நேற்றைக்கும் அப்பாலே நினைவு

PM 8:41

சுவாலை முன்னால்
ஒழுகிவந்த கவிதையோடு
கண்ணீரும் உப்புக்கரித்தே
கலந்து கிடக்கும்.
வாழ்வின் வசந்த மலர்
காய்க்கும் முன்னே
கருக்கியது காலம்.

வண்ணத்துப்பூச்சிகளை வன்புணரும்
எண்ணற்ற கோட்டான்கள்
எதிர் எதிரே குரல்கூவி
இரவுகளில் உலவிவர
கிழிக்கப்பட்ட தாவணியாய்
நாங்கள்.

விட்டில்களை விரும்பியுண்ணும்
சுவாலையாக காலம்.
விரியும் சிறகுகள் குரூரமாய்
பொசுக்கப்படுவதில்
யாருக்கு என்ன ஆனந்தம்
இருக்க முடியும்?
வெறும் நீறாய்ப் போகும்
அதன் வாழ்வில் எதுவும் மிஞ்சாது.
ஆறாத ரண ஊஞ்சல்மேல்
விதி ஆடும். விளையாடும்.

பேய்கூடும் பெருங்காற்றில்
புதர்முயல்கள் புதர்தாண்டா.
அறுந்த நிலவின்
ஆடுகிற எச்சங்கள்
மிதந்து மீள்வந்து மண்சேரும்.

சிவந்த நீரும்
சிதைந்த மானமும்
வரண்ட மண்ணைச் சேறாக்கும்.
கண்விழித்தே காண்கின்ற
கனவில்
கறையான்கள் ஏறி
கணப்பொழுதில் கருவறுக்கும்.

பச்சையிலை வேப்பமரம்,
பசுங்கிளிகள் மைனாக்கள்,
பாசி படர்ந்த கேணி,
பிசுபிசுக்கும் மண்வீதி
ஒன்றும் மிஞ்சாது
ஒரு சுவடும் எஞ்சாது.

வேனில் பருவத்தில்
அணில் குஞ்சைப்போல்
அழகான ராப்போதில்
முற்றத்துமணல் மீது
முகிழ்க்கின்ற முல்லைமணம்.
பக்கத்தில் நீயிருக்க
பாய்கின்ற எந்தன் மனம்.
சொர்க்கத்தைக் கொண்டுவந்து
சொரியவிட்ட காலம்போய்
மறைந்தது.
இனி அது உயிர்க்காதோ?
என்றெண்ணிக் காத்திருக்கும்
இன்னும் அந்த இளமுற்றம்.

இறந்துபோன குழந்தைகளும்
சிறகு உதிர்ந்துபோன
வண்ணத்துப் பூச்சிகளும்
மறந்துபோன கனவுகளாய்
மாறிப்போகும்.

இழந்துபோன சிறகுகளின் வண்ணம்
வெயில் பட்டுச்
சிதைந்துபோன ஓவியமாய்
காலக்கடலில் கரைந்து போகும்.

உத்தரத்தின் மேலிருந்து
பல்லி சொன்ன மொழிகள்
சரமகவி வரிகளாகப் போயின.
பல ஆண்டுகளாய் அப்படியே
தேய்ந்து கிழித்தலுற்ற
தாவணியின் கரைப்பூக்கள்
இன்னும் அத்திகைப்பில்
இருந்து விடுபட்டிருக்காது.
ஆனாலும்
குருவி செத்துப் போன பின்பும்
கூடழுது என்ன பயன்?

உயிரோடிருந்திருந்தால்….
பனைமரத்துக்கு அப்பாலே
கருநீலவானத்து நட்சத்திரங்கள்
விட்டு விட்டு ஒளிர்வதை
எங்கள் பிள்ளைகளுக்கு
காட்டியிருப்போம்.
சோறு குழம்போடு
சொல்கூட்டிக் கதை சொல்லி
வேறோர் உலகத்தில்
இன்னும் வாழ்ந்திருப்போம்.

- ஆதித்தன்

3 comments:

Nila Loganathan சொன்னது…

கிட்டத்தட்ட ஆறு மாத காலங்களுக்கு பிறகான பதிவு... மீண்டும் பதிவுப்பக்கம் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி...!
ஏற்க்கனவே சுவைத்த கவிதை என்றாலும் பதிவாகப் பார்க்கையில் அருமைத்தன்மை கூடுதல் . கடைசி வரி அழுத்தம் ..!

முடிஞ்சால் அடிக்கடி எழுதுங்கோ...:-)

Nila Loganathan சொன்னது…

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பதிவு எழுதியிருக்கிறியள்..... மீண்டும் பதிவுப்பக்கம் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...!
ஏற்கனவே சுவைத்த கவிதையாக இருந்தாலும் பதிவாக பார்க்கும் போது அருமைத்தன்மை கூடுதல், இறுதிப பந்தி அழுத்தம்!

முடிஞ்சால் அடிக்கடி எழுதுங்கோ... :-)

ஆதித்தன் சொன்னது…

நன்றி தர்ஷாயணி. முயற்சிக்கின்றேன்.

கருத்துரையிடுக