட்டு, சில நேரம் இடியப்பமும் சொதியும். யாழ்ப்பாணச்சமையலில் உறைப்புக்கு பஞ்சம் வந்த சரித்திரம் கிடையாது. எனக்கு சொல்லப்படும் கதைகளில் வரும் மாந்தர்கள்
அந்த நிலவுவானத்தில் உலவுவார்கள். நரி வரும். முயல் வரும். வடைதிருடும் காகம் வரும். ராசாக்கள் வருவினம். இப்பிடி எத்தனையோ!!

வானம் என்றால் விமானம் இல்லாமலா? சிறுவயதில் வான்பார்த்துகொண்டிருந்த என்னை, மண்குழிக்குள் பதுங்கவைத்த பெருமை விமானங்களையே சாரும். அது தவிர, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சொந்தக்காரர்களை வழியனுப்பப் போகும்போது, பயணியர்விமானங்களை ஓரளவு அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. "நாங்கள் எப்ப பிளேனில போவம்?" எண்டு அம்மாவை நச்சரித்த நாட்களும் உண்டு.
எவ்வளவோ நாட்கள்தான் கீழே இருந்து அண்ணாந்து வானத்தைப்பார்ப்பது?

அன்று, விமானத்தில் ஏறியபோது, பயத்தைக்காட்டிலும் வானத்திலிருந்து பார்த்தால் வானம் எப்படியிருக்கும் என்ற ஆவலே மிஞ்சிநின்றது. அதிஷ்டவசமாய் யன்னலோர இருக்கை வேறு. விமானம் கிளம்பி மேகங்களை கிழித்துக் கொண்டு பாய்ந்து, பின்பு நேராகப் பறந்தது. யன்னலுக்கு வெளியே வெள்ளைவெள்ளையாய் பஞ்சுப்பொதிகளை நிரப்பி வைத்திருப்பதைப் போல தோன்றியது. ச்சே!இவ்வளவுதானா? இதைவிட பூமியில் இருந்து ரசிப்பது எவ்வளவோ பரவாயில்லை.

எவ்வளவு நேரம்தான் இந்த பஞ்சுப்பொதிகளையே பார்த்துக்கொண்டிருப்பது? அந்த நேரம் பார்த்து ஒரு விமானப்பணிப்பெண் வந்து ஏராளமாய் ஏதேதோ சொல்லி, தாராளமாய் புன்னகைத்தாள். வெள்ளைப்பஞ்சுவரிசையை விட அவள் பல்வரிசை ரசிக்ககூடியதாய் இருந்ததென்று சொன்னால், நீங்கள் ரசிப்பீர்களோ தெரியவில்லை.

ஆதித்தன்.
09-01-2009

8 comments:

நிமல்-NiMaL சொன்னது…

//வெள்ளைப்பஞ்சுவரிசையை விட அவள் பல்வரிசை ரசிக்ககூடியதாய் இருந்ததென்று சொன்னால், நீங்கள் ரசிப்பீர்களோ தெரியவில்லை.//

நிச்சயமாக ரசிப்போம்.... :)

ஆதித்தன் சொன்னது…

:-D

மெல்போர்ன் கமல் சொன்னது…

வடிவம் அற்ற ஒரு வடிவமாய் உலாவரும் முகில்களில் இருக்கும் அழகு பெண்களில் கூட இல்லாதது. வெண்ணை திரண்டதைப்போல வானமெங்கும் சில நேரம் நிரம்பி நிற்கும்.சில நேரம் ஒன்றுமே இருக்காது. எந்தவொரு காட்சியும் ஒன்றை ஒன்று ஒப்பிடமுடியாத அளவு, ஈர்த்தெடுக்கும்.//

ஆதித்தா உயர்வு நவிற்சி அணி நன்றாக உள்ளது... தமிழைக் கரைத்துக் குடித்து விட்டீர்கள் போல... முந்தி 1994/1995 களில வானத்திலை மிக். சுப்பர் சொனிக் குண்டு போட வாற நேரம் என்ர அம்மம்மா பருந்து வருது ...பங்கருக்க ஓடுங்கோ என்று சொல்லுவா.. அதோடை வயதானோர்.....உந்தக் குண்டு போட வாற பிளேனைப் பிராந்து./ பருந்து என்று சொல்லுவதாகவும் கேள்வி!.... தொடருங்கோ.... நன்றாக இருக்கின்றது....

ஆதித்தன் சொன்னது…

அன்பின் கமல்,
நன்றி!
இருபொருள்பட சொவது சிலேடை!
மற்றப்பொருளை நீங்கள் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி!

vithushanan சொன்னது…

வானத்தைப் பற்றிய பிரமிப்புகளும், 'வானம் இத்தன்மையது' என்று முடிவுகட்டும் முயற்சிகளும் ஆதி முதற்கொண்டு எல்லோர் மனதிலும் ஒரு மூலையில் இருந்துவந்தாலும் அவ் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர்கள் மிகச்சிலர்.

நண்பா! வாழ்த்துக்கள்...! ஒரு தரம்மிக்க படைப்பினைத் தந்ததற்காக...

ஆதித்தன் சொன்னது…

நன்றி நண்பா!

பால்குடி சொன்னது…

அருமையான சொல்லாடலின் மூலம் பழைய நினைவுகளை மீட்டிருக்கிறீர். மறக்கமுடியுமா அந்த நாட்களை? தொடர்ந்தும் எழுதுங்கோ.

ஆதித்தன் சொன்னது…

நன்றி பால்குடி!

கருத்துரையிடுக