தடுமாறும் தமிழினம்!

PM 9:51

தமிழறிஞர்கள், கவிஞர்களால் மட்டுமே தமிழ் வாழும் என்ற நிலை மாறி, இன்று உலகெலாம் பரந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களின் பங்களிப்பை எதிர்பார்த்து தமிழின் எதிர்காலம் நிற்கிறது. ஒவ்வொரு தமிழனுக்கும் இந்தக் கடப்பாடு இருக்கிறது. கிட்டத்தட்டஒன்பது கோடித்தமிழர்களில் இந்த நிலையைப்பற்றிச் சிந்திக்கின்றவர்களே மிகக்குறைவு என்பதே வருந்தத்தக்க உண்மை!

தமிழினத்தின் இன்றைய நிலையெண்ணி விம்மிக் கொதிக்கின்ற நெஞ்சங்களுக்கொரு ஆறுதலாக, தமிழை தம் உயிரென நேசிக்கின்ற மென்பொருளியலாளர்கள், இயக்குனர்கள், அறிவியலாளர்கள் போன்றவர்களின் வெளிவருகையும் அவர்களின் உணர்வார்ந்த செயற்பாடுகளும் தமிழின் எதிர்கால இருப்புக்கு அத்திவாரம் போட்டிருக்கின்றன. ஆனால் அத்திவாரங்கள் மாத்திரமே கட்டிடங்கள் ஆக முடியாது. உலகத்தமிழர் ஒவ்வொருவருக்கும் தமிழ் வளர்க்கும் பங்கு இருக்கின்றது.

மென்பொருளியலாளர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டுதிறனுடன் மென்பொருட்கள் அமைப்பதாலோ, இயக்குனர்கள் தமிழர்தம் பண்பாட்டுக் கோலங்களை திரையோவியங்கள் ஆக்குவதாலோ, அறிவியலாளர்கள் விஞ்ஞானக்கருத்துக்களை தமிழுக்குள் கொணர்வதனாலோ
உடனடியாக எதிர்காலப் பாதையின் மீதுள்ள முட்கள் அகற்றப்பட மாட்டாது.
வாழும் தமிழர்களின் அன்றாடவாழ்க்கைக்குள் தமிழ் நிராகரிக்கப்படுமாயின்
மேற்சொன்ன மொழிவளர்ச்சிப்பணிகளால் எந்தப்பயனும் இல்லை. பிற நாகரிக மோகங்களால் கட்டுண்டு கிடக்கின்ற பெரும்பான்மைத் தமிழர்சமுதாயம், தானே தன்னைக்கட்டிக்கொண்ட தளை அறுத்து மீளாவிடின், தமிழை ஓர் இருண்ட பாதைக்கு கைகாட்டி விடுகின்ற துரோகத்தனதுக்கு உடந்தையாகிப் போகக்கூடும்.

"என்ர பேத்தி இங்கிலீஸில வலு திறம்! தமிழ் கதைக்கிறதே இல்லை!" என்று பெருமை பேசுகிற எத்தனையோ (கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து, முந்தோன்றிய) 'மூத்த' தமிழ்க்குடிமக்களை நான் வெள்ளவத்தைக்குள் கண்டிருக்கிறேன். எங்கேயாவது விருந்துக்கு போன இடங்களில் "அங்கிளுக்கு இங்கிலீஷ்ல றைம் சொல்லிக்காட்டுங்கோ!" என்று பிஞ்சுகளுக்கு அறிவுறுத்துவதில் பெருமைகொள்கின்ற பெற்றோர்களை பார்த்திருக்கிறேன்.
குரக்கன் புட்டையும் இட்டலிதோசையையும் மறுதலித்து, 'பீசா'வுக்காகவும் 'பர்கர்'க்காகவும் ஒற்றைக்காலில் நின்று அழுதுகுழறி ஊரைக்கூட்டும் வருங்காலத்தமிழர்களின் கொள்கைப்பிடிப்புணர்வை அநுபவித்திருக்கிறேன்.
எந்த அளவுக்கு பிறமொழிக்கலாசாரம் எம்மிடையே ஊறிப்போய்க்கிடக்கின்றதென்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

வரலாற்றின் பக்கங்களை திரும்பிப்பார்க்கும் பொழுது, நெஞ்சம் வெந்துபோகிறது. தமிழுக்குள் வந்து கலந்த, இருபத்தைந்து சதவிகித சமஸ்கிருதத்தினால் மலையாளம் உருவாகி சேரநாட்டுத்தமிழர்கள் நம்மிடமிருந்து பிரிந்து மலையாளிகளானார்கள். ஐம்பது சதவிகித சமஸ்கிருதத்தினால் கன்னடர்கள் உருவாகி, பொன்னி நதியாம் காவிரியை தம்முடமை என்றார்கள். எழுபத்தைந்து சதவிகித சமஸ்கிருதத்தினால் தெலுங்கு பிறந்து ஆந்திரர்களாய் அந்நியப்பட்டார்கள். ஆக, இந்த வேற்றுமொழி ஊடுருவல்
இல்லாது போயிருப்பின், இன்றைய காலத்தில் ஏறக்குறைய இருபத்தைந்து கோடிபேர்களைக்கொண்டதாய், தமிழ்ச்சமுதாயம் திகழ்ந்திருக்கும். இன்று சாதாரணவிடயமாக கருதப்படும் மொழிஊடுருவலினால், எத்தனை கோடி தமிழ்ச்சகோதரர்களை இழந்திருக்கின்றோம் என ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள். காலத்தின் கரங்களால் இதே கதை மீண்டும் எழுதப்படலாம். இந்தப்போக்கு தொடர்ந்திடின், மீண்டும் ஒரு சமுதாய இழப்பை எம்மினம் எதிர்நோக்கும். எந்தச்சூழ்நிலையிலும் நம்முடைய இழப்புகளுக்கு நாம்தான் காரணமாயிருக்கிறோம்.

வடமொழிகூடக் கலவாத இனிய தமிழ்ப்பெயர்களை குழந்தைகளுக்கு பெற்றவர்கள் வைக்கவெண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்க, ஆங்கிலத்தில் தொடங்கி கிரேக்கமொழி வரை அலசி, அர்த்தம் தெரியாத கவர்ச்சிச்சொற்களை பெயரென்று இட்டுமகிழ்கின்ற பெற்றோர்பெருந்தகைகளை நோக்கி என் சுட்டுவிரல் குற்றம் சாட்டுகிறது. பிஞ்சுப்பருவத்திலேயே தமிழர்தம் பண்பாட்டுக்கோலங்களில் இருந்து குழந்தைகளை அந்நியப்படுத்தி, பிறநாகரிக அடிமைமோகம் ஊட்டுகிற நீங்கள், எந்த உரிமையை வைத்துக்கொண்டு உங்களை தமிழர்களாய் அடையாளப்படுத்திக்கொள்கின்றீர்கள்?

பிறமொழியறிவுத்தேடல் பிழையன்று. அது அவசியமானதும் கூட.
ஆனால் பிறமொழி நாகரிகத்தினுள் அழுந்திப்போய், தன்னிலை மறத்தலே கண்டிக்கத்தக்கது. எந்தவொரு செயலும் பதியப்பட்டு நாளைய வரலாறாகக்கூடிய இன்றைய காலகட்டத்தில், தம் நிலை மறந்த தமிழர்களின் வாழ்வு, வருங்காலத்தினருக்கு ஒரு தவறான முன்னுதாரணமாய் போய் விடக்கூடாது என்ற அச்சம் வேர் விட்டு வளர்கிறது.

தமிழ்மறந்து வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் மூலமாக, எதிர்காலத்தில், மாபெரும் பழமைப்பாரம்பரியம் மிக்க தமிழினத்திலிருந்து விலகல் உற்று அனாதைகளாக எம் இரத்தச்சொந்தங்கள் அலைவதற்கு உடன்படுகின்ற, அந்தக் கயமைத்தனத்தை கொன்றொழித்து, விட்ட பிழைகளைத் திருத்துவதற்காய் என் இருகை கூப்பி உங்கள் அனைவரையும் வேண்டி அழைக்கின்றேன். எட்டப்பராய்ப் போவதும், எழுந்திங்கு வருவதும் உங்கள் கையில்!!!

அன்புடன்,
ஆதித்தன்.
29-01-2008. கொழும்பு.

9 comments:

Nimal சொன்னது…

மிகத் தெளிவான கருத்துக்கள்...!

//தமிழறிஞர்கள், கவிஞர்களால் மட்டுமே தமிழ் வாழும் என்ற நிலை மாறி, இன்று உலகெலாம் பரந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களின் பங்களிப்பை எதிர்பார்த்து தமிழின் எதிர்காலம் நிற்கிறது.//
இதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்தல் அவசியம்...

//பிறமொழியறிவுத்தேடல் பிழையன்று. அது அவசியமானதும் கூட.
ஆனால் பிறமொழி நாகரிகத்தினுள் அழுந்திப்போய், தன்னிலை மறத்தலே கண்டிக்கத்தக்கது. //
நிச்சயமாக...

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

வணக்கம் ஆதித்தன்.
ஆதங்கத்துடனான பதிவைப் பார்த்துப் பெருமைகொள்கிறேன்.மறுபுறம் எம்நிலை எண்ணித் தலைகுனிகி்ன்றேன். இதுபற்றி பல தடவைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பேசிவருகின்ற போதும் தற்போதைய நிலையினர் ஆரோக்கியமான தமிழ்மொழியினின்று விலகிச்செல்லவே முற்படுகின்றனர். தாய் இறந்ததும் அம்மா என்று கதறி அழுகின்றவர்கள் அதற்கு முன்னதாக அப்படி அழைத்திருக்க மாட்டார்கள். வேதனைகளையும் அனுபவங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த மட்டும் செம்மொழி தேவைப்படுகிறது. மற்றவர்களிடத்தில் சுயகெளரவத்தைகாட்டிக்கொள்ளவும் தம்மை மேலானவர்கள் எனக் காட்டும் வெறிப்போக்கு காரணமாகவும் நாகரிகம் என்ற பெயரைச் சூட்டி இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். தமிழில் வார்த்தை பரிமாறி தமிழ்ச்சுவை அறிய இவர்களுக்கு ஆசையில்லை,மனமுமில்லை.
இது நாகரிகம் இல்லை. நாகரிகம் என்பது வெறும்பேச்சுவழக்கைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கக் கூடிய ஒன்றல்ல. மொழியறிவு அவசியமே தவிர தாய்மொழியை மறக்கும் தாற்பரியங்கள் ஏற்புடையதல்ல என்பதை நம்மவர்கள் உணரவேண்டும். தேவையான சந்தர்ப்பத்தில் தேவையான மொழியை உபயோகப்படுத்துவதன் மூலம் எமது திறனை உலகறியச்செய்ய முடியுமே தவிர தன்மொழியை மறப்பதனாலன்று.

//வாழும் தமிழர்களின் அன்றாடவாழ்க்கைக்குள் தமிழ் நிராகரிக்கப்படுமாயின்
மேற்சொன்ன மொழிவளர்ச்சிப்பணிகளால் எந்தப்பயனும் இல்லை. //

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
வளமுடைய தமிழ் நிறைவுடன் தொடரட்டும்.

ஆதித்தன் சொன்னது…

கருத்துக்களுக்கு நன்றி சகோதரர்களே!

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

//வாழும் தமிழர்களின் அன்றாடவாழ்க்கைக்குள் தமிழ் நிராகரிக்கப்படுமாயின்
மேற்சொன்ன மொழிவளர்ச்சிப்பணிகளால் எந்தப்பயனும் இல்லை//

தரமான எழுத்து...

இப்போதய பெற்றோர் தங்களது பிள்ளைகளை International school ல படிக்க வைக்கிரதுல ஆர்வமா இருக்காங்க அதுல பெருமயும் படுராங்க.. தமிழ் பிள்ளை ஒன்று ஆங்கிலத்தில ஆரம்ப கல்வியை தொடருவது என்பது அந்த பிள்ளையில அடிப்படையயே மாற்றும் என்பது எனது கருத்து....

King... சொன்னது…

கொஞ்சம் யோசிக்க வைக்கிறியள் அப்பு நல்லது
மற்றப்படி எங்கடை ஆக்களுட்டை தமிழ் இல்லாமப்போகுது அவை நாகரிக மோகத்துக்குள்ளை முழ்குகினம் எண்டு சொல்லி எல்லாரையும் திட்டாதையுங்கோ தமிழ் ஒருநாளும் சாகாது தம்பி அது அழியாத மொழி முதல்லை நாட்டில சந்தோசமா இருக்கிற வழியைப்பாருங்கோ பிறகு மொழியைப்பாக்கலாம்

ஆதித்தன் சொன்னது…

ஐயா! தமிழ் அழியாத மொழி, அழியாத மொழி என்று சொல்லும் நீங்கள்,
பல புலம்பெயர்ந்த தமிழர்தம்் குழந்தைகளின் தமிழ் துறந்த நிலையை
மறுக்க முடியுமா? இந்த தமிழ் மறக்கும் தன்மையை பெருமை எனக்கருதும்் வியாதி, பல புலம்பெயர் தமிழ்ப்பெற்றோரிடையே பரவி வருவதை மறுக்க முடியுமா?

இவையெல்லாம் தமிழ் பேசும்் தமிழர்கள் அருகி வருவதற்கான அறிகுறிகள் என
உங்களுக்கு புலப்படவில்லையா?
ஆயிரம் ஆயிரம் இன்னுயிர்களைக் கொடுத்து
எதிர்காலத்தில் நாம் விடுதலை அடையும் வேளையில், தமிழ் பேசும் இளம்சந்ததியை
பெருமளவு இழக்கப்போகும் அபாயத்தை ஏன் நினைக்க மறுக்கிறீர்கள்?

HK Arun சொன்னது…

உங்கள் எழுத்துக்களூடாக நீங்கள் சொல்லும் கருத்துக்கள், அதிலிருந்து தென்படும் கோபம், எதிர்ப்பார்ப்பு அனைத்தும் நியாயமானவை.

ஒரு சிறந்தப்பதிவு.

நன்றி!

HK Arun சொன்னது…

இதுப்போன்ற பதிவுகள் காலத்தின் அவசியம் என்றே நினைக்கின்றேன்.

தொடருங்கள் வாசிப்பதற்கல்ல, விழிப்புனர்வுக்காக.

நன்றி!

கருத்துரையிடுக